Published : 20 Oct 2017 10:54 AM
Last Updated : 20 Oct 2017 10:54 AM
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் பிரபலமான இயக்குநர் ப்ரியதர்ஷன். தேசிய விருது பெற்றவர். கடந்த ஆண்டு வெளியான ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ என்ற மலையாளப் படத்தை ‘நிமிர்’ என்ற தலைப்பில் தமிழில் இயக்கி முடித்திருக்கிறார். படத் தயாரிப்புக்காகச் சென்னை வந்திருந்த அவருடன் உரையாடியதிலிருந்து...
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் தமிழரசு தயாரித்த ‘கோபுர வாசலிலே’ மூலம் தமிழில் அறிமுகமானீர்கள். இப்போது ‘நிமிர்’படத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலினை இயக்குகிறீர்கள்...
‘கோபுர வாசலிலே’ வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. 125 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படம். ஆனால், இந்தப் படத்தை அப்படித் திட்டமிட்டுச் செய்யவில்லை. ‘மகேஷிண்ட பிரதிகார’த்தைத் தமிழில் செய்ய முடுவெடுத்தவுடன் இந்தப் படத்துக்கு நட்சத்திர அந்தஸ்து உள்ள நாயகன் தேவையில்லை என்பதில் உறுதியுடன் இருந்தேன். மேலும், அன்றாடம் நாம் வெளியில் பார்க்கக்கூடிய சாமானியன்தான் இந்தப் படத்தின் கதாபாத்திரம். அதற்குப் பொருத்தமானவராக இருக்க வேண்டும். உதயநிதி பொருத்தமாக இருந்தார்.
‘மகேஷிண்ட பிரதிகாரம்’ தனித்துவமான மலையாள நகைச்சுவைப் படம். அதைத் தமிழில் மறு ஆக்கம் செய்யும்போது எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?
மறு ஆக்கம் செய்யும்போது, பொதுவாக மூலப் படத்தை அப்படியே எடுக்க மாட்டேன். உதாரணமாக ‘கிரீடம்’ படத்தை இந்தியில் செய்தபோது, அதை அந்த மொழிப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக இருக்குமாறு திரைக்கதையை மாற்றி அமைத்தேன். ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தையும் அப்படியே எடுக்கவில்லை.
உங்கள் படங்களின் நகைச்சுவை ‘இங்கிலீஷ் பாணி நகைச்சுவை’ . அது தமிழுக்கு ஏற்றதாகுமா?
நகைச்சுவை செய்தவற்காக நான் படம் எடுப்பதில்லை. என் கதாபாத்திரங்கள் அதைச் சிரித்துக்கொண்டு செய்வதில்லை. ‘கிலுக்கம்’ படத்தில் ஜெகதி ஸ்ரீகுமார் நடிக்கும்போது, அவருக்கு அது நகைச்சுவை இல்லை. வேதனைதான். நகைச்சுவை பார்வையாளர்களுக்குத்தான். நகைச்சுவை என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். அப்படித்தான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறேன்.
உங்கள் பெரும்பாலான வெற்றிப் படங்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டவை. ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படம் இடுக்கியைப் பின்னணியாகக் கொண்டது. ‘நிமிர்’ எப்படி?
தமிழ் நிலக் காட்சிகளை இயக்குநர் பாரதிராஜாவின் படங்களின் மூலம் கற்றுக்கொண்டேன். எனக்கு நெருக்கமான என்னுடைய நிலம்போல் தமிழ் நிலத்தை அவரது படங்கள் எனக்குச் சொல்லித் தந்தன. இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த இன்னொரு கொடுப்பினை இயக்குநர் மகேந்திரனுடன் பணியாற்றியது. அவரது ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’ போன்ற படங்களைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். குற்றாலம், தென்காசிப் பகுதிகளில் படமாக்கியிருக்கிறோம். ‘மகேஷிண்ட பிரதிகார’த்தில் எப்படி இடுக்கி பகுதியின் வட்டாரப் பேச்சு வழக்கைச் சித்திரித்தார்களோ, அதுபோல் இந்தப் படத்தில் தென்காசி, திருநெல்வேலிப் பகுதிகளின் வட்டார வழக்கைத் தத்ரூபமாகக் கொண்டுவந்திருக்கிறோம். இயக்குநர்கள் மகேந்திரன், சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இதற்குப் பக்க பலமாக இருந்தார்கள்.
இன்னசண்ட், நெடுமுடி வேணு உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலரும் உங்கள் படத்தில் பணியாற்றும்போது நெருக்கத்தை உணர்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்...
பொதுவாகப் படமாக்கும்போது நடிகர்களுடன் நட்பு பாராட்டுவதை முக்கியமாகக் கொள்கிறேன். இயக்குநர்-நடிகன் என்பதற்கு அப்பாற்பட்டு உருவாகும் நட்பு அவர்களை என்னிடத்தில் நெருக்கமாக்கும். அவர்கள் இயல்பாகப் பணியாற்ற இது அவசியம். அவர்களும் கடமைக்காக நடிக்க மாட்டார்கள். என்னுடன் உண்டானதுபோல ஒரு நெருக்கம் படத்துடனும் உருவாகும். இது, படத்துக்கும் வலுச்சேர்க்கும்.
மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் படமெடுத்துள்ளீர்கள். நான்கு வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை எப்படிக் கையாள்கிறீர்கள்?
மொழி, கலாச்சாரம் ஆகிய இரண்டு அம்சங்களைத்தான் மறு ஆக்கம் செய்யும்போது கணக்கில் எடுத்துக்கொள்வேன். மூலப் படத்திலுள்ள ஆத்மாவை மட்டும் எடுத்துக்கொண்டு மொழி, கலாச்சாரத்துக்காகத் திரைக்கதையை மாற்றியமைப்பேன். உலகம் முழுவதும் உணர்ச்சி ஒன்றுதான் என நம்புபவன் நான்.
மோகன்லால்-உடனான உங்கள் வெற்றிக் கூட்டணி பற்றி...
மோகன்லால் மட்டுமல்ல; இந்தியில் அக்ஷய்குமாருடனும் இதுபோல் பல வெற்றிப் படங்களைச் செய்திருக்கிறேன். அவரது வளர்ச்சியில் என் படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. பொதுவாக ஒரே குழு, நடிகர்களை வைத்துப் படம் செய்கிறேன் எனச் சொல்வதுண்டு. நமக்கு அனுகூலமான வட்டாரத்தில் பணியாற்றுவதன் மூலம்தான் படத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும். வெற்றிக்கும் வழிவகுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT