Published : 09 Oct 2020 06:03 PM
Last Updated : 09 Oct 2020 06:03 PM

மகத்தான அறிஞர் ஹம்போல்ட்: 4- இயற்கை குறித்த நம் புரிதலுக்குக் காரணமானவர் 

செ.கா.

காஸ்மோஸ் - இயற்கை அறிவியலை எளிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய உலகின் முதல் நூல். ஹம்போல்ட் எழுதிய நூல் இது. Kos என்றால் அழகு, Mos என்றால் ’சீரான’ என்று அர்த்தம். இயற்கையின் சீரான அழகை 5 தொகுதிகளில் விவரித்திருந்தது அந்த நூல். ஹம்போல்ட் 1834-ல் எழுதத் தொடங்கிய இந்நூலின் முதல் தொகுதி 1845-ல் ஜெர்மனி மொழியில் வெளியானது. வெளியான இரண்டு மாதங்களிலேயே 20,000 பிரதிகள் விற்பனையாகின.

அதற்கு முன்பு வெளியான நூல்களிலிருந்து இது வேறுபட்டு இருந்ததே முக்கியக் காரணம். வான்வெளிக்கு அப்பால் இருந்து, புவியின் மையம் வரையிலான இயற்கையின் ஒருங்கமைந்த செயல்பாட்டை பயண அனுபவத்தின் வழியே அவர் விவரித்திருந்த முறை, பலரையும் ஈர்த்தது. இந்த அணுகுமுறை அன்றைய அறிவுலகைப் பெரிதும் அசைத்தது. இந்நூல் முன்வைத்த கருத்துகள் மாணவர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எனப் பலராலும் விவாதிக்கப்படக்கூடியதாக இருந்தன.

இரண்டாவது தொகுதி 1847-ல் வெளியானது. ‘கவித்துவ வர்ணனையுடன் இயற்கையை அந்த நூல் அணுகியிருந்த விதம்’ எமர்சன், தொரோ (Thoreau), வால்ட் விட்மன், எட்கர் ஆலன்போ உள்ளிட்ட பல கவிஞர்களின் மீது தாக்கத்தைச் செலுத்தியது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல் 1849-ல் உடனடியாக 40,000 பிரதிகள் விற்றது. இவற்றில் கணிசமான அளவு அமெரிக்காவிலும் விற்பனையானது.

அமெரிக்காவில் இந்நூல் வெளியான அடுத்த இரண்டு தலைமுறைக் கால அறிவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோரிடம் பெரும் தாக்கத்தை செலுத்தத் தொடங்கியது. இன்றளவும் இயற்கை அறிவியலின் புகழ்பெற்ற நூல்களுள் முக்கிய இடத்தைப் பிடித்தும், அதிக விற்பனையாகியும் வருவதை இந்நூலுக்கான புகழுரையாகக் கொள்ளலாம்.

சிந்தனைக்கு ஓய்வு

1857 பிப்ரவரி மாதம் தனது 88-வது வயதில், தரைத் தளத்தில் கீழே விழுந்ததில் இருந்து ஹம்போல்டின் அந்திமக் காலம் தொடங்கியது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும், விரைவிலேயே அதிலிருந்து மீண்டார். ஆனாலும், தொடர்ச்சியான உடல் உபாதைகளால் அவதியுற்றார். அவருடைய 80 வயதில் இமயமலைப் பயணத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டதால், அதே பயணத்தை மேற்கொள்ளவிருந்த ஹெர்மன், ருடால்ஃப், அடால்ப்- ஆகிய மூன்று ஜெர்மானிய சகோதரர்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்களது புவி காந்தப்புலம் தொடர்பான ஆய்வுகளுக்கு உதவினார்.

ஹம்போல்ட் முன்வைத்த கருதுகோள் தவறென்பதை அவர்கள் தெரிவித்தபோது, தான் அப்படிச் சொல்லவே இல்லை என மறுக்கும் அளவுக்கு நினைவு பிறழ்ந்தவராக இருந்தார். தனது கனவை நிறைவேற்றிய இளைஞர்களின் ஆய்வு முடிவுகளைக் கேட்கக்கூட ஆர்வம் இல்லாதவராக முதுமை அவரைத் தனிமைப்படுத்தியிருந்தது.

1858-ல் சராசரியாக 5,000 கடிதங்களுக்கு இவர் பதில் எழுதியிருப்பதை ஆவணக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. டார்வின் தனது ‘Origin Of the Species’ நூலை, ஹம்போல்ட் இறப்பதற்குள் எழுதிவிட வேண்டும் என நினைத்து அதுவரை எழுதியிருந்த 6 அத்தியாயங்களை அனுப்புவதாகக் கூறி ஹம்போல்டுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதைத் தன்னால் படிக்க முடியாது என்று ஹம்போல்ட் மறுத்துவிட்டதாக கடிதம் ஒன்றில் டார்வின் குறிப்பிட்டுள்ளார்.

1859 மே 6 அன்று தனது சிந்தனைக்கு முழுமையாக ஓய்வுகொடுத்து, ஹம்போல்ட் விடைபெற்றார். இறக்கும் தறுவாயிலும்கூட படுக்கையறையில் விழுந்த சூரிய ஒளியைக் கண்டு தனது கடைசி வாக்கியங்களைப் பதிவுசெய்த பிறகே, இந்த உலகைப் பிரிந்து சென்றார்.

“சூரியனின் ஒளிக்கீற்று எவ்வளவு மதிப்புடையது! அவை இந்த பூமியைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல வல்லவை!”

ஹம்போல்டியலாளர்களின் எழுச்சி

ஹம்போல்ட் முன்வைத்த கருத்துகளால் பலரும் ஈர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஷ் (George Perkins Marsh)

இவர் எழுதிய ‘Man and Nature’ எனும் நூல் அமெரிக்க அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. “அதுவரை நிலவிய, அமெரிக்க அரசின் பிற்போக்கு நம்பிக்கைகளின் மீது விழுந்த கருணையற்ற உதை அந்நூல்” என்று சூழலியலாளர் வாலஸ் ஸ்டெக்னர் குறிப்பிடுகிறார்.

ஏர்னெஸ்ட் ஹாக்கெல் (Ernst Haeckel)

விலங்கியலாளர். சிறுவயதில் ‘KosMos’ நூலைப் படித்ததன் விளைவாக அவரும் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக, இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலையையும் அறிவியலையும் இணைத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது. குறிப்பாக ‘மெடூசா’ எனப்படும் சொறி (ஜெல்லி) மீனை ஒத்த ஒரு வகைக் குடை போன்ற கடல் உயிரினத்தை வரைந்தார். இது தற்போதும் பலரால் மேற்கூரை ஓவியமாக வரையப்பட்டு வருகிறது.

ஜான் முய்ர் (John Muir)

அமெரிக்கச் சூழலியல் செயற்பாட்டாளர்- ஹம்போல்ட், தொரோ, பெர்கின்ஸ் ஆகியோரின் கருத்துகளால் கவரப்பட்டவர். இவரது சூழலியல் குறித்த கருத்துகள், அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு இவரை நெருக்கமானவர் ஆக்கின. 1872-ல் உலகின் முதல் காட்டுயிர் தேசியப் பூங்காவான ‘Yellowstone National Park’ உருவாக்கப்படுவதற்குப் பங்களித்தவர். பின்னர் ரூஸ்வெல்ட்டை எதிர்த்து ‘சியரா கிளப்’ அமைப்பை நிறுவி ‘ஹெட்ச் ஹெட்சி’ ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படுவதைக் கண்டித்து, உலகளாவிய கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.

இடா லாரா பெய்ஃபர் (Ida Laura Pfeiffer)

ஆஸ்திரிய ஆய்வாளர் - ஆய்வுப் பயணிகளில் ஈடுபட்ட முதல் பெண்களில் ஒருவர். பயணக் கட்டுரைகள் எழுதிய முதல் பெண் அறிவியலாளரும்கூட.

ஆண்ட்ரியா வுல்ஃப் (Andrea Wulf)

‘The Invention Of Nature – The Adventures of ALEXANDER VON HUMBOLDT – The Lost Hero of Science’ எனும் நூலின் ஆசிரியர். ஹம்போல்ட் பயணம் செய்த இடங்களுக்கு 2013-ல் தனது நண்பர் ஜூலியா நிகரிகா சென் உடனும், ஹம்போல்டின் எழுத்துகளுடன் பயணம் செய்தவர். ஹம்போல்டின் படைப்புகளிடம் இருந்தே, இயற்கை குறித்த நமது இன்றைய புரிதல்கள் உருவாகியிருக்கலாம் என ஆண்ட்ரியா குறிப்பிடுகிறார்.

அதேபோல் அறிவியலை ஒரு மெல்லிய இடைவெளியில் கலையுடன் பொருத்தி வெளிப்படுத்தியதில் ஹம்போல்டின் பங்கு மகத்தானது எனத் தன் நூலில் விவரித்துள்ளார்.

(நிறைவடைந்தது)

- செ.கா., கட்டுரையாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: erodetnsf@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x