Published : 11 Jul 2014 11:00 AM
Last Updated : 11 Jul 2014 11:00 AM

மும்பையைக் காக்கும் தமிழ் ஹீரோக்கள்!

தமிழ்ப் படக் கதாநாயகர்களுக்குக் கடந்த 25 ஆண்டுகளாக அதிகமும் தொல்லை கொடுத்துவந்த வில்லன்கள், சென்னையிலும், மதுரையிலும் வாழ்ந்து வந்தார்கள். இயக்குநர் பேரரசும், ஹரியும் தலையெடுத்த பிறகு திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகாசி, பழனி, திருப்பதி, என்று வில்லன்களை அடுத்த கட்டத்தில் இருந்த மாவட்டத் தலைநகரங்களுக்கு விரட்டியடித்தார்கள். மிச்சமிருந்த திருச்சியை விஷால் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். இப்படித் தமிழ்நாட்டின் சின்னச் சின்ன ஊர்களிலும் தமிழ் சினிமாவின் வில்லன்கள் வசிக்கும் பகுதியாக மாறிவிட்டதோ என்னவோ, தற்போது மும்பை மீது திடீர் பாசம் வந்துவிட்டது நம் இயக்குநர்களுக்கும் ஹீரோக்களுக்கும்.

மும்பையின் முன்னாள் டான்கள்

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி மற்றும் செல்வாக்கு படைத்த ஹீரோக்களில் ரஜினி, கமல் இருவருமே முதல் இரண்டு இடத்தில் இருக்கிறார்கள். நாயகன் படத்தில் கமல் ‘வேலு நாயக்கர்’ கதாபாத்திரத்தில் நிழலுலகடானாக நடித்தார். அப்போது முதலே மும்பை மீதான மோகம் தொற்றிக்கொண்டது எனலாம். அதேபோல மும்பையின் மிகப் பெரிய தாதாவாக வாழ்ந்து, பிறகு நிழலுலகைத் துறந்து ஒரு சாமான்ய ஆட்டோ ஓட்டுநராகச் சென்னையில் வாழும் பாட்சா கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வணிக வெற்றியும் அதன் வீச்சும், அடுத்த வரிசையில் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் நாயகர்களை ரொம்பவே சுண்டியிழுத்தது என்று சொல்ல வேண்டும். கமல், ரஜினிக்குப் பிறகு அடுத்த தலைமுறையில் தலையெடுத்து வளர ஆரம்பித்த நடிகர்களில் முந்திக்கொண்டவர் பிரசாந்த். அப்பு படத்தில் ஒரு வாடகைக் கார் ஓட்டுநராக இருக்கும் இருக்கும் பிரசாந்த், மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருநங்கை தாதாவான பிரகாஷ்ராஜை ஒழித்துக் கட்டி, அபலைப் பெண்களை மீட்டு வருவார். பிரசாந்துக்குப் பிறகு மும்பை பக்கம் யாரும் தலைவைத்துப் படுக்கவில்லையே என்று பார்த்தால், தற்போது நமது ஹீரோக்களின் முழுநேர வேலையே மும்பையில் இருக்கும் ரவுடிகளை ஒழிப்பதும் அங்கேயிருந்து திட்டம் தீட்டும் தீவிரவாதிகளை அழிப்பதும்தான்.

அஜி விஜய் சூர்யா அடுத்து...

மங்காத்தா படத்தில் இந்த வேலையை ஆரம்பித்துவைத்தார் அஜித். பிறகு ஆரம்பம் படத்தில் நண்பன் சாகக் காரணமாக இருந்த மும்பையின் ஊழல்வாதிகளை வேட்டையாடினார். அதன் பிறகு ஆதிபகவன் ஜெயம் ரவி ரொம்பவே அதிர்ச்சியைக் கொடுத்தார். நல்லவேளையாக இவர் தீவிரவாதிகள் யாரையும் வேட்டையாடவில்லை. தலைவா படத்தில் அப்பா வழியில் லோக்கல் தாதாக்களை அழிக்கும் பெரிய தாதாவாக மாறி, குட்டி வேலு நாயக்கராக டிரைலர் காட்டினார் விஜய். துப்பாக்கி படத்தில் தீவிரவாதிகளிடமிருந்து மும்பையைக் காப்பாற்றி பாலிவுட்டின் கான் நடிகர்களையே பதற வைத்தார் விஜய்.

இப்போது சூர்யாவின் முறை. ‘அஞ்சான்’ படத்தில் ராஜூ பாயாக மாறி மும்பையில் வாழும் ரவுடிகளை ஓட ஓட விரட்டித் தீர்த்துக்கட்டுகிறார். ராஜூ பாயின் ஹிட் லிஸ்ட்டில் தீவிரவாதிகள்கூட இருக்கலாம்.

மும்பையின் மீதும் தீவிரவாதிகள் மீதும் இத்தனை ஆர்வம் காட்ட என்னதான் காரணமாக இருக்க முடியும்? ரஜினி, கமலை வைத்து எப்படிப் பொது இடங்களில் படப்படிப்பிடிப்பு நடத்த முடியாதோ அப்படித்தான் அஜித், விஜய் மாதிரியான மாஸ் ஹீரோக்களையும் தமிழ் நாட்டில் பொது இடங்களில் வைத்துப் படப்பிடிப்பு நடத்த முடியாது ரசிகர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். ரசிகர்களின் அன்புத் தொல்லைக்காகவே பெரும்பாலும் மும்பைக்கே போய்விடுகிறோம் என்று சொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார் இயக்குநர் அமீர்.

பின்னணிக் காரணம்

“கதைகளை எழுதும் நமது இயக்குநர்கள் ஏன் மும்பையை வைத்துக் கதையை எழுதுகிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். அதேபோல நமது ஹீரோக்கள், சூர சம்ஹாரம் செய்பவர்கள் அத்தனை பேரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளாகவே இருப்பது ஏன் என்றும் தெரியவில்லை. மும்பை, அதைத் தாண்டி, கொல்கத்தா, அதையும் தாண்டி அமெரிக்கா என்று போனாலும் வில்லன்கள் அத்தனை பேரும் தீவிரவாதிகளாகவே இருக்க வேண்டுமா” என்றும் கேட்கிறார் இயக்குநர் அமீர்.

அமீரின் நியாயமான கேள்வியைத் தாண்டி விரியும் மற்றொரு நிதர்சனமான பின்னணி, தமிழ்நாட்டின் பெப்சி திரைப்படத் தொழிலாளர்களை மும்பையில் முழுமையாகப் பயன்படுத்தத் தேவையில்லை என்பதும் வில்லன்கள் மும்பைக்கு இடம்பெயர முக்கிய காரணம் என்று தெரியவருகிறது. அடுத்து சென்னையை மையப்படுத்தி சுதந்திரமாக எடுத்தால் நிறைய மிரட்டல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்ற புலம்பல் ஹீரோக்கள் தரப்பிலிருந்து கேட்கிறது. அதுவே மும்பை என்றால் தமிழ் ரசிகர்கள் மனதில் வேரோடியிருக்கும் நிழலுலகம் பற்றிய பிம்பமும், மும்பையைக் கதைக்களமாக்கிய படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதும் இயக்குநர்கள், நாயகர்களின் மும்பை மோகத்துக்குக் காரணம் என்கிறார்கள். ஆனால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோக்களின் ஹீரோயிச பிம்பத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஆதார சக்தியாக இருக்கும் கொடூர வில்லன்களின் தேவை இல்லாமலேயே, சிறு முதலீட்டுப் படங்கள் தமிழ்நாட்டில் வெற்றியைக் குவித்துக் கொண்டிருக்கின்றன. தங்கள் மாஸ் ஹீரோ பிம்பத்தின் முதுகெலும்பாக இருக்கும் வில்லன்களை மும்பையில் தேடும் முன் தமிழ் சினிமாவின் இந்தப் புதிய போக்கையும் இவர்கள் கவனிப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x