Last Updated : 03 Nov, 2017 09:56 AM

 

Published : 03 Nov 2017 09:56 AM
Last Updated : 03 Nov 2017 09:56 AM

நீர்க்குமிழி: பாகவதருக்குப் பதிலீடாக ஆனவர்!

தென்னிந்திய சினிமாவின் தாய்வீடு அன்றைய மதராஸ். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், தெலுங்கு, மலையாள, கன்னட மொழித் திரைப்படங்களின் பேட்டைகள், அந்தந்த மாநிலத் தலைநகரங்களுக்கு இடம்பெயர்ந்தன. ஆனால், மற்ற மொழி நடிகர்கள், இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதையும் இயங்குவதையும் பெரிதும் விரும்பினார்கள். அன்று கேரளத்திலிருந்து பிரேம் நஸீரும் ஆந்திரத்திலிருந்து ராமராவும் நாகேஸ்வர ராவும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றதுபோல் கர்நாடகத்திலிருந்து வந்து கதாநாயகனாக நடித்துப் புகழ்பெற்ற இசை மேதை சி.ஹொன்னப்ப பாகவதர்.

03CHRCJ_HONNAPPA_BHAGAVATHAR_1 ’மகாகவி காளிதாசா’ படத்தில் ஹொன்னப்ப பாகவதர்

பின்னணிப் பாடல் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகாத காலகட்டத்தில், பாடும் திறமை கொண்டவர்களுக்கே முதன்மை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

முசிறி சுப்ரமணிய ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்.பாலசுப்ரமணியம், டி.என்.ராஜரத்னம் பிள்ளை, எம்.கே. தியாகராஜ பாகவதர், சி,ஹொன்னப்ப பாகவதர் என சங்கீதம், நடிப்பு இரண்டிலுமே சாதித்தவர்கள் பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கன்னட சினிமாவின் உன்னதமான முன்னோடிகளில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஹொன்னப்பரை, அதற்கு முன் தமிழ் நாடக மேடையும் தமிழ் சினிமாவும் அங்கீகரித்தன.

எம்.கே.டியின் ‘அம்பிகாபதி’

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள சந்திரசௌடா என்ற சிற்றூரில் சிக்கலிங்கப்பா - கல்லம்மா தம்பதியின் மகனாக 1915-ம் ஆண்டு பிறந்தார். நெசவுதான் குடும்பத் தொழில். பஜன்களைப் பாடிக்கொண்டே நூல் பாவும் தாயார் கல்லம்மாதான் ஹொன்னப்பரின் முதல் இசை குரு. பத்து வயதானபோது குடும்பம் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தது. கேள்வி ஞானத்தைக் கொண்டு, ஸ்ருதி சுத்தமாக ஏழு வயதில் பாட ஆரம்பித்தார் ஹொன்னப்பர்.

அவரது ஆற்றலைக் கண்ட சம்பந்த மூர்த்தி பாகவதர் அவரைத் தன் மாணவராகச் சேர்த்துக்கொண்டார். தென்னகம் முழுவதும் ஹரிகதை விற்பன்னராக அறியப்பட்ட அவரது குழுவில் ஹார்மோனியம் வாசித்தபடி பின்பாட்டுப் பாடும் துடிப்பான இளைஞராக வலம் வந்தார்.

பின்னர் 16 வயதில் சேலம் ‘குப்பா ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா நாடகக் குழு’வில் சேர்ந்து, தமிழ், கன்னட புராண, நாடகங்களிலும் கன்னட பாகவத மேளா நாடகங்களிலும் பாடி நடித்தார். ‘வாலிப’ கிருஷ்ணன், நாரதமுனி வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இவரது பாட்டுத் திறமையைக் கண்ட கர்னாடக இசையுலகம் 17 வயதில் தனிக் கச்சேரிகளுக்கு அழைத்தது.

03CHRCJ_HONNAPPA_BHAGAVATHAR_ கிருஷ்ணர் வேடத்தில்... right

அதைத் தொடர்ந்து கிராமபோன் இசைத் தட்டுகள் மூலம் ஹொன்னப்பரின் குரல் தென்னகம் முழுவதும் பரவத் தொடங்கியது. சேலம் சங்கீத ரசிகர்கள் சபா இவருக்கு ‘பாகவதர்’ பட்டம் சூட்டி பெருமை செய்தது.

இந்த நேரத்தில் சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், பின்னாளில் பெரும் திரை எழுத்தாளராகப் புகழ்பெற்ற இளங்கோவன் கதை, வசனம் எழுத, எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கி, எம்.கே.டி நாயகனாகவும் எம்.ஆர்.சந்தானலட்சுமி நாயகியாகவும் நடித்த ‘அம்பிகாபதி’ (1937) படத்தில், தளபதி கருணாகரத் தொண்டைமானாக ‘உனையல்லால் கதியார் ஜெகதம்மா’ எனப் பாடி நடித்துச் சிறு வேடத்தில் அறிமுகமானார் ஹொன்னப்ப பாகவதர். அறிமுகப்படமே 52 வாரங்கள் ஓடியது வரலாறு.

கடவுள் வேடங்கள்

‘அம்பிகாபதி’ படத்தைத் தொடர்ந்து கிருஷ்ண பகவானாக, அக்னி பகவனாக, நாரத முனிவராக ஹொன்னப்பரைக் கடவுள் வேடங்களில் பொருத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா. சங்கீதத்தில் விற்பன்னராக இருந்தது, நல்ல உயரம், கச்சிதமான உடற்கட்டு என அன்று ஒரு நடிகருக்கான அங்க லட்சணங்களாகப் பார்க்கப்பட்ட அத்தனையும் பொருந்தியிருந்ததாலும் கருணை பொழியும் அவரது வட்ட முகம் காரணமாகவும் கடவுள் வேடங்கள் அவரைத் தொடர்ந்து துரத்தின. இதிலிருந்து அவரை வெளியே கொண்டுவந்தார் மாடர்ன் தியேட்டர் சுந்தரம்.

மாடர்ன் தியேட்டர்ஸாரின் ஐந்து படங்களில் நடித்த ஹொன்னப்பர், அவற்றில் ஒன்றான ‘பர்மா ராணி’யில் பாடல்கள் எதுவும் பாடாமல் பிரிட்டிஷ் விமானப்படை வீரர் கேப்டன் குமாராக நடித்தார். துணை வேடங்களிலிருந்து முன்னேறி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பின் தமிழில் 14 படங்களில் கதாநாயகனாகவும் 3 படங்களில் சிறுவேடங்களிலும் நடித்திருக்கிறார்.

பாகவதருக்குப் பதிலாக…

புகழின் உச்சியில் இருந்த எம்.கே.தியாகராஜ பகவதர், 1944-ல் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கில்’ கைதானபோது, அவர் நடிக்கத் தொடங்கியிருந்த படம் ‘ஸ்ரீமுருகன்’(1946). ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை எம்.கே.டியின் நண்பரான ராஜா சந்திரசேகர் இயக்கிவந்தார். இனி எம்.கே.டியை வைத்துப் படத்தைத் தொடர முடியாது என்ற நிலை வந்தபோது, ஜூபிடர் சோமுவும் முகைதீனும் ஹொன்னப்ப பாகவதரை நாயகனாகப் போட்டுப் படத்தை முடிப்பது என முடிவெடுத்தனர்.

இதை ஒப்புக்கொள்ளாத இயக்குநர் ராஜா சந்திரசேகர் படத்திலிருந்து வெளியேறினார். தயாரிப்பாளர் சோமுவும் வி.எஸ்.நாராயணனும் இயக்கிப் படத்தை முடித்தனர். இந்தப் படத்தில் ‘எங்கே ஒளிந்ததம்மான்...’, ‘குமரனையே நினைத்து...’ ‘உள்ளம் புகுந்த அந்த’, ‘வள்ளியைக் காணேனே’ ஆகிய நான்கு பாடல்களைப் பாடி, படத்துக்கு உயிரூட்டினார். ‘ஸ்ரீமுருகன்’ படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ‘வால்மீகி’ படத்தில் நாயனாக நடித்துக் கவர்ந்தார். இரண்டாம் முறையாக ஹொன்னப்பருடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி.

03chrcj_Valmeeki ‘வால்மீகி’ படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி, ஹொன்னப்ப பாகவதர் கன்னட உலகில் சாதனைகள்

தமிழ் சினிமாவில் சங்கீத மின்னலாய் வந்து சென்றிருந்தாலும் கன்னடத் திரையுலகிலும் கர்னாடக இசை உலகிலும் அவரது சாதனைகள் பலருக்கும் படிக்கற்களாக அமைந்தன. சங்கீத வித்வான்களுக்குப் பாடத் தெரியுமே தவிர நடிக்க வராது என்ற அந்நாளின் கூற்றைப் பொய்யாக்கி, விதிவிலக்காகத் திகழ்ந்தவர் ஹொன்னப்பர்.

மிகச் சிறந்த சங்கீத மேதை, மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர் ஆகிய சாதனைகளைக் கடந்து, மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் கன்னடத்தில் தடம் பதித்தார்.

1955-ல் பி.சரோஜாதேவியை அறிமுகப்படுத்தி, இவர் தயாரித்து நடித்த ‘மகாகவி காளிதாசா’ கன்னடப் படத்துக்கு மிகச் சிறந்த இசையையும் அமைத்தார்.

சிறந்த கன்னடப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது இப்படம். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற தமிழ்ப் படத்தையும் தயாரித்திருக்கும் இவர், தன் இறுதிக் காலம்வரையிலும் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பெரும் ஆளுமையாக வலம்வந்தது மட்டுமல்ல, 300-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை உருவாக்கி அளித்திருக்கிறார். திரையிலிருந்து விலகிய பின் ‘உமா மகேஸ்வரா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கி மேடைக்கும் தன் பங்களிப்பைத் தரத் தவறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x