Published : 06 Oct 2017 10:11 AM
Last Updated : 06 Oct 2017 10:11 AM
த
மிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைப் பெரும்பாலான விமர்சகர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். படத்தில் சூர்யாவின் செய்கைகளும் வசனங்களும் இவருக்குக் கொடுக்கப்படும் பில்டப்புகளுமே ரசிகர்களிடமிருந்து கைதட்டல்களையும் ஆரவார வரவேற்பையும் பெறுகின்றன. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி மிகவும் ஆட்சேபத்துக்குரியதாக உள்ளது.
மற்றுமொரு அநீதி
முருகதாஸ் இயக்கிய படங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருப்பது இது முதல் முறையல்ல. ‘ஏழாம் அறிவு’ படத்தில் ‘இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் குறைந்துவிட்டது’ என்ற வசனம் இடம்பெற்றது. ‘துப்பாக்கி’ படத்தில் சாமானிய இஸ்லாமியர்கள் அனைவருமே, தீவிரவாதியாக மாற்றப்படக்கூடிய அபாயம் மிக்கவர்கள் என்று எண்ணவைக்கும் ‘ஸ்லீப்பர் செல்’ என்ற விஷயத்தைப் புகுத்தினார்.
‘ஸ்பைடர்’ படத்திலோ எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள சுடலை என்ற வில்லனின் பாத்திரப் படைப்பு மிகவும் பிரச்சினைக்குரியதாக உள்ளது. படத்தில் அவன் பிணம் எரிக்கும் தொழிலாளி ஒருவரின் மகன். சுடுகாட்டில் பிணங்களைச் சுமந்துவரும் உறவினர்களின் அழுகுரலோசைக்கு நடுவே பிறந்து வளர்வதால், அவனுக்கு அந்த மரண ஓலம் இன்பம் தருவதாக உள்ளது. சில நாட்களுக்கு யாருடைய அழுகையையும் கேட்காததால் சாப்பிடுவதைத் தவிர்க்கும் அளவுக்கு, அதன் மீது அவனுக்குப் பற்று ஏற்பட்டுவிடுகிறது. இதையடுத்து, தன் இன்பத்துக்காகக் கொலைகாரனாக மாறுகிறான். அவனும் அவனுடைய தம்பியும் (பரத்) கொடூரமான கொலைகாரர்களாக உருவெடுக்கிறார்கள். திட்டமிட்டு அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்கின்றனர்.
பிணம் எரித்தல் என்கிற அத்தியாவசிய தொழில் செய்பவர்கள் மீது பொதுச் சமூகத்தினருக்கு ஏற்கெனவே இருக்கும் ஒவ்வாமையை அதிகரிப்பதாகவே இந்தச் சுடலை கதாபாத்திரமும் அவனது செயல்களும் அமைந்துள்ளன. குறிப்பாக அவன் சுடுகாட்டுக்கு உள்ளேயே பிறந்து வளர்வதால் கொலைகாரன் ஆனான் என்று காண்பிப்பது அப்படிப் பிறந்து வளர நேரிடும் குழந்தைகள் இதுபோல் மரணத்தை ரசிப்பவர்களாக அதற்காகக் கொலைசெய்பவர்களாக ஆவதற்கான சாத்தியம் உள்ளது என்ற கொடுமையான பிம்பத்தை அவர்கள் மீது வலிந்து சுமத்துகிறது.
‘நல்ல’ சிவாக்களும் ‘கெட்ட’ சுடலைகளும்
படத்தில் சுடலையின் அப்பாவான பிணம் எரிக்கும் தொழிலாளி பற்றிய அறிமுகத்தில், அவர் வேறு வேலை கிடைக்காததால் அந்தத் தொழிலைச் செய்யத் தொடங்கினார் என்று ஒரு வசனம் வருகிறது. அவருக்கு அது பரம்பரை வழிவந்த தொழில் அல்ல என்பதைக் குறிக்கும் அந்த வசனம், ஒடுக்கப்பட்ட சாதியினரை இழிவுபடுத்திவிட்டதாக விமர்சனம் எதுவும் எழாமல் தவிர்ப்பதற்கான எச்சரிக்கை உணர்வுடன் வைக்கப்பட்ட வசனமாக இருக்கலாம்.
இன்று பிழைப்புக்காகவேணும் பிணம் எரிக்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்து வயிற்றைக் கழுவ வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சமூக அடுக்கிலும் பொருளாதாரரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதும், சுடலை என்று பெயர் வைக்கும் வழக்கம் வேறு எந்தெந்த சாதியினரிடத்தில் பரவலாக இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கவை.
இந்து மத நம்பிக்கையின்படி சுடுகாட்டில் தவம் செய்யும் சிவனின் பெயர் சுடலை. இந்தப் படத்தின் நாயகன் பெயர் சிவா என்றிருப்பது யதேச்சையான தெரிவாகத் தெரியவில்லை. எப்போதும் சிவாக்களையே நல்லவர்களாகவும் சுடலைகளைத் தீயவர்களாகவும் சித்தரிக்கும் தமிழ் சினிமாவின் போக்கு தொடர்வது வேதனைக்குரியது. இப்போதுதான் கபாலிகள் நாயகன்களாகியிருக்கிறார்கள். சுடலைகள் நாயகன்களாக இன்னும் எத்தனை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரியாது.
பின்னோக்கிச் செல்லும் படைப்பாளிகள்
விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய ஆட்சேபத்துக்குரிய சித்தரிப்புகளுக்கு, முருகதாஸை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. திருநங்கைகள் பற்றிய நேர்மறையான சித்தரிப்புகள் வரத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘ஐ’ திரைப்படத்தில், ஒரு திருநங்கையை எப்போதும் பாலியல் வேட்கையுடன் திரிபவராகவும் அதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் என்பதுபோலவும் அவரைச் சித்தரித்திருந்தார் பெரிதும் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கர்.
கௌதம் மேனனின் பெரும்பாலான படங்களில் சமூக, பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்கள், கொடூரமான கொலைகாரர்களாக இருக்கின்றனர். 2015-ல் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தில், வட கிழக்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்துவரும் தொழிலாளிகள் மீது ஒரு கரிசனமான பார்வை ஏற்படும் வகையான சித்தரிப்பு இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான ‘டோரா’ என்ற பேய்ப் படத்தில் புலம்பெயர் தொழிலாளர்களையே கொடூரமான வில்லன்களாக, சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்பவர்களாகக் காண்பித்தார்கள்.
தனிநபர்களோடு நிற்பதில்லை
பொதுவாகப் பாத்திரப் படைப்பு சார்ந்து இப்படிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கும்போது, சம்பந்தப்பட்ட படைப்பாளியிடமிருந்தோ அவரை ஆதரிப்பவர்களிடமிருந்தோ வரும் எதிர்வினை ‘அது அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பு. அதை ஒரு சமூகத்துக்கோ பிரிவுக்கோ பொருத்திப் பார்க்கக் கூடாது’ என்பதே. ஆனால், ஏற்கெனவே பல விதமான சமூக ஒதுக்குதலையும் அவமானங்களையும் எதிர்கொள்ளும் விளிம்புநிலை மனிதர்கள் குறித்த இதுபோன்ற சித்தரிப்புகள், அந்தக் கதாபாத்திரத்துக்கு மட்டுமானவை என்று எடுத்துக்கொள்ள முடியாது. திருநங்கைகள், புலம்பெயர் தொழிலாளிகள். இழிவானவை என்று கருதப்படும் தொழில்களைச் செய்பவர்கள் ஆகியோரைப் பற்றிய இதுபோன்ற சித்தரிப்புகள், அந்தப் பிரிவினர் பற்றி ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுள்ள தவறான, பொதுமைப்படுத்தப்பட்ட பிம்பங்களை நிலைபெறச் செய்வதில் உளவியல்ரீதியான தாக்கத்தை உருவாக்கக்கூடியவை.
குரலற்றவர்களின் குரல்
புனிதப்படுத்தப்பட்ட அல்லது மரியாதைக்குரியவையாகப் பார்க்கப்படும் தொழில்களைச் செய்பவர்களில் ஒருவர், அவர் பிறந்து வளரும் சூழலால் இதுபோன்ற கொடூரமான கொலைகாரராக மாறுவதாகக் காண்பிப்பதும் பொதுச் சமூகத்தில் பலரைப் புண்படுத்தும் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. குறிப்பாக மத, சாதி அடையாளங்களைத் தரித்திருப்பவர்களைத் தீயவர்களாகக் காண்பித்தால் அந்த மதத்தினரும் சாதியினரும் மனதளவில் புண்படுகின்றனர், கோபமாக எதிர்வினையாற்றுகின்றனர். ஆனால், விளிம்புநிலை மனிதர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மிகச் சிலரே. பல இரைச்சல்களை மீறி அவர்களது குரல்கள் கொஞ்சமாவது ஒலித்ததால்தான் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்படுபவர்கள் பற்றிய கண்ணியமான சித்தரிப்புகள் ஆங்காங்கே வரத் தொடங்கியிருக்கின்றன. அந்தக் குரல் இன்னும் சத்தமாகவும் அழுத்தமாகவும் ஒலிக்க வேண்டியது தற்போதைய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT