Published : 11 Feb 2020 12:05 PM
Last Updated : 11 Feb 2020 12:05 PM

எங்கேயும் எப்போதும் 16: மருந்துக்கும் உண்டோ அடைக்கும்தாழ்?

ஹாலாஸ்யன்

நண்பர்களோடு உணவருந்திக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று மிளகாயைக் கடித்துவிட, உடனடியாகத் தண்ணீர் தேவைப்படுகிறது. மேசையின் மற்றொரு மூலையில் இருக்கும் தண்ணீரை எடுத்துத் தரச்சொல்லி நண்பர்களிடம் பரபரப்பாக சைகை காட்டுகிறீர்கள். ஆனால், கைமாற்றுகிற ஒவ்வொருவரும் தங்கள் தாகம் தீரக் குடித்துவிட்டுத் தண்ணீரைக் கொடுத்தால் எப்படியிருக்கும். ஏறக்குறைய இதே போன்றதொரு நிகழ்வுதான் ஒவ்வொரு முறை நாம் மருந்து எடுத்துக் கொள்ளும்போதும் நிகழ்கிறது.

மருந்தின் பாதை

நமக்குத் தலை வலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நாம் உட்கொள்ளும் மருந்து, செரிமான மண்டலத்தின் சிறுகுடலில் உள்ள விரல் போன்ற அமைப்புகளால் உறிஞ்சப்படும். பின்னர் அங்கிருந்து ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் போகும். அதன் பின்புதான் வலியைக் கடத்தும் நரம்புச் செல்களின் செயல்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவந்து வலியைப் போக்கும். நமக்குச் சாதாரணமாக இந்த முறை போதுமானதுதான் என்றாலும் இதில் சில சிக்கல்கள் உண்டு.

முதலில் மருந்தின் அளவு. தலையில் செயல்படுவதற்கு மொத்த மருந்தில் மிகச் சிறிய பகுதியே போதுமானது; ஆனால், அது உடலின் முழுவதும் போய்ச் சேரும் என்பதை உறுதிப்படுத்தவே மருந்தின் அளவு அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. கல்லீரல் மீதமிருக்கும் மருந்தைச் சிதைத்து உடலைவிட்டு வெளியேற்றும்.

சில மருந்துகள் உடலின் மற்ற பாகங்களில் செயல்படும்போது பக்க‌விளைவுகளை ஏற்படுத்தும். தலைவலி, சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்குப் பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் உடலில் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அந்த மருந்துகள் புற்றுச் செல்களை அழித்து ஒழிக்கக்கூடியவை என்பதால், உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்லும்போது, மற்ற உறுப்புகளில் இயல்பாக இயங்கும் செல்களையும் பாதிக்கும்.

மருந்து சுமப்பான்கள்

இந்நிலையில், உடலில் மருந்து செயல்பட வேண்டிய பாகத்தில் மட்டும் கச்சிதமாக‌ அதைக் கொண்டு சேர்க்கும் முறை இருந்தால் நன்றாக இருக்கும்தானே. அந்தப் பணியை மருந்து சுமப்பான்கள் (Drug carriers) செய்கின்றன. மருந்து சுமப்பான்கள் மீதான ஆராய்ச்சி சமீப‌ காலங்களில் தீவிரமடைந்திருக்கிறது; குறிப்பாகப் புற்றுநோய் மருத்துவத்தில்.

மருந்து சுமப்பான்கள் மூலம் மருந்தைப் பொட்டலம் கட்டி உடலுக்குள் அனுப்பும்போது, மருந்து செயல்பட வேண்டிய இடத்தில் மருந்தை வெளியேற்றிவிடும். ஆனால், அதற்கு எப்படிக் குறிப்பிட்ட இடத்தில் மருந்தை வெளியேற்ற வேண்டும் என்று தெரியும்?

உடலின் ஆரோக்கியமான பகுதிகளுக்கும், நோய்வாய்ப்பட்ட பகுதிகளுக்கும் இடையில் இருக்கும் வேதியியல் வேறுபாடு அல்லது மருந்து செயல்பட வேண்டிய பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட மூலக்கூறுகள், அமிலத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு அங்கு மட்டுமே மருந்தை வெளிப்படுத்தச் செய்யலாம்.

லிப்போசோம்கள் (Liposomes) என்கிற கொழுப்பு அமைப்புகள், நேனோ துகள்கள் (Nano particles) ஆகியவற்றை மருந்துச் சுமப்பான்களாகப் பயன்படுத்தி புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நடைபெறுகிறது. மருந்துகள் வெளிப்படும் விகிதம், வெளிப்பட வேண்டிய இடம் ஆகியவற்றை துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், இந்த மூலக்கூறுகளை வடிவமைத்தல், மருந்துகளை கச்சிதமாக அதனுள் வைத்தல் ஆகியவை சற்றே சிக்கலான அதே சமயம் செலவு பிடிக்கும் செயல். ஆய்வுகள் இவற்றுக்கு விரைவில் தீர்வைத் தரும் என்று நம்புவோம்.

(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x