Published : 25 Feb 2020 09:46 AM
Last Updated : 25 Feb 2020 09:46 AM
அறிவியல், கல்வியுடன் புவியில் இருக்கும் சுவாரசியமான அம்சங்களை விளக்குகிறது ‘வெரிடாசியம்’ (Veritasium) என்ற யூடியூப் அலைவரிசை. ‘வெரிடாஸ்’ என்ற லத்தீன் சொல்லுக்கு ‘உண்மை’ என்று பொருள். அந்த அடிப்படையில் ‘வெரிடாசியம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அலைவரிசையை, கனடாவைச் சேர்ந்த டெரெக் முல்லர் நிர்வகித்துவருகிறார்.
‘வண்ணத்துப்பூச்சி விளைவுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல்’, ‘நாம் ஏன் கொசுக்களை ஈர்க்கிறோம்?’, ‘நிலவில் நீர் இருக்கிறதா?’, ‘பிரமிடுகள் எப்படிக் கட்டப்பட்டன?’, ‘மரங்கள் எப்படி 10 மீட்டருக்கு மேல் உயரமாக இருக்கின்றன?’ என்பன போன்ற 280-க்கும் மேற்பட்டக் கேள்விகளுக்கு இந்த அலைவரிசை விடையளிக்கிறது.
- கனி
அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/2vV6s4Rl
நுட்பத் தீர்வு: ஒரே மொபைல் இரண்டு வாட்ஸ் அப்
ஒரே செயலியை இரட்டையாகப் பயன்படுத்தும் டூயல் அப்ஸ் என்னும் வசதி ஒரு குறிப்பிட்ட பிராண்டில் கிடைக்கிறது. அதன்மூலம் இரண்டு வாட்ஸ் அப், இரண்டு ஃபேஸ்புக்... இப்படி ஒரே மொபைலில் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளைப் பராமரிக்கலாம். 'டூயல் ஆப்ஸ்' வசதி உங்கள் மொபைலில் இருக்கிறதா என்பதை செட்டிங்கில் தெரிந்துகொள்ளலாம்.
மொபைல் செட்டிங்குக்குச் சென்று அங்கே ஆப்ஸ் என்னும் பிரிவைத் தொட்டீர்கள் என்றால், விரியும் பக்கத்தில் 'டூயல் அப்ஸ்' என்னும் பிரிவு தென்படும். அதைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் எந்தெந்த செயலிக்கெல்லாம் இரட்டை வசதி உள்ளதோ, அவை எல்லாம் அங்கே காணப்படும். உங்களுக்கு எந்தச் செயலியில் இரட்டைக் கணக்கு தேவையோ அதை 'enable' செய்துகொண்டால் போதும்
- ரிஷி
செயலி புதிது: Dictionary.com
ஆங்கிலச் சொற்களின் பொருளை ஆங்கிலத்திலேயே தெரிந்துகொள்ள மிகவும் பயனுள்ள, நம்பகத்தன்மை வாய்ந்த இணையதளம் dictionary.com. அந்த இணையதளத்தின் செயலி வடிவம் இது. இதன்மூலம் 15 லட்சத்துக்கு மேற்பட்ட ஆங்கிலச் சொற்களுக்கான பொருளைத் தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோல் ஒரு சொல் குறிக்கும் அதே பொருளைக் கூறும் மற்ற ஆங்கிலச் சொற்கள் (synonyms), நேரெதிர்ப் பொருளைக் குறிக்கும் சொற்கள் (antonyms) ஆகியவையும் சொற்களின் முறையான உச்சரிப்பையும் கற்றுக்கொடுக்கும் தெஸாரஸும் (Thesarus) இந்தச் செயலியில் உண்டு.
குரல் பதிவின் மூலமும் சொற்களுக்கான பொருள்களைத் தெரிந்துகொள்ளலாம். இவை தவிர ஒரு சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணச் சொற்றொடர்கள், இலக்கணத் தகவல்கள், ஆங்கில மரபுத் தொடர்கள் ஆகியவையும் இந்தச் செயலியில் கிடைக்கின்றன. இதை இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தலாம்.
- நந்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT