Published : 06 Oct 2017 10:04 AM
Last Updated : 06 Oct 2017 10:04 AM

மலையாள சினிமாவின் மனோரமா

சுகுமாரி 77-வது பிறந்த தினம்: அக்டோபர் 6


நான் கடந்த ஆறு மாத காலமாக, இதுவரையிலும் யாராலும் மேற்கொள்ளப்படாத ஒரு ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆய்வின் தலைப்பு: நடிகை கீர்த்தி சுரேஷை பெண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களும் ஒரே குரலில், ‘எனக்கு கீர்த்தி சுரேஷைப் பிடிக்காது’ என்று கூறி என் மனதைப் புண்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி விஷயமாக, நான் தினமும் ஏராளமான கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துக் கடும் வெறுப்பிலிருந்த என் மனைவி, “உடனே சுகுமாரியப் பத்தி எழுதுங்க” என்றார்.

உடன் 1989-ல் வெளிவந்த ‘வருஷம் 16” படத்தில் நடித்த சுகுமாரியின் அற்புதமான நடிப்பு நினைவுக்கு வந்து, என்னை இக்கட்டுரையை எழுதவைத்தது. நான் ‘வருஷம் 16’ படத்தை குஷ்புவுக்காகவே பல முறை பார்த்தவன். எனவே, அப்படத்தில் ஒரு காட்சியில் எத்தனை நடிகர்கள் வந்தாலும், எனது கண்களின் கேமரா குஷ்புவின் முகத்தை மட்டும் ஜும் செய்து பார்த்துக்கொண்டிருக்கும். அதையும் மீறி சுகுமாரியின் நடிப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.

பரிபூரண நடிப்பு

‘வருஷம் 16’ படத்தில் கார்த்திக், குஷ்புவுக்கு குளியலறையில் முத்தம் கொடுத்து மாட்டி, குடும்பத்தாரிடம் அவமானப்பட்டு நிற்கும்போது, கார்த்திக்கின் பாட்டியாக வரும் சுகுமாரி கார்த்திக்கிடம், “வருத்தப்படாதய்யா. இங்க என்ன பெருசா நடந்துடுச்சு…. போ” என்று நடந்தது ஒரு சாதாரண விஷயம் போன்ற முகபாவத்துடன் கூறி அனுப்பிவிட்டு, கார்த்திக் சென்றவுடன் சட்டென்று முகபாவம் மாறி, நடந்தவற்றின் தீவிரத்தை உணர்ந்து அவர் கண்ணீர் விடும் காட்சியைப் பார்த்தபோது, பல்லாண்டு காலமாகத் திரைத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும், ஒரு பரிபூரணமான நடிகையால் மட்டுமே இம்மாதிரியாக நடிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டேன்.

06chrcj_sugumari 1 ‘வருஷம் 16’ படத்தில் சுகுமாரி right

1940-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி. அத்தையும் நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதி அம்மாளிடம், சென்னையில் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் அவர் நுழைந்துவிட்டார். தனது 11-வது வயதில் ‘ஓரிரவு’ என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த சுகுமாரி தனது 19-வது வயதில் பிரபலத் தமிழ் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார்.

திருமணத்துக்குப் பிறகும் பீம்சிங் சுகுமாரியை நடிக்க அனுமதிக்க…. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஏறத்தாழ 2,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலானவை மலையாளப் படங்கள். தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிகை மனோரமா தூள் கிளப்பியதுபோல், மலையாளத்தில் நடிகை சுகுமாரி பலதரப்பட்ட வேடங்களில் ஏராளமாக நடித்ததால், அவர் ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று அழைக்கப்பட்டார்.

நகைச்சுவையில் தனித் தடம்

மலையாளத்தில் 1974-ல் வெளிவந்த ‘சட்டைக்காரி’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியாக நடித்திருந்த சுகுமாரியின் ஆங்கிலம் கலந்த மலையாளப் பேச்சும் நடிப்பும் அனைவரையும் கவர்ந்து, மலையாளத் திரையுலகில் அவர் ஒரு தனித்துவமான இடத்தை அடைந்தார். 1984-ல் வெளிவந்த இயக்குநர் பிரியதர்ஷனின் ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ என்ற மலையாளப் படத்தில் மேல்தட்டு மாடர்ன் பெண்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி, அலட்டலாக நடித்த சுகுமாரியின் அருமையான நகைச்சுவை நடிப்பு, அவரை முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் மாற்றியது.

இத்துடன் குணச்சித்திர வேடங்களிலும் சுகுமாரி மகா அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சுகுமாரி தன் மகனிடம் ஃபோனில் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறும் காட்சியில் சுகுமாரியின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. அதேபோல் ‘தசரதம்’ மலையாளப் படத்தின் இறுதிக் காட்சியில்; மோகன்லால், அவர் வீட்டு வேலைக்காரியான சுகுமாரியிடம், “என்னை மகனாக ஏற்றுக்கொள்வீர்களா?” என்ற கேட்கும்போது, சட்டென்று அந்த வேலைக்காரி முகபாவத்திலிருந்து விடுபட்டு, தாய்மையின் முகபாவத்துக்கு மாறும் நடிப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் சுகுமாரி அம்மாவாக நடித்தது பற்றி மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி, “சுகுமாரி ஒரு செட்டு முண்டு உடையை பையில எடுத்துகிட்டு வந்து, எல்லா செட்டுக்கும் போய் அம்மா வேடத்தில் நடித்துவிடுவார்” என்று கூறியிருக்கிறார்.

உறுதியான குரல்

தமிழிலும் எம்.ஜி.ஆர். சிவாஜியிலிருந்து தனுஷ்வரை பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சுகுமாரியைக் கடைசியாக நான், ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் பாட்டியாகப் பார்த்தேன். அப்படத்தின் தொடக்கத்தில், “எங்கேயோ பார்த்த மயக்கம்” பாடலில் வெள்ளைநிற உடையில், மிக அழகாகத் தோன்றிய நயன்தாரா, அப்படியே என் கண்களில் நிரந்தரமாகத் தங்கி, பிற காட்சிகளில் வந்த நயன்தாராகூடக் கண்ணில் தெரியாத அளவுக்கு எனது கண்கள் கடுமையாகச் சேதமடைந்திருந்தன. பிறகு சுகுமாரி தனுஷை அவரது கணீரென்ற வெண்கலக் குரலில் விரட்டியபோதுதான் நான் சுயநினைவுக்கு வந்தேன். சுகுமாரியின் குரல் அவ்வளவு தனித்துவமான, உறுதியான குரல்.

கடந்த 2003-ம் ஆண்டு பத்மஶ்ரீ பட்டம் பெற்ற சுகுமாரி, 2011-ம் ஆண்டு, ‘நம்ம கிராமம்” என்ற தமிழ் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு, சுகுமாரி பூஜை செய்துகொண்டிருந்தபோது, குத்துவிளக்கு சேலையில் பட்டு எரிந்து, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரைக் காணவந்த அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்ததிலிருந்து நடிகை சுகுமாரியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். 4 வார கால போராட்டத்துக்குப் பிறகு, சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரி மாரடைப்பால் காலமானார்.

சுகுமாரியின் கணவர் பீம்சிங் இறந்தபோது, சுகுமாரியின் வயது 30களில்தான் இருந்தது. ஒரு நடுத்தர வயது பெண்ணுக்கு அது என்றும் தீராத்துயரம். ஆனால் கலைஞர்கள் எவ்வளவு பெரிய துயரத்தில் ஆழ்ந்தாலும், அவர்கள் நேசிக்கும் கலை அவர்களை அத்துயரத்திலிருந்து மீட்டெடுக்கும். அதே போல் சுகுமாரியின் கலையே, அவரைக் கணவருடைய இழப்பிலிருந்து மீட்டது. சுகுமாரி போன்ற கலைஞர்களின் வாழ்க்கை, வெறும் மனிதர்களால் மட்டும் முழுமையடைவதல்ல. கலையாலேயே முழுமையடைகிறது. அந்த வகையில் நடிகை சுகுமாரி ஒரு முழுமையான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x