Published : 10 Nov 2017 09:29 AM
Last Updated : 10 Nov 2017 09:29 AM
முழுவதும் வெளிப்புறக் காட்சிகளை மட்டுமே கொண்ட ‘பக்கா’ என்னும் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா. “விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, சூரி, சதீஷ் உட்பட 36 நட்சத்திரங்களுடன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். பேரரசு, ராசு மதுரவன், கோடி ராமகிருஷ்ணா ஆகியோரிடம் 16 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம், முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்குப் படமாக இதைக் கொடுக்கத் தோன்றியது” என்று பேசத் தொடங்கினார்.
தலைப்பைப் போல் படமும் ‘பக்கா’வாக இருக்குமா?
நிச்சயமாக. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர்தான் முதல் பட வாய்ப்பு கிடைக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தி யாரும் செய்யாத முயற்சியைச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக முழுக்கவும் வெளியிடங்களிலேயே படப்பிடிப்பு செய்து உருவான முதல் படமாக இதை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு காட்சியில்கூட வீடு, கடை, அறை என ‘இன்டோர்’ எதிலும் படமாக்கவில்லை.
உள்ளரங்கக் காட்சியே தேவைப்படாத அளவுக்கு அப்படி என்ன கதை?
கிராமத்தை மையமாகக் கொண்ட பெரும்பாலான தமிழ்ப் படங்களில் ஒரு காட்சியிலாவது ஊரின் கோயில் திருவிழா வரும். ஆனால், இதில் முழுப் படமுமே திருவிழாதான். ஒவ்வொரு காட்சியிலும் இரண்டாயிரம் துணை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கோயில் திருவிழாக்களையும் அங்கே கடை போட வருபவர்களையும் மையமாக வைத்தே இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறேன்.
கோயில் திருவிழாக்களில் பொம்மைக் கடை போடும் ‘டோனிகுமார்’ என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்துற அளவுக்கு வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர். இவருக்கும் ‘ரஜினி ராதா’ங்கிற கதாபாத்திரத்தில் வரும் நிக்கி கல்ராணி, கிராமத்துத் தலைவரின் மகளாக வரும் பிந்து மாதவி, விக்ரம் பிரபுவோட நண்பர்களாக வரும் சூரி, சதீஷ், இந்த ஐந்து பேருக்கும் மத்தியில் நடக்கிற அலப்பறைதான் படமே. நிறைய பொழுதுபோக்குகள் விஷயங்கள் வந்துவிட்டதால் நம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை ‘பக்கா’வாகக் காட்டியிருக்கும் படமாக இது வந்திருக்கிறது. முழுக்க முழுக்க யதார்த்தமான காமெடி கலாட்டா இந்தப் படம்.
எந்த ஊர்க் கோயிலின் திருவிழாவைப் படமாக்கினீர்கள்?
படப்பிடிப்பு என்று வரும்போது நம் வசதிக்கு ஏற்ப எந்த ஊர் கோயில் திருவிழாவையும் பயன்படுத்த முடியாது. திருவிழாக்கள்தான் கதைக்களம் என முடிவு செய்ததும் தமிழ்நாடு முழுக்க இரண்டு வருடங்கள் அலைந்தேன். பல புகழ்பெற்ற கோயில் திருவிழாக்களுக்குப் போய் அவற்றின் பிரம்மாண்டம், அங்கே கடைபோட வரும் மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து கண்காணித்துத் திரைக்கதை எழுதினேன்.
இப்படி நான் போய்ப் பார்த்த ஐம்பதுக்கும் அதிகமான திருவிழாக்களில் சின்னச்சேலம் நைனார்பாளையம், பாண்டிச்சேரி அபிஷேகப்பாக்கம் ஆகிய இரண்டு ஊர்களிலும் அப்படியொரு பிரம்மாண்டத்தைக் கண்டேன். அபிஷேகப் பாக்கம் ‘ஆத்து திருவிழா’வில் சில காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். ஆனால், கள்ளக்குறிச்சி பக்கத்தில் இருக்கும் என் சொந்த ஊரான செம்படாக்குறிச்சியில் எங்கள் ஊர்க் கோயில் திருவிழாவைப் படப்பிடிப்புக்காகவே பிரம்மாண்டமாக நடத்தி அதில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கினோம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு பெரிய திருவிழாவுக்குப் போய்விட்டுவந்தமாதிரி ஃபீல் இருக்கும்.
திருவிழா செட் போட்டாலே பணத்தைத் தண்ணீர் போல செலவழிக்க வேண்டியிருக்கும். இப்படியொரு கதையைப் படமாக்க முன்வந்த தயாரிப்பாளர் டி.சிவக்குமார், இணைத் தயாரிப்பாளர் பி.சரவணன் இந்த இரண்டுபேருக்கும் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நிக்கி கல்ராணி ரஜினியாகவே மாறிவிட்டார் என்று செய்தி வந்ததே?
ஆமாம். ரஜினி நடித்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘முத்து’ படங்களைப் போட்டுப் பார்த்துவிட்டு அவருடைய ஸ்டைல், டயலாக் டெலிவரி என்று அசத்தி இருக்காங்க. ‘ரஜினி ராதா’ங்கிற கேரக்டர் பொய்யில்லை, நிஜமாகவே நான் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கிற ஒரு கேரக்டர். அந்தப் பாதிப்பில்தான் உருவாக்கினேன். நிக்கி கல்ராணிக்கு ‘மரகத நாணயம்’படத்துக்குப் பிறகு நல்ல இதில் பெயர் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT