Published : 03 Nov 2017 10:01 AM
Last Updated : 03 Nov 2017 10:01 AM
கடல் எனும் பிரம்மாண்டத்துக்கு அடுத்து, இயற்கையின் கம்பீரமான ஆட்சி நடப்பது மலையும் வனமும் இணைந்த குறிஞ்சி, முல்லை நிலப் பகுதிகளில்தான். மலைகளையும் மலைத் தொடர்களையும் தேடிச்சென்று பார்க்கும்போதெல்லாம் நமது தலைக்கனம் தவிடுபொடியாகிவிடுகிறது. ஜென் துறவிகள் ஏன் இயற்கையின் மடியிலேயே அதிகமும் வாழத் தலைப்பட்டனர் என்பதை அங்கே செல்லும்போது உணர்ந்துவிடலாம். இயற்கையின் தரிசனங்களை, காலம் காலாவதி ஆக்க முடியாத ஹைக்கூ கணங்களாக அவர்கள் கவிதைகளில் வடித்துச் சென்றார்கள். ஒருமுறை நான் ஆனைமலைக்குச் சென்றபோது, இயற்கை எழுதும் பல ஹைக்கூக்களை அங்கே நேரடிக் காட்சிகளால் கண்டுணர்ந்தேன். எங்கே இருக்கிறது ஆனைமலை?
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களை ஒரு தாயைப் போல் பாசமுடன் அணைத்துக்கொண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. இதுமட்டும் இல்லாவிட்டால் நமக்குத் தென்மேற்குப் பருவமழை என்பதே கிடையாது. உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளுக்கு, வாய்ப்பு அமையும்போதெல்லாம் பயணித்திருக்கிறேன். கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடி சிகரம்தான் தென்னிந்தியாவிலேயே உயரமான இடம். அந்தப் பகுதிக்குச் செல்லும்போது காற்று குழல் வாசிப்பதை நீங்கள் கேட்கலாம். கணவாய் வழியே புகுந்து வரும் காற்றின் ஓசை, கலப்படம் செய்ய முடியாத தாய்ப்பாலைப்போன்ற இயற்கையின் இசை என்பேன்.
ஆனைமலை போன்ற பல மலை ஊர்களுக்குச் சென்றுவரும்போதெல்லாம் அங்கே வாழும் மலைவாழ் பழங்குடி மக்களின் இசைக்கருவிகளை வாங்கி ஸ்பரிசித்து, அவற்றை அங்குள்ள கலைஞர்களையே இசைக்கச் செய்து கேட்ட அனுபவங்கள் உண்டு. காட்டையும் மலையையும் கதைக்களமாகக் கொண்ட தமிழ்ப் படங்களில், அவர்களின் கருவிகளைப் பயன்படுத்தி இசையமைக்க முற்பட்ட முயற்சிகள் எதுவும் தமிழில் இல்லை. ஆனால், முக்கிய கதாபாத்திரங்கள் வாழும் நிலப் பகுதியில், கலாச்சாரரீதியாகப் பயன்படுத்தப்பட்டுவரும் இசைக் கருவிகளை வாசித்துக் கிடைக்கும் இசையை பயன்படுத்துவத்துவதன் மூலம், கதை மற்றும் கதாபாத்திரங்களின் வாழிடம் குறித்த நம்பகத் தன்மையைப் பார்வையாளரிடம் ஏற்படுத்த முடியும்.
மலையின் சித்திரத்தை வரைந்து காட்டிய பாடல்
அப்படி மலையின் வாழ்க்கையைத் தோராயமாகவேணும் நினைவூட்டுவதுபோன்ற இசை ஏதும் தமிழ்த் திரையில் இடம்பெற்றிருக்கிறதா என நான் எண்ணும்போதெல்லாம் என் காதுக்குள் மெல்ல ஒலிக்கத் தொடங்கும் ஒரே பாடல்..
‘ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு
குயில் கேட்குது பாட்டை நிண்ணு’.
- மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ஜானி’ படத்தில் இடம்பெற்று நீண்ட ஆயுளுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாடல். இரண்டு நாயகர்களில், நாயகியின் மனதில் இடம்பிடித்தவனுக்கு எதிர்பாராத நெருக்கடி. மலைவாழ் மக்களின் குடியிருப்புப் பகுதியில் ஒளிந்திருக்கும் அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள், அங்குவாழும் ஒரு பெண். எங்கிருதோ வந்தவனுக்கு, ‘உன் வாழ்க்கையைச் சூழ்ந்த மேகங்கள் விலகிச் செல்லும்’ என்று நம்பிக்கை தரும் வார்த்தைகளால் ஒத்தடம் தருகிறாள்.
அவள் காட்டும் இரக்கமும் அவன் காட்டும் நன்றியும் அங்கே இயற்கையின் இசையை ஊற்றெடுக்க வைக்கின்றன. தாளமும் குழலும் இணைந்த அம்மலையின் இசையென நம்மை நம்ப வைத்துவிடுகிறது ‘மண்ணின் இசை’க்கு அதிபதியான ராஜாவின் இசைக் கற்பனை. எஸ்.பி.சைலஜாவின் ஏக்கமான குரலில் காலத்தைக் கடந்து மனதை வருடியபடியிருக்கும் இந்தப் பாடல், இன்னும் வானொலிகளின் வழியே காற்றில் தவழ்ந்துகொண்டே, ஒலிக்கும் ஒவ்வொருமுறையும் மலையின் சித்திரத்தை நமக்கு வரைந்து காட்டி, ஓர் அடர்ந்த வனம்போர்த்திய மலையில் இருப்பதுபோன்ற உணர்வை நமக்குத் தந்துவிடுகிறது.
இதுபோல் இல்லாவிட்டாலும், மலை மக்களின் மாசுபடாத வாழ்க்கையைக் கூறும் ஒரு படத்துக்காகவாவது இசையமைத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் ‘நெடும்பா’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனைத் தேடி வந்தது.
கணினி இசைக்கு வெளியே ‘நெடும்பா’
‘வெங்காயம்’ படத்தை இயக்கியதன் மூலம் விமர்சர்கள், தமிழகப் பார்வையாளர்களின் பாராட்டுகளைப்பெற்ற ஈரோட்டு இளைஞர், ‘சங்ககிரி’ ராஜ்குமார். இவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘நெடும்பா’. வெளியுலகின் வாசனையை விரும்பாத, வனத்தையும் மலையையும் தங்கள் தாயாக வணங்கி, அவைதரும் வளத்தை மட்டுமே வைத்து வாழும் நோய் அறியா மலைவாழ் மக்களின் வாழ்க்கையைச் சுற்றிச் சுழலும் கதை. இயற்கையையே பல அடுக்குகள்கொண்ட அரண்களாக அமைத்து வாழும் அவர்களது காட்டு வாழ்க்கை தனித்துவமானது. படத்தின் காட்சிகளைக் காணக் காண, இந்தப் படத்துக்குப் பொருத்தமான வாழ்விட இசையைத் தர வேண்டும் என்று விரும்பினேன்.
அதற்காகப் பழங்குடி மக்களின் இசைக் கருவிகளிலிருந்து உருவாக்கப்பட்ட சேம்பிளர்களைத் தேடினேன். தென் ஆப்ரிக்கா, ஆஸ்ரேலியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் பழங்குடி மக்கள் இன்றளவும் பயன்படுத்திவரும் காற்றிசை மற்றும் தோல் இசைக் கருவிகளைக் கொண்டு ‘ட்ரைப் மியூசிக் சேம்பிளர்’ களைப் பல நிறுவனங்கள் தொகுத்து வெளியிட்டிருக்கின்றன என்பதுஅப்போதுதான் தெரிந்தது. அவற்றில் சிலவற்றை இணையம் வழியே கேட்டுப் பார்த்தும், ராஜ்குமார் உருவாக்கிய காட்சிகளுக்கு ஏற்றதாக இல்லை.
எனவே, படத்தில் கதாபாத்திரங்கள் பயன்படுத்திய பொருட்கள், கருவிகளை வைத்தே படத்துக்கான இசையை ‘லைவ்’ஆக உருவாக்கிவிடுவது என்ற இறுதியான முடிவுக்கு வந்தேன். இந்தப் படத்துக்கான பாடல் பதிவு, பின்னணி இசைப் பதிவு ஆகியவற்றுக்காக மட்டும் கணினியைப் பயன்படுத்துவோம் , மறந்தும் கீபோர்டையோ சேம்பிள் ஒலிகளையோ பயன்படுத்தப்போவதில்லை என்று இயக்குநரிடம் கூறியதும் அவர் படத்துக்காகப் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டுவந்துவிட்டார். எனது ‘கம்போஸிங்’ அறையும் வரவேற்பறையும் ‘நெடும்பா’வில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கருவிகளால் நிரம்பி வழிந்தன. அவற்றில் மூங்கில்கள், சுரைக்காய் குடுக்கைகள், பிரம்புத் தடிகள், மரத்தட்டுக்கள், தோல் கருவிகள் என மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடி மக்கள் பயன்படுத்தும் பல பொருட்கள் இருந்தன.
அவற்றிலிருந்தே மலை மற்றும் வனத்தின் தனிமை கலந்த தூய்மையைப் பிரதிபலிக்கும் விதமாகப் படத்துக்கான அடிப்படை தாளத்தை உருவாக்கினேன். காற்றின் ஆட்சி அதிகமாக இருக்கும் வாழிடம் என்பதால் காற்றிசையின் பங்கு ‘நெடும்பா’வுக்கு அதிகமாகத் தேவைப்பட்டது. எனவே, அவர் கொண்டுவந்திருந்த முற்றி வைரம் பாய்ந்த மூங்கிலை கைக்கு அடக்கமாக நானே சீவி ஒரு காற்றிசைக் கருவியை உருவாக்கினேன். அதற்கு இன்னும் பெயரிடப்பட வில்லை. ஆனால், அதை இசைத்து உருவாக்கிய இசை காட்டின் பேரமைதியை, அந்த அமைதிக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களை, அங்கே வாழ்பவர்களின் கோபத்தை, அவர்களின் அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது.
இப்படிப் பெயரிடப்படாத கருவிகளைக் கொண்டும், அங்கே வசிக்கும் மக்களின் குரல்களைக் கொண்டும் உருவாக்கிய ‘லைவ்’ இசை எனக்கு சேம்பிள் இசை வழியே கிடைக்கவில்லை. இதற்கு நேர்மாறாக சேம்பிள்களை அதிகம் பயன்படுத்தி நான் இசையமைத்த பாடலைக் கேட்டு எப்படி இவ்வளவு ‘லைவ் சவுண்ட்’ தர முடிந்தது என்று கேட்டார் எனக்கு நெருக்கமான இசை நண்பர். அதைப் பற்றி அடுத்தவாரம் பகிர்கிறேன்.
தொடர்புக்கு: tajnoormd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT