Published : 10 Nov 2017 09:30 AM
Last Updated : 10 Nov 2017 09:30 AM
பாடகர் வேல்முருகனுடன் ஒரு லைவ் கச்சேரியில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சென்றேன். கொழும்பு விமான நிலையத்தில் இறங்கி, செக்கிங் முடித்து வெளியேறும் நுழைவாயில் நோக்கி எனது பெட்டியுடன் நடந்தேன். அப்போது என்னை நோக்கி ஓடிவந்தார் ஒரு விமான நிலைய அதிகாரி. திரைப்படத்தில் பார்ப்பதுபோல் நம்மைவைத்து யாரும் விளையாடுகிறார்களா என்றோர் அச்சம்! ஆனால், என் அருகில் வந்து மூச்சிரைத்தபடி இன்முகம் காட்டிய அவர், “நீங்க இசையமைப்பாளர் தாஜ்நூர்தானே?” என்றார். நான் “ஆமாம்” என்றேன். ‘இந்த எண்ணுக்கு இப்பவே அழையுங்கோ” என்றார். அவர் சொன்ன நம்பரை டயல்செய்தேன். அவர் பாக்கெட்டுக்குள்ளிருந்து…
‘கை… வீசும்… காற்றே எங்கிருந்தாய்…
ஏ…தோ… நீ சொல்ல ஏங்குகிறாய்…
நீ பாடி முடிந்த பாடல்..
உன் கண்ணில் என்ன தேடல்..’
- என்ற பாடல் ஒலித்தது. பாக்கெட்டுக்குள் கைவிட்டு அவர் வெளியே எடுத்த ஐபோனில் அது காலர் ட்யூனாக இருந்ததைக் கண்டேன். அதைப் புரிந்துகொண்டு அவருக்கு கைகுலுக்க நினைக்கும்முன் அவர் என் கைகளைப் பிடித்து வாஞ்சையுடன் குலுக்கிக்கொண்டிருந்தார். பெற்றோரின் பாசத்துக்கு ஏங்கும் பிஞ்சு நெஞ்சத்தின் ஏக்கப் பெருமூச்சு அந்தப் பாடல். இவரைப் போல் பலர் அந்தப் பாடலில் இன்னும் உருகிக் கிடக்கிறார்கள். கவிஞர் பா.விஜய், தயாரித்து இயக்கி நடித்த ‘ஸ்ட்ராபெரி’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடந்துகொண்டிருந்தது.
அப்போது அவர் எடுத்த மாண்டேஜ் காட்சிகள் ஒரு பாடல் இடம்பெறும் சூழ்நிலைக்குரிய தன்மையுடன் சிறப்பாக வந்திருப்பதால் அதற்கான வரிகளை எழுதிவிட்டதாகக் கூறி, அடுத்த 12 மணி நேரத்துக்குள் பாடலை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு, வரிகளை மின்னஞ்சல் செய்திருந்தார். அவர் போனில் கூறிய பாடலுக்கான சூழல் கேட்டு, திரண்டு வந்த கண்ணீர் கண்களின் கரையை உடைத்தது.
அடுத்த 30 நிமிடத்தில் மெட்டு பிறக்க, உடனடியாக தபலா, வயலின், சாரங்கி என இதமான வாத்தியங்களின் சேம்பிள் ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி இசைக்கோவையை உருவாக்கி முடித்தேன். இந்தப் பாடலைப் பாட உன்னி கிருஷ்ணனுடைய மகள் உத்ராவை அழைத்துப் பதிவுசெய்து அன்றே அனுப்பி வைத்து அனுப்பிவிட்டேன். அடுத்து வந்த மூன்றாம் நாள் காலை, உன்னி கிருஷ்ணன் என் ஸ்டுயோவுக்கு மகள், மனைவியுடன் வந்து பாராட்டு மழை பொழியத் தொடங்கிவிட்டார். “ என் மகள் உங்கள் பாடலை கடந்த மூன்று நாட்களாக உருகி உருகிப் பாடிக்கொண்டிருக்கிறாள்.
அவள் பாடப் பாட நாங்களும் அதில் கரைந்து தற்போது பாடல் எங்களுக்கும் அத்துபடியாகிவிட்டது” என்று குடும்பமாகப் பாடிக்காட்டிய பாராட்டு தேசிய விருதுக்கு இணையானது எனத் தோன்றியது. உண்மையாகவே உத்ரா வேறொரு பாடலுக்கு தேசிய விருது பெற்றார். இந்தப் பாடலைக் கேட்ட எனது சவுண்ட் இன்ஜினீயர் நண்பர், ‘லைவ் சவுண்ட் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார். நான் சிரித்தேன். சேம்பிள் ஒலிகளுக்கு இடையே ஃபெர்பாமென்ஸ் டூல் (performance tools) மென்பொருளைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால்தான் அவர் அதை ‘லைவ்’ என்று நம்பினார். அப்படி நம்ப வைக்க மென்பொருள் மட்டும் போதாது, அனுபவமும் தேவை. அதேநேரம் மெட்டையும் வரிகளையும் தாங்கிச் சுமக்கும் ஜீவன்மிக்க குரலும் தேவை.
பாட மறுத்த குயில்
அப்படியொரு குரலை கடவுள் தந்த அணிகலனாகக் கொண்டிருப்பவர் இசைக் குயில் எஸ்.ஜானகியம்மாள். அவர் ‘இனிப் பாடுவதில்லை’ என்று முடிவெடுத்ததுதான் திரையிசையுலகில் சமீபத்தில் முக்கியமான செய்தி. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாகப் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவர், அறிவிக்கிற அந்த நிமிஷம் வரைக்கும் கூட பாடிக் கொண்டிருந்தார் என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்!
அப்படியொரு வாய்ப்பும் உழைப்பும் இன்று அறிமுகமாகும் இளம் பாடகர்களுக்கோ பாடகிகளுக்கோ அமைகிறதா? இந்தக் கேள்வியை எழுப்பினால், நமது பதில் பலத்த மவுனம்தான். ஒரே ஒரு பாடல் மட்டும்தான் பாடியிருப்பார். அந்த ஒரு பாடலும் ஹிட் ஆகிவிட்டால் போதும். அதை வைத்துக் கொண்டே உலகம் முழுவதும் சுற்றி வந்துவிடுவார். அடுத்த பாடல் அவருக்குக் கிடைப்பதற்குள் வேறொரு பாடகர் அந்த இடத்தை நிரப்ப வந்துவிடுவார். இப்படி ஈசல் போல ‘ஒரு பாடல் வாழ்க்கை’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பலர்.
ஏன் இவர்களால் சோபிக்க முடியவில்லை? ஒரு இசையமைப்பாளர் மெட்டமைத்து, அதற்கு ஏற்றாற்போல ஒரு பாடலாசிரியர் பாடல் எழுதி, பின்னணி இசையுடன் ஒருவர் டிராக் பாடி, அப்படியே லட்டை எடுத்து வாயில் ஊட்டுவது போல் புதிய பாடகர்களுக்கு வாய்ப்புத் தரப்படுகிறது. இதில் இவரது பங்கு என்ன? பாடுவது மட்டும்தான். ஆனால், முன்பு அப்படியா இருந்தது? ராகத்தோடு தனது தனித் திறமையையும் அந்தக் குரலில் கொண்டு வர முடிந்ததால்தான் அவர்களால் பல ஆயிரம் பாடல்களைப் பாட முடிந்தது.
பாடல் வரிகளை அப்படியே மனத்துக்குள் வாங்கி, படத்தில் வரப்போகும் அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை உணர்ந்து, தன் குரலில் அதை பாவத்தோடு வெளிப்படுத்துகிற பாடகர்கள் மட்டும்தான் அடுத்த லெவலுக்கு உயர்கிறார்கள். அவர்களால் நூற்றுக்கணக்கான பாடல்களை நோக்கிப் பயணம் செய்ய முடிகிறது.
இரண்டு மென்பொருட்கள்
இந்த இடத்தில் ஒரு முக்கியமான பிரச்சினையை அலச வேண்டும். தொலைக்காட்சிகளில் வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாடகர்கள் பற்றியதுதான் அது. நிகழ்ச்சியில் பல வேகத் தடைகளைக் கடந்து, அவர் தனக்கான வெற்றி மேடைக்கு வரும்போது தேர்ந்த பாடகர் ஆகிவிடுகிறார்கள். இது சாதாரணமாக வந்துவிடாது. கடும் உழைப்பு வேண்டும். அந்த உழைப்புக்கேற்ற மரியாதையையும் அங்கீகாரத்தையும் அவர்களுக்கு இந்த உலகம் வழங்கிவிடுகிறது. இப்பவும் வெளிநாடுகளில் இவர்களின் மேடைக் கச்சேரிக்கு இருக்கிற கிரேஸ் மற்றவர்களுக்கு இருப்பதில்லை.
அதே நேரத்தில் இவர்களிடத்தில் இருக்கிற மைனஸ் என்ன? ஒரு பாடலைக் கேட்டுவிட்டு அதை அப்படியே பிரசன்ட் பண்ணுவதுதான் இவர்களின் வேலையாக இருக்கிறது. அதைச் சரியாகச் செய்வதால்தான் அவர்களுக்குப் பரிசும் கிடைக்கிறது. ஆனால், சினிமாவில் பின்னணி பாடுகிற ‘பிளே பேக்’ சிங்கர்களுக்கு இருக்க வேண்டிய நுணுக்கம் இவர்களுக்கு வருவதில்லை. பிரிண்ட் அடித்தது போல, பிரபலமான ஒரு பாடல் கொடுத்தால் அதை அப்படியே பாடி விடுகிற இவர்களால், புதியதாக ஒரு பாடலைக் கொடுத்தால் அதில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்துவது இயலாத காரியமாகிவிடுகிறது. பெரும்பாலானவர்கள் இதில் தோற்றுவிட்டாலும் பூஜா, ஸ்ரீநிவாஸ் மாதிரியான சிலரால் மட்டும்தான் இங்கும் சோபிக்க முடிகிறது.
இவர்களுக்கு இன்னொரு ப்ளஸ் இருக்கிறது. வேறொரு முன்னணிப் பாடகர் போல் குரலில் சிறிதளவு சாயல் வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதற்கு இந்த சூப்பர் சிங்கர்களை விட்டால் ஆளில்லை. பல்வேறு குரல்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் இவர்கள், அதைச் சுலபமாகச் செய்துவிடுவார்கள்.
இவர்களிலிருந்து, இன்னொரு எஸ்.பி.பியோ மலேசியா வாசுதேவனோ உருவாகப் போவதில்லை என்றாலும், இவர்களை ‘அவர்களாக்குகிற’ வித்தை இசையமைப்பாளர்கள் கையில்தான் இருக்கிறது. அந்தக் காலத்தில் ஏழு கட்டை, எட்டுக் கட்டை என்பார்கள். இப்போது நாங்கள் அதை ‘ரேஞ்ச் ’ என்கிறோம். இந்தப் பாடகருக்கு இதுதான் ரேஞ்ச் என்பதை எடுத்த எடுப்பிலேயே எங்களால் அறிந்துகொள்ள முடியும். பாடகரின் இந்தப் பாடும் திறனுக்கு ஏற்ப, இந்த ரேஞ்சைக் கூட்டியோ குறைத்தோ அவர்களைப் பாட வைத்துவிடுவோம்.
ஒரு பாடலின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழு சுருதியில் பாட வேண்டும் என்பதுதான் கட்டாயம். ஆனால், இன்று சின்னச் சின்ன இடங்களில் லேண்டிங் நோட் (landing note) போனாலும் பரவாயில்லை. ஆந்த்ராஸ் கம்பெனியின் ‘ஆட்டோ ட்யூன்’ என்றொரு சாப்ட்வேர் இருக்கிறது. இன்னொன்று மெலடைன். இந்த இரண்டு மென்பொருட்களையும் வைத்து சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் அதைக் களைந்துவிடலாம். இந்தக் காலத்தில் இந்த ஆட்டோ ட்யூன் செய்யப்படாமல் பாடல்கள் வருவதே இல்லை என்பதுதான் நான் சொல்ல வருகிற முக்கியமான விஷயம்.
சரி... முறையான பாடகர்கள் பாடி வந்தார்கள். அப்புறம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் வென்ற மேடைப் பாடகர்கள் பாடினார்கள். நடிகர் நடிகைகள் எல்லாம் இன்று திடீரெனப் பாட வருகிறார்களே? சினிமாவில் பாடுவதென்பது அவ்வளவு ஈசியா என்கிற கேள்வி ரசிகர்களுக்கு எழலாம். யார் வேண்டுமானாலும் பாடிவிட முடியாது என்பதுதான் என் அழுத்தமான பதில்...எப்படி…? கொஞ்சம் காத்திருங்கள்…
தொடர்புக்கு - tajnoormd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT