Published : 27 Oct 2017 11:12 AM
Last Updated : 27 Oct 2017 11:12 AM

சினிமா பட்டறை: கோடம்பாக்கத்துக்கு இது புதிது!

செ

ன்னை தரமணியில் இயங்கிவரும் அரசுத் திரைப்படக் கல்லூரி எத்தனையோ சாதனையாளர்களை உருவாக்கியது. ஆனால் கோடம்பாக்கத்தில் தற்போது எக்கச்சக்க தனியார் திரைப்பட பயிற்சி பள்ளிகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் மைண்ட் ஸ்கிரீன், பிரசாத், ஆர்.கே.வி, தனஞ்ஜெயனின் பாப்டா, பாரதிராஜா திரைப்படப் பள்ளி எனப் பட்டியல் நீள்கிறது. இந்தப் பள்ளிகளில் சேர்ந்து பயிலமுடியாத பலர், திமிரத் திமிர திறமைகளோடு வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு ஊர்களில் சுவாசித்துக்கொண்டிருக்கலாம்.

என்றாவது ஒருநாள் திரைக்குள் நுழைந்து தம் இருப்பைக் காட்டிவிடலாம் என்ற கனவுடன் அந்த வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கும் இந்தத் ‘திரை ஆர்வர்’களில் பலருக்கு திரைப்படப் பள்ளிகளில் சேர்ந்து பயில முடியாமல் போக மிரட்டும் பயிற்சிக் கட்டணமும் ஒரு காரணம் எனலாம். விஸ்காம் பயிலும் மாணவர்களில் பலருக்குத் திரைத்துறையே நாளைய இலக்காகவும் இருக்கும். இவர்களைப் போன்ற நாளைய படைப்பாளிகளைக் கூர் தீட்டும் களமாக அமைந்துவிடுபவைதான் சினிமா பயிற்சிப் பட்டறைகள். கமல் பல ஆண்டுகளுக்கு முன் நடத்திய திரைக்கதை பயிற்சிப் பட்டறை அப்படிப்பட்டதுதான். தற்போது இயக்குநர் மிஷ்கின் இதைக் கையில் எடுத்திருக்கிறார்.

தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல், தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் வெற்றிமாறன், ராம், ஒளிப்பதிவாளர் செழியன், பேராசிரியர் சொர்ணவேல், இசையமைப்பாளர் ஆரோல் கரோலி, படத்தொகுப்பாளர் அருண் என தன்னுடன் ஆறு சிறந்த கலைஞர்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டு இரண்டுநாள் சினிமா பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்திருக்கும் மிஷ்கினின் முயற்சி தமிழ் சினிமாவுக்கு புதிது. சினிமாவைக் கற்றுக்கொள்ள இத்தனை பள்ளிகள் இங்கே இருக்க எதற்காக இந்த சினிமா பயிற்சிப்பட்டறை?

இரண்டு நாள் இரண்டு வருடம்

“ சினிமாவில் நுழையத் துடிப்பவர்கள் அக்கலையின் நீள அகலங்களை புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ள முடியாது. அதே துறையில் இயங்கிக்கொண்டிருப்பவர்களால் புரிந்துவைக்கப்பட்டிருக்கிற அனுபவங்கள்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்குச் சிறந்த பாடமாகவும் படிப்பினைகளாகவும் இருக்கமுடியும். அதுபோன்றதொரு தொழில்ரீதியான அனுபவப் பகிர்வை எதிர்வரும் நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் சினிமா பட்டறையாக சென்னையில் நடத்தவிருக்கிறோம். ஆண்டு முழுவதும் சினிமாப் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் விதமாகவே இதை அமைத்திருக்கிறோம். இந்த இரண்டுநாள் பயிற்சிப்பட்டறையை இரண்டு வருடங்கள் பயின்ற உணர்வைக் கொடுக்கும்விதமாக வடிவமைத்திருக்கிறோம்.” என்கிறார் மிஷ்கின்.

கதையைக் கையாளும் மிஷ்கின்,

வெற்றிமாறன், ராம்

இந்தப் பயிற்சிப் பட்டறையில் மற்ற ஆறுபேரும் என்னென்ன வகுப்புகளை எடுக்க இருக்கிறார்கள் என்றதும் “கதை என்றால் என்ன, ஒரு கதையின் கரு உருவாக்கம், கதாபாத்திரங்களை எப்படி வடிவமைப்பது, கதாபாத்திரங்களுள் முரண் தேவைகளை எப்படி உருவாக்குவது, ஒரு காட்சியை சினிமா மொழியில் எப்படி வகுப்பது, காட்சியைக் கழித்தல், மூன்று கட்டக் கதை திரைக்கதை அமைப்பு, திரைக்கதை ஆக்கத்தில் சில அணுகுமுறைகள் என, கதை, காதாபாத்திரம், திரைக்கதை என ஆதாரமான கதையின் கலைநுட்பங்கள் சார்ந்து நானும் இயக்குநர் ராமும் எங்களது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர இருக்கிறோம்.

படப்பிடிப்புத் தளத்தில் உள்ளுணர்வின் வெளிப்பாடுகளையும், அதனை மெருகேற்றும் விதம் குறித்தும், இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான தொடர்பைப் பற்றியும் இயக்குநர் வெற்றிமாறன் பகிர இருக்கிறார்.” என்ற மிஷ்கின், இந்தப் பயிற்சிப்பட்டறையில் ஊடகவியல் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் எப்படி இணைந்துகொண்டார் என்பதையும் விளக்கினார்.

காலமும் வெளியும்

பேராசிரியர் சொர்ணவேல் திருநெல்வேலியில் பிறந்து அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தமிழர். சினிமா உருவாக்கம் சார்ந்து பல ஆண்டுகளாகக் கற்பித்துவருகிறார். “திரைக் கலையின் பல கூறுகளையும் நுணுக்கி ஆராயும் சொர்ணவேலின் வகுப்புகள் குறித்து அவரது மாணவர்கள் மட்டுமல்லாமல், சினிமாத்துறையில் இயங்குகிறவர்களும் பெருமை கொள்கின்றனர். அவரைக் கண்டிப்பாக இந்தப் பட்டறையில் கலந்துகொள்ளச்செய்யவேண்டும் என்று முடிவு செய்தே அவரை அழைத்திருக்கிறோம்.

சினிமாவில் ‘காலமும் வெளியும்’ என்ற தளத்தில் பிரபலமான முக்கியத் திரைப்படங்களை முன்வைத்து மாணவர்களுடன் உரையாட இருக்கிறார். “சினிமாவில் இயக்குநராகத் துடிப்பவர்கள் மிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு நுட்பம், காலமும் வெளியும். இதனை மிக எளிதாகப் பேராசிரியர் சொர்ணவேலிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் மிஷ்கின்.

ஒளிப்பதிவு , இசை, படத்தொகுப்பு

இயக்குநர்கள் சினிமாவைக் கற்றுத்தரும் பேராசிரியர் ஆகியோருடன் திரைப்பட உருவாக்கத்தில் பங்கெடுக்கிற பிற முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்களும் அனுபவங்களைப் பகிரும்போதுதான் இந்தப் பயிற்சிப்பட்டறை முழுமையடையும் என்று கருதியிருக்கிறார்கள் அதற்காகவே கேமரா சார்ந்த தொழில்நுட்பத்தைத் தன் அனுபவம் சார்ந்து விரித்துக்கூற ஒளிப்பதிவாளர் செழியன், பின்னணி இசை உருவாக்கம் குறித்து ஆரோல் கரோலியும், ‘துப்பறிவாளன்’ படக்கோவையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அருணும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள்.

“தமிழ், மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எடுக்கவிருப்பதால், பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருக்காது.” என்ற மிஷ்கின், “ இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல, இதன்மூலம் கிடைக்க இருக்கும் மொத்த தொகையையும் திருவண்ணாமலையில் வசித்துவரும் ஓர் உன்னத ஓவியக் கலைஞரின் கலைச் செயல்பாடுகளுக்கு ஊக்க நிதியாகக் கொடுக்கவிருக்கிறோம். அவர் யார், ஓவியத்தில் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவரால் நம் சமூகத்துக்கு என்ன பயன் என்பதையெல்லாம் பயிற்சிப்பட்டறையின் முடிவில் தெரிவிப்போம்” என்று முடித்தார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள வெளியூரிலிருந்து வரும் திரை ஆர்வலர்கள் மற்றும் விஸ்காம் பயிலும் மாணவர்கள் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். உணவு தங்குமிடம் இரண்டுக்கும் சேர்த்து கட்டணமாக ரூ10,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சிப்பட்டறை குறித்து மேலதிகத் தகவல்களை 9840698236 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x