Published : 20 Oct 2017 11:08 AM
Last Updated : 20 Oct 2017 11:08 AM

திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்)

பி

ரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் மலையாள நடிகர் திலீப். சிறைக்குச் செல்வதற்கு முன் இவர் நடித்த படம் ‘ராமலீலா’. அக்டோபர் 13 அன்று வெளியான ‘ராமலீலா’, நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பான வசூலையும் குவித்து வருகிறது. அருண் கோபி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி.

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) அக்கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிப்படையான எதிர்ப்பையும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் வாய்ப்பைப் பறிகொடுத்தவர்களின் மறைமுக எதிர்ப்பையும் மீறி, அதிக ஆதரவாளர்களைப் பெற்று வெற்றிவாய்ப்பை நோக்கி நகர்கிறான். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொலைப்பழி ராமன் மீது விழுகிறது. அதிலிருந்து ராமன் மீண்டானா, உண்மையான கொலையாளி யார், தேர்தல் முடிவு என்ன ஆகிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் புறப்படுகிறது திரைக்கதை.

கேரளத்தில் கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொன்றுதொட்டுத் தொடரும் அரசியல் பகை, அந்தந்தக் கட்சிகளுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களின் முகம், அரசியல் போட்டியில் விரவிக் கிடக்கும் வன்மம் பழிவாங்கும் உணர்ச்சியாக நிறம் மாறுவதைப் படத்தின் முதல் பாதி மிகத் துல்லியமாகத் தேர்ந்த திரைமொழியுடன் பதிவு செய்தபடி நகர்கிறது. குறிப்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பும் வெறுப்பும் மிரட்டல்களும் கட்சியின் இறுக்கமான கட்டமைப்பைப் பற்றிய விமர்சனமாகப் பதிவாகின்றன. அதேநேரம் படத்தின் முடிவு கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பெருமைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ராமன், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்பலாக வந்து அவனது வீட்டுக்குள் கற்களை எறிகின்றனர். அப்போது ஒரு மூத்த உறுப்பினர் “சகாவு ராகினி (ராமனின் அம்மா) வீட்டில் கல்லெறியாதீர்கள்” என்று சொன்னவுடன் அனைவரும் நிறுத்திவிடுகின்றனர். அப்போது வெளியே வரும் ராகினி (ராதிகா) “இது வர்க்க வஞ்சகன் ராமனின் வீடு; கல்லெறிவதை நிறுத்தாதீர்கள” என்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியினரின் தீவிர கொள்கைப் பிடிப்பை இப்படி ஒரு தாய்க் கதாபாத்திரத்தின் மூலம் பதிவுசெய்திருப்பது படத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்று. அம்மாவும் மகனும் தேர்தல் களத்தில் அரசியல் எதிரிகளாக நிறுத்தப்படுவதும் திரைக்கதையின் சுவாரசியமான திருப்பம்.

முதல் பாதியில் அரசியல் படமாக இருக்கும் ராமலீலா, இரண்டாம் பாதியில் மர்மப் படமாக மாறிவிடுகிறது. மர்மப் படம் என்கிற அளவில் திருப்பங்களும் சுவாரசியமும் நிறைந்திருக்கின்றன. என்றாலும் முதல் பாதியில் கேரள அரசியலை அவ்வளவு விரிவாகப் பதிவுசெய்தது எதற்காக என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால், படத்தின் இறுதியில் வரும் எதிர்பாராத் திருப்பம் அவ்வளவு நீண்ட அரசியல் கள விவரிப்பை நியாயப்படுத்துகிறது. படத்தின் சில திருப்பங்கள் ஊகிக்கக்கூடியவையாக இருப்பதும் சில தர்க்கப்பூர்வமான கேள்விகள் எழுவதும் குறிப்பிடத்தக்க குறைகள்.

அரசியல் தந்திரம், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் சாதுர்யம் மிக்க கதாபாத்திரத்தில் திலீப் அசத்தியுள்ளார். மகன் மீது கொலைப் பழி விழுவதைத் தாங்கிக்கொள்ள முடியாவிட்டாலும், கட்சிக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு எதிராக இருக்க வேண்டிய தர்மசங்கடத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் ராதிகா. திலீப்பின் தேர்தல் உதவியாளராக இருந்து அவருடன் கொலைக் குற்றச்சாட்டில் அகப்பட்டுக்கொள்பவராக வரும் கலாபவன் ஷாஜன் இரண்டாம் பாதியில் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார்.

பெரிதும் இரு துருவமயப்பட்ட கேரள அரசியல் அனலின் பின்னணியில், ஆர்வத்தைக் கூட்டும் மர்மமும் திருப்பங்களும் ஊகிக்க முடியாத முடிவும் கொண்ட சுவாரசியமான த்ரில்லர் படம் ‘ராமலீலா’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x