Last Updated : 20 Oct, 2017 10:54 AM

 

Published : 20 Oct 2017 10:54 AM
Last Updated : 20 Oct 2017 10:54 AM

நீர்க்குமிழி: ‘மயக்கும் மாலைக் கவிஞன்’

 

எம்

.ஜி.ஆர் - சிவாஜி இருவரும் நட்சத்திர நடிகர்களாக புகழ்பெற்றுவிட்ட அறுபதுகளின் தொடக்கம். சிவாஜி காங்கிரஸ் நடிகராகவும் எம்.ஜி.ஆர் திமுக நடிகராகவும் இருந்தார்கள். அரசியல் ரீதியாக துருவங்களாக விளங்கிய அவர்கள் இருவரும் இணைந்து, தமிழ் எழுத்துலகின் முதல் பொதுவுடைமை எழுத்தாளர் விந்தனின் திரைக்கதை, வசனத்தில் நடித்தார்கள். முதலும் கடைசியுமாக அவர்கள் இணைந்து நடித்தது அந்த ஒரே படம்தான். “அந்தப் படத்தின் உரையாடல் உஷ்ணம் நிறைந்த ஒன்றாக இருந்ததற்குக் காரணம், அதில் கம்யூனிசக் கருத்துக்களை நிரப்பி விந்தன் எழுதியிருந்ததுதான். அது பொதுவுடமைத் தோழர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துவிட்டது” என்று கவிஞர் வாலி பாராட்டிய அந்தப் படம் ‘கூண்டுக்கிளி’.

ஒரு பெண்ணுக்கு உரிமைகொண்டாடும் இரண்டு ஆண்களையும் அவர்களின் நடுவே சிக்கி, தன் நிலையை நிலைநாட்டப்போராடும் ஒரு சாமானியப் பெண்ணையும் கதாபாத்திரங்களாகச் சித்தரித்த துணிச்சல் மிக்க கதை, திரைக்கதையை ‘கூண்டுக்கிளி’ படத்துக்கு எழுதி, அதற்கு உரையாடலையும் மூன்று பாடல்களையும் எழுதினார் விந்தன்.

‘கூண்டுக் கிளிக்காக’ விந்தன் எழுதிய பாடல் ஒன்றில்…

‘மண்ணும் பொன்னும் மாயை என்று மக்களுக்கு சொல்லிவிட்டு..

பெண்ணைப் பார்த்து கண்ணடித்தல் சரியா தப்பா?

விண்ணுல ஆசையின்றி விரும்பும் பெண்ணை நேசத்தோடு

கண்ணியமாய் காதலித்தால் சரியா தப்பா?“

ஆகிய நான்கு வரிகளை தணிக்கைத் துறை தடை செய்தது. இந்த நான்கு வரிகளும் படத்திலிருந்து நீக்கப்பட்டாலும் ரெக்கார்டுகளில் இந்த வரிகள் இடம்பெற்று, இந்த வரிகளை எழுதிய அந்தக் கவிஞன் யார் என்று கேட்கவைத்தன. கவிதைகள் வழியாகவே எழுத்துலகில் இடம்பிடித்த விந்தன், ‘பாட்டாளிகளின் படைப்பாளி’யாக பெயர்பெற்றது தன் கதைகளின் வழியாக.

ஒரு தொழிலாளி படைப்பாளியாக…

செங்கல்பட்டை அடுத்த நாவலூரில் வேதாசலம்-ஜானகியம்மாள் என்ற ஏழைத் தம்பதியின் மூத்தமகனாக 22.09.1916-ல் விந்தன் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் கோவிந்தன். ஆறாம் வகுப்பு வரை பயின்ற விந்தன், அதன்பின் குடும்பச்சூழல் காரணமாக அப்பாவுடன் ஒரு கூலித் தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். மகனின் கற்கும் ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை இரவுப் பள்ளியில் சேர்ந்தார்.

20chrcj_Vinthan விந்தன் right

ஓவியக் கலையின் பெருவிருப்பம் கொண்டிருந்த மகனை சென்னைக்கு அனுப்பிவைத்தார் வேதாசலம். தன் சொந்த முயற்சியால் சென்னை எழும்பூர் ஓவியக் கல்லூரியில் விந்தன் சேர்ந்தார். அங்கும் அவரை வறுமை துரத்தியதால் தூரிகையை பாதி வண்ணத்துடன் கீழே வைத்துவிட்டு, குடும்பத்துக்காக அச்சகத் தொழிலாளியாக தமிழரசு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கிருந்து, ‘ஆனந்த விகடன்’ அச்சகத்தில் பணிக்கு மாறினார். விகடனில் வேலை செய்துகொண்டே ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு கவிதைகள் எழுதினார். பின்னர் விகடனிலிருந்து கல்கி அச்சகத்துக்கு மாறினார். அச்சகப் பணியாளராக இருந்தபோதும் தனது ஊழியரின் எழுத்தார்வத்தை மதித்தது கல்கி வளாகம். கல்கி வார இதழின் பாப்பா மலர் பகுதியில் வி.ஜி. என்ற பெயரில் கோவிந்தன் எழுதிய சிறுவர் கதைகள், அறிவுக்களஞ்சியக் கட்டுரைகள் வாசர்களைக் கவர்ந்தன. ஆசிரியர் கல்கி இவரது எழுத்தாற்றலைக் காலத்தே கண்டுணர்ந்து பாராட்டியதோடு நில்லாமல், கோவிந்தன் என்ற அவரது பெயரைச் சுருக்கி ‘விந்தன்’ எனச் சூட்டினார். ‘கல்கி’ இதழின் ஆசிரியர் குழுவிலும் விந்தனைச் சேர்த்துக்கொண்டார்.

தன்னை உலகறிய வைத்த கல்கியின் மாணவராகவே விந்தன் தன்னை எண்ணிக்கொண்டார். தன்னைக் கண்டெடுத்த கல்கிக்கு தன் முதல்நூலைச் சமர்ப்பணம் செய்தார். அதுமட்டுமல்ல, பாட்டாளி வர்க்கத்தின் வலியை தன் படைப்புகளில் எளிய தமிழில் படைத்த விந்தன், சரித்திர நாவல் எதையும் எழுதியல்லை. ஆனால், தனது ஆசானை கவுரவப்படுத்தும் விதத்தில் முதன்முதலாக திரையில் உயிர்பெற்ற அமரர் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’(1960) படத்துக்கு மிகச் சிறந்த முறையில் வசனம் எழுதினார். ஏனோ அப்படம் வெற்றிபெறவில்லை.

கனவுக் கன்னிக்கு பிடித்த எழுத்துக்காரர்

விந்தன் தமிழ்த்திரைக்கு வசனமும் பாடலும் எழுத வந்தபோது கண்ணதாசன் பிரபலம் ஆகவில்லை. பாட்டாளிகளின் வயிற்றுப்பாட்டையும் வர்க்கப் போராட்டத்தையும் எழுதிய பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டையாரும் திரையில் நுழைந்திராத அக்காலத்தில், ஏழையின் பாடலை ஜோடனை இல்லாமல் எடுத்துவைத்ததில் பட்டுக்கோட்டைக்கே அண்ணன் என்று விந்தனைக் கூறலாம். அப்படிப்பட்டவர் திரையில் புகழ்பெறக் காரணமாக இருந்தவர் 40-களின் கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரி.

விந்தனின் எழுத்துக்களை கல்கியில் தொடர்ந்து வாசித்து அவரது ரசிகையாக இருந்த இவர், தனது சகோதரர், இயக்குநர் ராமண்ணாவுடன் இணைந்து ஆர்.ஆர்.பிக்ஸர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘வாழப் பிறந்தவள்’ என்ற படத்தை தயாரித்தபோது, “இந்தக் கதைக்கு விந்தன் வசனம் எழுதட்டும்” என்று டி.ஆர்.ராமண்ணாவிடம் பரிந்துரைத்தார். ராஜகுமாரியின் பரிந்துரைக்குக் காரணம், தனது எழுத்துக்களில் பெண்களுக்கு விந்தன் கொடுத்த முக்கியத்துவம்.

படம் மாறிய பாடல்

“சினிமா உலகிலும் அரசியல் உலகிலும் பத்திரிகை உலகிலும் எனக்கிருந்த மாயையை நீக்கிய மகத்தான ஒளிக்கீற்றுக்குப் பெயர் விந்தன்” என்று எழுத்துலகச் சக்கரவர்த்தி ஜெயகாந்தன் வியந்து கூறியிருக்கிறார். ஆனால் நடிகர்களின் கையில் சிக்குண்ட 60-களின் தமிழ் சினிமாவில் ஒரு கலகக்காரராக விந்தனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சினிமாவில் தையல் தொழிலாளியாக இருந்து தயாரிப்பாளர், இயக்குநராக உயர்ந்த எம்.நடேசன் இயக்கம், தயாரிப்பில் சிவாஜி – பத்மினி நடித்த ‘அன்பு’ படத்தில்

’ஒன்னும் புரியவில்லை தம்பி… எனக்கு

ஒன்னும் புரியவில்லை தம்பி..

கண்ணு ரெண்டும் சுத்துது

காதை அடைக்குது

கஞ்சி கஞ்சி என்று வயிறு

கெஞ்சி கெஞ்சி கேட்குது…’

என வறியவனின் வயிற்றுப் பசியை எல்லோருக்குமான எளிய தமிழில் எழுதி, முதலாளி வர்க்கத்தின் மனசாட்சியை சாட்டையால் விளாசினார்.

‘அன்பு’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, டி.ஆர். ராஜகுமாரியின் நிறுவனத்துக்கு இம்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படம்தான் ‘கூண்டுக்கிளி’. இந்தப் படத்துக்காக விந்தன் எழுதிய ஒரு பாடலைப் பயன்படுத்தாமல் அப்படியே கைவசம் வைத்துக்கொண்டார் ராமண்ணா. அந்தப் பாடலை அடுத்து பிரம்மாண்டமாகத் தயாரித்த ‘குலேபகாவலி’ என்ற படத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையில் பயன்படுத்திக்கொண்டார். அந்தப் பாடல்தான், இந்த இசை இரட்டையர்களுக்கு ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டத்தை கொண்டுவந்து சேர்க்க காரணமாக அமைந்த ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ…’ பாடல். இதை எம்.எஸ்.வியே தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

எழுத்தில் சாதனை திரையில் வேதனை

1951-ல் கல்கியிலிருந்து விடுபட்டு திரையுலகில் நுழைந்த விந்தன், அங்கே தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த எம்.நடேசன், மாவன்னா ஆச்சாரி ஆகியோரின் பரிந்துரையுடன் பி.யு.சின்னப்பா தயாரித்த ‘வானவிளக்கு’ படத்துக்கு வசனம் எழுதினார். ஆனால் படம் பாதியில் நின்றுபோனது. அதன் பிறகே ‘அன்பு’ படத்துக்காக அழைக்கப்பட்ட விந்தன், ஏழு படங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதினார். பின்னர் ‘மனிதன்’ பத்திரிகையைத் தொடங்கிய அவர், தனது திரையுல அனுபவங்களை ‘தெருவிளக்கு’ என்ற தலைப்பில் அதில் தொடராக எழுதினார்.

உண்மைகளை ஒளிக்காமல் எழுதியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து, அந்தத் தொடரை நிறுத்த வேண்டிய நிலையில் பத்திரிகையும் நின்றுபோனது. என்றாலும் எழுத்துலகில் சாதனைகளை படைத்த விந்தன், திரையுலக்குத் தேவைப்படும் பொய்மையை தனது பேனா மையில் கூட பூசிக்கொள்ள விரும்பாததால் ஒதுக்கப்பட்டார். எம்.ஆர்.ராதாவை இவர் கண்ட நீண்ட பேட்டியும், எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை இவர் தொடராகப் பதிவு செய்ததும் படைப்புக்கு அப்பாற்பட்ட பத்திரிகை திரை எழுத்தில் ஆக்கபூர்வமானவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x