Published : 29 Sep 2017 12:13 PM
Last Updated : 29 Sep 2017 12:13 PM
கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி. இரண்டு தலைமுறை இசை ரசிகர்களால் நிரம்பி வழிந்தது சென்னையின் காமராஜர் அரங்கம். ‘என்னுள்ளே எம்.எஸ்.வி’ என்ற தலைப்பில் இளையராஜா இசையஞ்சலி செலுத்திய அந்த இரவில் ரசிகர்களில் ஒருவனாக நானும் அங்கே அமர்ந்திருந்தேன். தன் இசையஞ்சலியைத் தொடங்கும்முன் இளையராஜா பேசினார்..
“ எம்.எஸ்.வி இசையுலகில் ஒரு மாமேதை. அவர் இசையமைத்த பாடல்கள் என்று தெரியாத பருவத்தில் அவரின் இசையால் ஈர்க்கப்பட்டேன். என் இளமைக் காலத்தை அவரது பாடல்களின் வழியேதான் கடந்து வந்தேன். ‘குலேபகாவலி’படத்தில் அவர் இசைத்த “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ…போ..” பாடலை இப்போதைய சூப்பர் ஸ்டார்களுக்கு போட முடியாது. இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் காலகட்டமாக அது இருந்தது. அந்த காலத்துப் பாடல்களை இப்போதும் பாடலாம். ஆனால் இன்றைய பாடல்களை பாட முடியாது. இளம் இசையமைப்பாளர்களே… கம்ப்யூட்டர் இசையைப் பயன்படுத்தாதீர்கள், அதைத் தூக்கி எறியுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்” என்று பேசினார். அவரது பேச்சு எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. கணினி எனும் தொழில்நுட்பம் இல்லாமல் இளையராஜா உட்பட இன்று யாராலும் இசையை ஒலிப்பதிவு செய்யவோ, இசைக்கோவையை தொகுக்கவோ முடியாது. இன்றைய கணினி இசைத்துறையில் தொழில்நுட்பமும் இசையும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
கணினி இசைத் தொகுப்பி
இளையராஜாவிடம் ரஹ்மான் பணியாற்றியபோது ‘சேம்பிளர்’, ‘மிடி’ கீபோர்டு மட்டுமல்ல; ‘ரோலேண்ட் எம்.சி.500(Roland MC500) என்ற சீக்குவென்ஸர்(Music sequencer) கருவியையும் பயன்படுத்தினார். இதை ஒரு இசைத் தொகுப்பு மற்றும் பதிவுக் கருவி எனலாம். அல்லது இசைத் தொகுப்பி என்று அழகு தமிழில் அழைக்கலாம். அன்று இதைக்கொண்டு என்ன செய்தார்கள்? ஒரு பாடலை இசையமைப்பாளர் முழுவதுமாக உருவாக்கிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். பாடலின் மெட்டும், வரிகளும் பாடகரின் குரலும் அதன் இதயம் போன்றது என்றால். ரத்த ஓட்டம் போன்றது ஒரு பாடலின் இசைகோவை. அதன் ஒரு பகுதியாக இடம்பெறும் ரிதம் எனப்படும் தாளக்கட்டு(Rhythm), அதன் மற்றொரு பகுதியாகிய ‘கீஸ்’ எனப்படும் உபரி ஒலிகள்(Keys) ஆகியவற்றை அழகியல் கெடாமல் ஒரே கோவையாக தொகுத்து இந்த சீக்வென்ஸரில் பதிவு செய்துகொள்ளலாம். குரலையும் ஒலிகளையும் கணினித் தொழில்நுட்பம் வருவதற்குமுன்புவரை துல்லியமாக ஒத்திகைபார்த்து பாடகர்கள் பாட, வாத்தியக் கலைஞர்கள் அவரவர்க்குத் தரப்பட்ட இசைக்குறிப்புகளை சரியான இடங்களில் வாசிக்க மேக்னடிக் ஸ்பூல் டேப்பில்((magnetic spool tape recording) நேரடியாகப் பாடல் பதிவு செய்யப்பட்டது.
இப்படிச் செய்யும்போது பாடுவதிலோ, வாத்தியங்களை இசைப்பதிலோ தவறுநேர்ந்தால், மீண்டும் தொடக்கத்திலிருந்து ஒலிப்பதிவு செய்ய வேண்டி இருக்கும். அதேபோல் ஒலிப்பதிவு செய்து முடித்ததும் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்ய நினைத்தால் பாடகர், வாத்தியக் கலைஞர்களை மீண்டும் அழைத்து ரெக்கார்டிங் தியேட்டரில் அமரவைத்து மறுபதிவு செய்யவேண்டும். ஆனால் கணினி தொழில்நுட்பத்துடன் உருவான சீக்வென்ஸரில் இதுபோன்ற மாற்றங்களை எளிதாகச் செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல; இசையமைப்பாளர் ஒரு பாடலுக்கான இசையை உருவாக்கும்போது தனது கற்பனையில் உருவாகும் அனைத்தையும் சீக்வென்ஸரில் பதிவுசெய்து வைத்துக்கொண்டு தேவைக்கும் அழகியலுக்கும் ஏற்ப பயன்படுத்தலாம். ரஹ்மான் ‘புன்னகை மன்னன் ’ படத்தில் பணியாற்றியபோது ஐந்து ஒலித்தடங்களில்(tracks)ஒலிகளையும் பிரித்து, தொகுத்து, பதிவுசெய்யும் வசதிகொண்டதாக ‘ரோலேண்ட் எம்.சி.500’ சீக்வென்ஸர் இருந்தது. இன்று நூற்றுக்கும் அதிகமான ஒலித்தடங்களில் இசையைத் தொகுத்து பதிவு செய்யும் தொழில்நுட்ப வசதி வந்துவிட்டது. அதைப்பற்றிப் பார்க்கும்முன் இளையராஜாவின் கோபத்துக்கு வருவோம்..
கற்பனையே பிரதானம்
தன் கற்பனையில் உருவாகும் மெட்டைப் பிரசவிக்க இசையமைப்பாளர் தனக்கு மிகவும் பிடித்த எந்த இசைக் கருவியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் அவரிடம் கற்பனை இருந்தால்தான் இசை பிறக்கும். இன்னும் சொல்லப்போனால் கணினி இசையைப்
பயன்படுத்தும்போது கற்பனையின் எல்லையை விரித்துக்கொள்ள தொழில்நுபம் உதவும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். பிறகு இளையராஜா ஏன் இப்படிப் பேசினார் என்று நான் யோசித்துப் பார்த்தபோது ஒன்று தெளிவாகப் புரிந்தது. இளையஸ்ராஜா கொஞ்சம் கோபத்துடன் கூறிவிட்டாலும் ‘கம்ப்யூட்டர் இசையே வேண்டாம்’ என்ற முடிவுக்கு அவர் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒருசில புதிய இசை அமைப்பாளர்கள் கணினி இசையில் இன்று குவிந்துகிடக்கும் சேம்பிளர் மென்பொருட்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக்கொண்டு கற்பனையை தூரமாகத் தள்ளி வைத்து வண்டி ஓட்டுகிறார்கள். அவர்களைப் பார்த்து. ‘நீங்கள் கொஞ்சம் மூளையையும் பயன்படுத்தி இசை அமையுங்கள்’ என்பதைத்தான் அவர் அப்படிக் கூறினார் என்று எடுத்துக்கொண்டேன். அப்படிப் பார்த்தால் அவரது கோபம் நியாயமானதுதான்… அப்படியானால் சேம்பிளர் மென்பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு கீபோர்ட் மட்டுமே வாசிக்கத்தெரிந்த ஒருவர் இசையமைத்துவிடமுடியுமா?
(ரகசியம் மேலும் உடையும்)
தொடர்புக்கு tajnooormd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT