Last Updated : 29 Jul, 2014 10:00 AM

 

Published : 29 Jul 2014 10:00 AM
Last Updated : 29 Jul 2014 10:00 AM

எடிட்டர்தான் திரைப்படத்தின் முதல் ரசிகன்: படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் பேட்டி

‘வல்லினம்’ தேசிய விருதுக்கு பிறகு மிக மிக கவனமாக படங்களைத் தேர்வு செய்து திரைப்பட வேலைகளை கவனித்து வருகிறார் எடிட்டர் சாபு ஜோசப். ‘‘பெரும்பாலான நிசப்த இரவுகளும் தேநீரும்தான் எனக்கு நண்பன்’’ கணினிக்கு எதிரே உள்ள இருக்கையை சுழற்றியவாறே ஒரு நடுநிசிப்பொழுதில் தன் படத்தொகுப்பு பணிகள் குறித்து பேசத் தொடங்குகிறார் இளம் எடிட்டர் சாபு ஜோசப்..

சினிமாவில் இந்த துறைதான் உங்களுக்கு சரியாக இருக்கும் என்று தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

பள்ளியில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடம் என்றால் கடைசி பெஞ்சில் ஓடிப்போய் மறைந்துகொள்வேன். அது இல்லாத ஒரு பாடத்தைத்தான் கல்லூரியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது விஷுவல் கம்யூனிகேஷன் வித்தியாசமாகப்பட்டது.

அப்படியும் கல்லூரியில் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதைதான். எப்படியோ இறுதியாண்டு புராஜக்ட்டின்போது எடிட்டிங் மீது இனம்புரியாத காதல் துளிர்த்தது. நான் வேலை பார்க்கத் தொடங்கிய 2002-ம் ஆண்டில்தான் நெகடிவ் பிலிம் எடிட்டிங் முழுவதும் குறைந்து டிஜிட்டல் முறை பிரதான இடம் பிடிக்க தொடங்கியது. என் அதிர்ஷ்டம் முழுமையாக பிலிம் எடிட்டிங் வேலைகளைக் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம்தான் இன்று டிஜிட்டலிலும் என்னைத் திறம்பட விளையாட வைக்கிறது.

எப்படி பார்த்தாலும் இந்தக் கால பசங்களுக்கு அந்த பிலிம் எடிட்டிங் இல்லாது போனது துரதிர்ஷ்டம்தான்.

நீங்கள் யாரிடம் படத்தொகுப்பின் நுணுக்கங்களைப் பயின்றீர்கள்?

எடிட்டர்கள் சதீஷ், ஆன்டனி இருவரையும் கடந்து வராமல் இருந்திருந்தால் என்னால் இன்று இந்த பேட்டி கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். எடிட்டர் ஆன்டனியின் கமர்ஷியல் மற்றும் அதிவேகமான வேலையை ஒரு சீடன் அருகில் அமர்ந்துகொண்டு பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தாலே போதும். அந்த பாக்கியம் பெற்றவன் நான்.

மற்றபடி, என் எடிட்டிங் பயிற்சிக் காலங்களில் பணிபுரிந்த ஆட்டோகிராஃப், மழை, அன்பே ஆருயிரே, பள்ளிக்கூடம், தொட்டி ஜெயா, கஜினி, காக்க காக்க.. என எல்லா படங்களும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்த படங்களில் வேலை பார்த்த நாட்கள்தான் நானும் சிறந்த எடிட்டராக உயரம் தொடமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘வல்லினம்’ படத்துக்கு தேசிய விருது பெற்ற பின்னர் உங்களின் வொர்க்கிங் ஸ்டைலை ரொம்ப மாற்றிக்கொண்டிருக்கிறீர்களாமே, அப்படியா?

‘வல்லினம்’ படத்துக்குப் பிறகு பொறுப்புகள் நிறைய கூடியிருப்பது உண்மைதான். இப்போது கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம்தான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ‘பளிச்’சென்று இந்த சினிமாகூடவே ஓடச்செய்யும். அப்படியான தருணத்தில் நாம் தொடும் ஒவ்வொரு படத்திலும் நிச்சயம் ஏதோ ஒரு புதுமையைக் கொடுத்தே தீரவேண்டும்.

அந்த எண்ணத்தோடுதான் இப்போ ஜேம்ஸ் வசந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம், ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’, ‘வெண்ணிலா வீடு’, ‘யாகாவாராயினும் நாகாக்க’ இப்படி தொடர்ந்து ஒப்புக்கொள்ளும் படங்களின் வேலைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. தனித்த பொறுப்புகளை சுமந்துகொண்டு பணிபுரியும் இந்த தருணம் என்னோட சந்தோஷ தருணம் என்றே சொல்லலாம்.

ஒரு எடிட்டருக்கு இயக்குநர், ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பு எந்த வடிவத்தில் பக்கபலமாக இருக்கும்?

இயக்குநரின் குழந்தைதான் ஒரு படம். ஒரு படத்தின் எண்ண ஓட்டம் முழுவதும் இயக்குநரைத்தான் சாரும். அவர் என்ன நினைக்கிறாரோ, என்ன கொடுக்க விரும்புகிறாரோ அதை பிரதிபலிக்கத்தான் நாங்கள் எல்லோரும் கூடுகிறோம். ‘வல்லினம்’ படத்தில் எனக்கு பலமாக இருந்தது படத்தின் இயக்குநர் அறிவழகன் மட்டுமின்றி, படத்தின் ஒளிப்பதிவாளர் பாஸ்கரனும்தான்.

அதோடு என்கூடவே இருந்த உதவியாளர்கள் வடிவேல், விமல், நாத்தின் பங்களிப்பும் அபாரம். இப்படி எல்லோரும் கூடியதால் கிடைத்த தேசிய விருதை எங்கள் படக் குழுவினருக்கு கிடைத்த விருதாகத்தான் எடுத்துக்கொண்டேன்.

பெரிய ஹீரோ படங்களில் பணிபுரியும் போது அவர்களுக்காக உங்கள் வேலைகளை மாற்றிக்கொள்கிற சூழல் இருக்குமா?

தேவையில்லாத ‘பில்டப்’ இருந்தால் அது வேண்டாம் என்று சொல்வதுதான் எடிட்டரின் வேலை. ஒரு திரைப்படத்தின் முதல் ரசிகன் எடிட்டர்தான். அவர்தான் படம் பார்க்க இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தரப்பில் இருந்து முதலாவதாக பார்த்து கமென்ட்ஸ் சொல்ல வேண்டும். ஒரு எடிட்டரோட ஜட்ஜ்மெண்ட் ரொம்பவே முக்கியம். அப்படியிருக்க இந்த இடம் அவசியமில்லை என்றால் உடனே தேவை இல்லை என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஸ்பாட் எடிட்டிங் இப்போது பரவலாகி வருகிறதே?

படத்தின் வேலைக்கு அவசியம் என்றால் ஸ்பாட் எடிட்டிங் போகலாம். தேவை இல்லாத நேரங்களில் தவிர்ப்பது நல்லது. நான் பெரிதாக ஸ்பாட் எடிட்டிங்கை விரும்புவதில்லை. தொடர்ந்து எனக்கு இருக்கும் பட வேலைகளும் அதற்கு ஒரு காரணம்.

உங்க மனைவியும் எடிட்டராமே?

ஆமாம். என்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொள்ள முழு காரணம் அவங்கதான். ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ என்ற படத்தின் எடிட்டராக பணியாற்றியிருக்காங்க. அடுத்தடுத்த புதிய படங்களில் இப்போது கவனம் செலுத்த தொடங்கியிருக்காங்க. நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். ‘மற்றவர்களோட பாதிப்பால் வேலையை தொடராமல் உங்களுக்கு என்று ஒரு தனித்த ஐடியாவை கையாளுங்கள்’ என்று என் பாதையை விதைத்ததே என் மனைவி ராஜலட்சுமிதான். அதனால்தான் என்னிடம் வந்த ‘ஈரம்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களின் டிரெய்லர்கள் எல்லாம் ஒருவித தனித்த ஸ்பெஷலாக கவனம் பெற்றது.

உங்கள் பொழுதுபோக்கு என்ன?

என் 9 மாதக் குழந்தை டானியா. அவளோடு விளையாடினால் பொழுது போவதே தெரிவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x