Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
வீட்டில் தரை துடைக்க, பாத்திரம் கழுவப் பயன்படுத்தப்படும் சவுக்காரங்களுக்கான (soaps)விளம்பரங்களைத் தொலைக் காட்சியில் பார்த்திருப்போம். தரையில்நிறைய கிருமிகள் நெளிந்து கொண்டிருக்கும். ஒரு பூதக் கண்ணாடி வைத்து அவற்றைப் பெரிதுபடுத்திக் காட்டுவார்கள். இவை அனைத்தும் வெறும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்கள்.
நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணு யிர்கள் எல்லாமே நோய்க்கிருமிகள்தானா? அதாவது, நுண்ணுயிர்கள் அனைத்தும் நமக்குத் தீங்கு விளைவிப்பவையா? நாவல் கரோனா வைரஸ் நம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் காலத்தில், இந்தக் கேள்வி எல்லோருக்கும் தோன்றிவிடுகிறது.
நுண்ணிய உலகம்
நுண்ணுயிர்கள் என்றால் என்ன? ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோமீட்டர். தோராயமாக, 50 மைக்ரோமீட்டருக்கு மேற்பட்ட அளவுடன் ஒரு பொருள் இருந்தால், நம்மால் அவற்றை நுண்ணோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும். பெரும்பாலான நுண்ணுயிர்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது. நுண்ணுயிர்கள் ஒரு செல் உயிரியாகவும் இருக்கலாம், சில மைக்ரோமீட்டர் அளவிலும் இருக்கலாம். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாசி என்று பலவகையான நுண்ணுயிர்கள் இருக்கின்றன.
இன்று கறுப்பு, வெள்ளை, பச்சை என்று பல வண்ணப் பூஞ்சை நோய்களை கரோனா தொற்றோடு தொடர்புபடுத்திக் கேள்விப்படுகிறோம். நாம் விரும்பி உண்ணும் காளான்கூட, பூஞ்சை இனத்தைச் சேர்ந்ததுதான். ஞெகிழி விரைவில் மக்காத பொருள் என்கிறோம். சரி, மக்கும் பொருள்கள் என்று சொல்லப்படும் காகிதம், மரப்பொருள்கள் போன்றவை எப்படி மக்குகின்றன? அந்தச் செயல்பாட்டில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதே வேளை, உடலில் வெட்டுக் காயம் பட்டால் பாக்டீரியா தொற்று உண்டாகும். அதனால், காயம் குணமாகாது என்பதால் பாக்டீரியாவை அழிக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை மருத்துவர் கொடுப்பார். இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்த மருந்துகளோடு குடல் புண்ணாகாமல் இருப்பதற்கும் சேர்த்தே அவர் மருந்து கொடுப்பார். அதற்குக் காரணம், நம் குடலில் செரிமானத்துக்கு உதவும் பல நல்ல பாக்டீரியா வகைகள் உள்ளன. நுண்ணுயிர்க்கொல்லி மருந்து கொடுக்கும்போது, செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியா வகைகளும் அழியும் சாத்தியமுள்ளதால், குடல் புண்ணாகும். இதைத் தடுக்கவே குடல் புண்ணாகாமல் இருப்பதற்கும், புரோ-பாயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாவை உண்டாக்கும் மருந்துகளையும் மருத்துவர் சேர்த்தே கொடுப்பார்.
என்ன செய்கின்றன?
நாவல் கரோனா வைரஸ் நம்மைக் கொடுங்காலத்தில் தள்ளியிருக்கிறது. அதனால், வைரஸ் என்கிற பெயரைக் கேட்டாலே ஆறு மீட்டர் தள்ளி நிற்கத் தொடங்கிவிடுகிறோம். அதே வேளை, நம் உடலிலேயே கோடிக்கணக்கில் நல்ல வைரஸ் வகைகள் உள்ளன. பாக்டீரியோபேஜ் எனப்படும் வைரஸ், பாக்டீரியாவைக் கொல்லும். இதனால், நம் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வகைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட பாக்டீரியா வகையை அழிக்கும் மருந்தாகவும் இந்த வைரஸ் பயன்படுத்தப்படுகிறது. சில வைரஸ் வகைகள், புற்றுச் செல்கள் இருப்பதைக் கண்டறிந்து நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்துக்குச் சொல்கின்றன. அதனால், நம் உடல்நலம் காக்கப்படுகிறது.
இன்னும் அடுத்த படியில், மனித மரபணுவிலேயே வைரஸின் மரபணு எட்டு சதவீதம் இருக்கிறது. இதன் காரணமாகவே நம் செல்களால் நஞ்சுக்கொடியை (placenta) உருவாக்க முடிகிறது. ‘தீநுண்மி’ என்று ஒருதலைப் பட்சமாக வைரஸுக்கான தமிழ் சொல் உருவாக்கப்பட்டிருப்பது அறிவியல் பூர்வமாகச் சரியல்ல. நம் உடலில் 380 லட்சம் கோடி வைரஸ் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. நம் உடலில் உள்ள பாக்டீரிய வகைகளின் தொகையைவிட இது பத்து மடங்கு அதிகம்.
ஆக, நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கின்றன, நம் உடலிலும் இருக்கின்றன. காட்டுயிர்களுடன் இணக்கமாக வாழ வேண்டும் என்று கூறப்படுவதைப் போல, நுண்ணுயிர்களுடனும் நாம் இணக் கமாகவே வாழ்ந்தாக வேண்டும். அடுத்த முறை வீட்டிலோ அலுவலகத்திலோ, தனியாக உட்கார்ந்திருந்தால் பயப்பட வேண்டாம். உங்களுக்குத் துணையாக நுண்ணுயிர்கள் கூடவே இருக்கின்றன, நல்ல நுண்ணுயிர்களும் அவற்றில் உண்டு.
கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT