Published : 13 Oct 2017 10:15 AM
Last Updated : 13 Oct 2017 10:15 AM

பொன்னியின் செல்வன் என் கனவு! - அட்லி நேர்காணல்

தே

னாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம், விஜய் நடிக்கும் 61-வது படம் ஆகிய ‘அடைமொழி’களோடு தனது ஹாட்ரிக் வெற்றியைக் குறிவைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அட்லி. கடந்த 2013-ல் வெளியான ‘ராஜா ராணி’ படத்தை இயக்கியதற்காகச் சிறந்த புதுமுக இயக்குநருக்கான விஜய் டி.வி. விருதுபெற்ற இவர், தனது இரண்டாவது படத்திலேயே விஜயை இயக்கி வியக்கவைத்தவர். தற்போது இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகப் பொருட்செலவு, ‘பாகுபலி’ கதாசிரியர் கே.வி. விஜயேந்திர பிரசாத்தை படத்தின் திரைக்கதையில் பணியாற்ற வைத்தது, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, மூன்று முன்னணிக் கதாநாயகிகள், பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு எனத் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்த அறிவிப்பைத் தாண்டி ‘மெர்சல்’ படத்தைப் பற்றிப் பேச வைத்திருக்கிறார்… தீபாவளிக்குப் படம் வெளியாகவிருக்கும் நிலையில் இறுதிக்கட்ட படப் பணிகளில் இருந்தவர் நமக்களித்த பிரத்யேகப் பேட்டி.

விஜய் ரசிகன் என்று உங்களைப் பலமுறை கூறியிருக்கிறீர்கள். ஒரு ரசிகனாக இருந்துகொண்டு அவருக்காக உருவாக்கிய கதைபோல ‘தெறி’ இருந்தது. ஆனால், ‘மெர்சல்’ படத்தின் டீஸர் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது அதில் வரும் அப்பா, மகன் விஜய் கதாபாத்திரங்கள், பாடல் வரிகள் போன்றவை வேறு ஏதோ முக்கியமான ஒன்றைச் சொல்ல வருகின்றன. ‘மெர்சல்’ அரசியல் படமா?

விஜய் அண்ணாவுக்காக உருகி உருகி எழுதிய கதைதான் ‘தெறி’. ஆனால், மெர்சல் வேற லெவல். முதல்ல, இது அரசியல் படம் கிடையாது. மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவிருக்கும் ஒரு படம். ஒரு ரைட்டராக விஜயை எவ்வளவு லவ் பண்ண முடியுமோ அவ்வளவு லவ் பண்ணி இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். ஒரு கிராமத்தோட தலைவராக, ‘தளபதி’ என்ற கதாபாத்திரத்தில் வரும் அப்பா விஜய் கதாபாத்திரம் இதுவரை பார்க்காத ஒரு விஜய் அண்ணாவையும், இதுவரை அவரது படங்களில் இடம்பெறாத கதைக் களத்தையும் காட்டும். இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமல்ல, மொத்தப் படமுமே அவரோட ரசிகர்களுக்குத் தீபாவளி விருந்துதான்.

மக்கள் வாழ்க்கையிலிருந்துதான் கதைகளை எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். மெர்சல் படத்தின் கதையும் அப்படித்தானா, இல்லை இதில் கற்பனை அதிகமா?

ஆனால், திரைக்கதை ஆக்கத்துக்கு ‘பாகுபலி’யின் கதாசிரியர் கே.வி. விஜயேந்திர பிரசாத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்களே?

‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தைப் பார்த்தபோது அந்தப் படத்தின் கதையும் திரைக்கதையும் ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டன. விஜயேந்திர பிரசாத் சாருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். அது இந்தப் படத்துக்கு அமைந்துவிட்டது. மறக்க முடியாத அனுபவம். திரைக்கதையில் அவரது கணிசமான பங்களிப்பு இருக்கிறது.

ஷங்கரின் உதவியாளர் என்பதைக் காட்டும் வகையில் ‘மெர்சல்’ படத்தின் டீஸர் காட்சிகளில் படத்தின் பிரம்மாண்டம் தெரிகிறது. ஆனால், ‘பாகுபலி’ போல வரலாற்றுக் களத்தில் விஜய் போன்ற நடிகர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா?

வரலாற்றுப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை. ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. பட்ஜெட்டும் நட்சத்திரங்களும் அமைந்தால் அதுபோன்ற ஒரு வரலாற்றுப் பிரம்மாண்டத்தைத் திரையில் கொண்டுவர இப்போது வயது இருக்கிறது. காலமும் சூழ்நிலையும் எனக்குத் தரும் வாய்ப்புகளைப் பொறுத்துத்தான் எல்லாமே.

நடிப்பில் விஜயை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் படமாக ‘மெர்சல்’ இருக்கும் என்ற பேச்சு உலா வருகிறதே?

நடிப்பில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் விஜய் அண்ணா பண்ணிவிட்டார் என்றுதான் சொல்வேன். நடிப்பில் அவர் செய்த எல்லா சிறந்த தருணங்களையும் இந்தப் படத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். அது சாத்தியமாகிவிட்டது. எல்லோருக்கும் பிடித்தமான விஜய் அண்ணாவுக்கு இன்று இருக்கும் சோஷியல் இமேஜை நான் எப்படி கேபிடலைஸ் செய்திருக்கிறேன், எனது மூன்றாவது படமாக இதில் என்னை நானே முந்தியிருக்கிறேனா இல்லையா என்பதைப் படம் வெளியான பிறகு நீங்களும் மக்களும் கூற வேண்டும்.

மேஜிக் கலைஞர், மல்யுத்த வீரர் என்று விஜய் பல கலைகளில் நிபுணர்போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இவை படம் முழுவதும் வருகின்றனவா?

13CHRCJ_Mersal-image-03100 

12 விதமான மேஜிக்குகளைத் தனது சொந்த முயற்சியில் விஜய் அண்ணா கற்றுக்கொண்டு அவற்றை அப்படியே செய்திருக்கிறார். மேஜிக்கை கிராஃபிக்ஸ் செய்து காட்ட வேண்டாம் என்று நானும் அவரும் விரும்பினோம். அதனால், அவர் அதிக விருப்பத்துடன் மேஜிக்கைக் கற்றுக்கொண்டார். மல்யுத்தமும் அப்படித்தான். இந்தப் படத்தில் விஜய்க்கு எந்தக் காட்சியிலும் டூப் கிடையாது. பஞ்ச் வசனங்களும் கிடையாது. இந்தக் கதைக்கு அவை அவசியமில்லாமல் போய்விட்டன.

வெள்ளை வேட்டி, முறுக்கு மீசை, மெல்லிய தாடி, நெற்றியில் பட்டை, கழுத்தில் உத்திராட்சம் என்ற தோற்றத்துக்கு எடுத்ததுமே ஒத்துக்கொண்டாரா விஜய்? அல்லது இது அவரே விரும்பி உருவாக்கிக்கொண்ட தோற்றமா?

இருவரும் பேசித்தான் இப்படி இருக்கலாம் என்று முடிவு செய்தோம். இந்தத் தோற்றம் விஜய் அண்ணாவின் கதாபாத்திரங்களில் என்றைக்கும் மறக்க முடியாததாக அமையப்போவது மட்டும் உறுதி. இந்தத் தோற்றதுக்காக நான்கு நாட்கள் டெஸ்ட் ஷூட் நடத்தி இறுதியில் எப்படி வர வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றியபோதே ஏ.ஆர்.ரஹ்மானுடன் நட்பு ஏற்பட்டதா?

அதற்கு வாய்ப்பே இல்லை. ஷங்கர் சாரும் ரஹ்மான் சாரும் படத்தின் பாடல்கள் பின்னணி இசைக்காகத் தனியேதான் சந்தித்துக்கொள்வார்கள். பிறகு பாடல்களை எங்களைக் கேட்கவைத்து கருத்துக் கேட்பார். ‘கணிதன்’ படத்தின் இசை வெளியீட்டில்தான் ரஹ்மான் சாருடன் அறிமுகம் ஏற்பட்டது. அது தொடர்ந்தபோது ‘மெர்சல்’ படத்தின் கதை பிடித்தால் இசை அமையுங்கள் என்று கேட்டேன். கதை மிகவும் பிடித்துப்போய் ஒப்புக்கொண்டார்.

பெரிய இயக்குநர்களே இன்று கதாநாயகிகளை ஊறுகாய் மாதிரி பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். நித்யா மேனன், சமந்தா, காஜல் என்று மூன்று கதாநாயகிகளுக்குப் படத்தில் நியாயம் செய்திருக்கிறீர்களா?

ஒன்று அல்லது இரண்டு முக்கிய கதாபாத்திரத்தை சப்போர்ட் செய்யத்தான் மற்ற கதாபாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படிப் பார்க்கும்போது எனது முந்தைய படங்களில் கதாநாயகிகளுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை இதிலும் கொடுத்திருக்கிறேன். ஆனால், மூன்று கதாநயாகிகளுமே பாட்டுக்காக வந்துபோகும் கதாபாத்திரங்கள் கிடையாது. மூவரில் முக்கியமான ரோல் நித்யா மேனனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது அல்லது அவருக்குப் பொருந்திவிட்டது என்று சொல்வது சரியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x