Published : 25 Jul 2014 01:02 PM
Last Updated : 25 Jul 2014 01:02 PM
ராஜா ராணிக் கதைகளின் பிடியில் தமிழ் சினிமா இருந்தபோது பிரபலமாக இருந்த நகைச்சுவை நடிகர்கள் எளிய மனிதர்களின் வேடங்களில் மிக அபூர்வமாகவே நடித்திருக்கிறார்கள். இது நடிகர்களின் குற்றமல்ல, இயக்குநர்கள், கதாசிரியர்கள் ஆகியோரது குற்றம். காரணம் 1970-களின் இறுதிவரை எளிய மனிதர்களின் வாழ்க்கை கறுப்பு வெள்ளை சினிமாவுக்கு ஒவ்வாமையைத் தந்தது. இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில்தான் சுருளிராஜன் முகம் காட்டினார். 1965-ல் வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் சின்ன வேடமொன்றில் அறிமுகமானார். ஆனால் மூத்த நகைச்சுவை நடிகர்களின் பாதையிலேயே சுருளிராஜன் பயணப்பட வேண்டியிருந்தது.
பிறகு யதார்த்த சினிமாவின் பிதாமகர்களாகப் புறப்பட்ட மகேந்திரன், ருத்ரய்யா, பாரதிராஜா ஆகியோர் உயர்தட்டுச் சமூகத்துக்கு நேர் கீழே திரையில் பிரதிநிதித்துவம் பெறாத கிராமப்புற ஏழைகள், நகர்ப்புற நடுத்தட்டு மக்களை அடையாளப்படுத்தும் சமூகப் படங்களை இயக்கத் தொடங்கினர்கள். இந்தப் புதிய போக்குதான் சுருளிராஜன் என்ற கலைஞனை மீட்டுக் கொடுத்தது. 1980-ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 படங்களில் ஓய்வு, ஒழிச்சலின்றி நடித்தார். நகைச்சுவையை மையப்படுத்தும் குணச்சித்திரம் சுருளியின் அடையாளமாக மாறியது.
சுருளி ஏற்ற வேடங்களில் பெரும்பான்மையானவை அடித்தட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை. இதனால் ஏழை, நடுத்தர மக்களின் மத்தியில் சுருளிக்குத் தனித்த செல்வாக்கு பெருகியது எனலாம். குறிப்பாக திருநங்கை, கழிவுநீர் அகற்றும் தொழிலாளி, அமரர் ஊர்தியின் ஓட்டுநர் என்று ரத்தமும் சதையுமான கதாபாத்திரங்களுக்குத் தனது தனித்துவமான நடிப்பாலும் குரலாலும் உயிர் கொடுத்தார்.
சுருளிராஜனின் திரை வாழ்வில் ஆச்சரியகரமான நகைமுரண் அவர் ஏற்ற முதிய கதாபாத்திரங்கள். அவர் நடிக்க வந்தபோது அவரது வயது 27. ஆனால் அவருக்குக் கிடைத்த வேடங்கள் அவரது வயதை மீறிய முதிய வேடங்கள். நகைச்சுவை நாயகனாகவும் சுருளிராஜன் விட்டுச்சென்ற அடையாளங்கள் பல. அவற்றில் ஒன்று ‘மாந்தோப்பு கிளியே’ படத்தில் ஏற்றிருந்த வேடம். இந்தப் படத்தின் கஞ்சப் பிரபு வேடத்தை அவரின் மாஸ்டர் பீஸ் என்று துணிந்து கூறலாம். பனையோலை விசிறி பிய்ந்துவிடும் என அதை அசையாமல் மனைவியைப் பிடிக்கச் சொல்லிவிட்டு , தனது உடலை அதன் முன்பு அசைத்து விசிறிக்கொள்ளும் காட்சி உட்பட அந்தப் படத்தில் சுருளி பங்கேற்ற அத்தனை காட்சிகளும் நகைச்சுவை மேதமையின் ஆளுமையுடன் விளங்கியவை. இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அந்தக் காட்சிகள் ரசிக்கப்படுபவை.
எல்லாவற்றுக்கும் உச்சமாக ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் பொதுக் கழிவறையைச் சுத்தப்படுத்தும் துப்புரவுத் தொழிலாளி வேடத்தில் முதலில் நடித்தவர் சுருளிதான்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் 1938-ல் பிறந்த சுருளி நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். எளிமையான மனிதர்களின் தனிப்பெரும் பிரதிநிதியாகத் திரையில் சுருளிராஜன் வலம்வர அவரது குரல் முக்கியப் பங்காற்றியதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். எம். ஆர். ராதாவுக்குப் பிறகு வந்த குரல்களில் தனித்தன்மையும், தேர்ந்த வசன உச்சரிப்பும் கொண்ட குரல் அவருடையது. கட்டற்ற திறமைக்கும் குறைந்த ஆயுளுக்கும் இருக்கும் தோழமை சுருளியின் வாழ்வோடும் தொடர்புடையது. புகழின் உச்சியில் இருந்த சுருளி 42 வயதில் மறைந்தார். அவரது கதாபாத்திரங்கள் வரும் தலைமுறைக்கு ஒரு தனித்த ஆளுமை விட்டுச்சென்ற அடையாளங்களே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment