Published : 07 Jan 2020 01:32 PM
Last Updated : 07 Jan 2020 01:32 PM
சு. அருண் பிரசாத்
சென்னை கணிதவியல் அறிவியல் மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஆர். ராமானுஜம், தேசிய அளவில் அறிவியல் பரப்புரை ஆளுமைகளுள் ஒருவராக அறியப்படுபவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் பேராசிரியர், 1999-ல் இருந்து ‘துளிர்’ இதழின் ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார். அவருடைய அறிவியல் பரப்புரை செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய தேசிய அறிவியல் கழகம் 2020-ம் ஆண்டுக்கான ‘அறிவியல் பரப்புரைக்கான இந்திரா காந்தி பரிசை’ அவருக்கு அறிவித்துள்ளது.
ஆங்கிலம், இந்திய மொழிகளில் அறிவியல் பரப்புரையாளராகச் சிறப்பாக செயல்படும் அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பரிசு 1986-ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டுவருகிறது. இயற்பியலாளர் ஜெயந்த் வி. நாரலீகர், அறிவியலாளரும் எழுத்தாளருமான ஜி. வெங்கட்ரமணன், ‘தி இந்து’ நாளிதழின் பத்தி எழுத்தாளர் டி. பாலசுப்ரமணியன் ஆகியோர் ஏற்கெனவே இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். பேராசிரியர் ராமனுஜத்தின் அலுவலகத்தில் ஒரு மதிய வேளை நடைபெற்ற உரையாடலில் இருந்து சில பகுதிகள்:
அறிவியல் தொடர்பியலுக்குள் எப்படி வந்தீர்கள்?
30 ஆண்டுகளுக்குமுன் சென்னை வந்த நாள்முதலே தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் செயல்பட்டுவருகிறேன். எனக்கு அறிவியல் இயக்கத்தின் மேல் ஈடுபாடு வந்ததற்குக் காரணம் ‘துளிர்’ சிறார் அறிவியல் இதழ். பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில்தான் படித்தேன். வீட்டுக்கு வரும் தமிழ் வார, மாத இதழ்களில் அறிவியல் சார்ந்து எதுவுமே இருக்காது. அறிவியல் சார்ந்து குழந்தைகளை வாசிக்கப் பழக்க வேண்டும் என்று நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கும் அப்போது தெரியாது; குழந்தைகளுக்குக் காசு கொடுத்து புத்தகம் வாங்கும் சூழல் இப்போதுதான் ஏற்பட்டுள்ளது.
‘துளிர்' இதழைப் பார்த்தபோது, நாமும் இது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென்று முடிவெடுத்தேன். அறிவியல் கல்வி, செய்முறை, கணிதத்தை எளிமையாகச் செய்து பார்ப்பது, அதை வாழ்க்கைக் கல்வியாக மாற்றுவது உள்ளிட்டவை அடங்கிய அறிவொளி இயக்கச் செயல்பாடுகள் மூலம் நிறையப் புதுமையான அனுபவங்கள் கிடைத்தன.
சிற்றூர்களில் ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டுக்கொண்டிருந்த அறிவியலை, அறிவொளி இயக்கம் பொதுவெளிக்குக் கொண்டுவந்தது; அறிவியல் பரப்புரை குறித்து ஏற்கெனவே இருந்த புரிதலையும் வடிவத்தையும் மாற்றியமைத்ததில் அது முக்கியப் பங்காற்றியது. எல்லாவற்றையும் அணுகும்விததில் என்னிடம் மாற்றம் ஏற்பட்டது அறிவொளி இயக்கத்துக்குச் சென்ற பின்புதான் என்று நிச்சயமாகச் சொல்வேன். சமூகத்தில் அடித்தட்டில் உள்ள மக்களை நேரடியாகச் சந்திக்கும் அனுபவங்கள் அங்கேதான் கிடைத்தன.
‘அறிவியல் குறித்த பொதுமக்களின் புரிதல்’ (Public Understanding of Science) என்று அது குறிப்பிடப்படுகிறது. அது ஏன் தேவை?
அறிவியல் குறித்த பொதுமக்களின் புரிதல் பற்றிப் பேசும்போது, அறிவியல் என்றால் என்ன என்பதைத் தாண்டி, மக்கள் அறிவியலை எப்படிப் பார்க்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். 90-களின் பிற்பகுதியில் சென்னை, மதுரை, விருதுநகர், பழனி ஆகிய இடங்களில் ஓர் ஆய்வை மேற்கொண்டோம். காலை 9 மணிக்குப் பேருந்து நிலையத்துக்குச் சென்று மக்களைச் சந்திப்போம். அறிவியல் என்றால் என்ன, அதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள், பள்ளியில் படிக்கும்போது உங்களுக்கு அறிவியலும் கணிதமும் பிடித்ததா என்பன போன்ற அடிப்படைக் கேள்விகள் சிலவற்றை அவர்களிடம் கேட்போம்.
‘அறிவியல் என்பது பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஒரு பாடம்’ என்பதே படித்தவர்கள் மத்தியில் இருந்து பதிலாகக் கிடைத்தது; ‘ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் சென்றுகொண்டிருந்தோம், இப்போது பஸ்ஸில் செல்கிறோம். முன்பு அம்மை வரும், இப்போது எல்லாவற்றுக்கும் மருந்து கொடுக்கிறார்கள்’ என்பது படிக்காதவர்கள்/ பள்ளிக்குச் செல்லாதவர்களின் பதிலாக இருந்தது. பள்ளியில் அறிவியலை முறையாக அணுகச் செய்யாததால், அதை வெறும் பாடமாக மட்டுமே பார்க்க வைத்திருக்கிறது. ஆனால், அறிவியலைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே இருப்பதை உணர முடிந்தது.
அறிவியல் தொடர்பியலின் முக்கியத்துவம் என்ன?
அறிவியல் கல்வியையும், அறிவியல் தொடர்பியலையும் நான் தனித்தனியாகப் பார்க்கவில்லை. அறிவியல் தொடர்பியல் அறிவியல் கல்வியில் தாக்கம் செலுத்த வேண்டும்; அறிவியல் கல்வி அறிவியல் தொடர்பியலுக்குப் பங்களிக்க வேண்டும். ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியல் தொடர்பியலாளர் ஒருவர், அங்கு அறிவியல் கல்வியில் பெரிய தாக்கத்தைச் செலுத்த முடியும் என்றார். ஆனால், இங்கு அதற்கான எந்தச் சாத்தியமும் இல்லை.
பள்ளிகளில் அறிவியல் என்ற பெயரில் என்ன நடக்கிறது? நியூட்டன் விதியில் ஏன் அது விதி என்று குறிப்பிடப்படுகிறது என்று கேட்கக்கூட யாரும் விரும்பவில்லை; வகுப்பறைகளில் உரையாடல்களோ/விவாதங்களோ (Dialouge) நடப்பதில்லை. உலக நாடுகளில் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் மட்டும்தான், ‘அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அது நேரு, அம்பேத்கரின் பங்களிப்பு. ஆனால், அறிவியல் வகுப்புகளில்கூட இது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
அறிவியல் கல்வியின் அடிப்படை நோக்கம் என்பது அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுவதுதான். பள்ளி, கல்லூரி, மேற்படிப்பு ஆகியவற்றில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் செயல்பாடுகளை நம்மால் பார்க்க முடிகிறதா? ‘அறிவியல் ஆர்வம்’ என்றால் என்ன என்று வரையறுக்கச் சொல்லி 10 மதிப்பெண் வினா ஆக்கிவிடுவார்களே ஒழிய, ஒரு விமர்சன மனப்பான்மையைக் கொண்டுவராத அறிவியல் எப்படி அறிவியலாக இருக்க முடியும். இதுதான் இங்கு அடிப்படைப் பிரச்சினை.
அறிவியல் தொடர்பாளர்கள் ஏன் தேவை?
21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்சினைகள்: என்றைக்கும் தொடர்ந்துவரும் வறுமை; மற்றொன்று பருவநிலை மாற்றம். நம் காலத்திலேயே இதன் தீவிரப் பாதிப்புகளைப் பார்க்க இருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசுபாடு, சூழலியல் பாதுகாப்பு, தடையற்ற-வளங்குன்றாத வளர்ச்சி (Sustainable development), வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எப்படி மிகச் சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறோம் என்பது எனக்குப் புரியவில்லை.
சூழலியலுக்கும் வளர்ச்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவும் வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அறிவியலுக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. அறிவியல் - தொழில்நுட்பத்தின் மூலமாகத்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்; உணர்ச்சிவசப்பட்டு அல்ல. இதுதான் எனக்கு முன்னுரிமையாகத் தெரிகிறது.
இத்தகைய அறிவியலைச் சார்ந்த விஷயங்களைச் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களுக்கு ஒரே மொழி/ வழிமுறையைக்கொண்டு எடுத்துரைக்க முடியாது; எனவே, பல்வேறு நிலைகளில் அறிவியல் தொடர்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். அறிவியல் பரப்புதல், தொடர்பியலில் (Popularization/ Communication) அறிவியல் கற்றுத் தரும் உண்மைகளை மக்கள் மத்தியில் பேச வேண்டும்; அறிவியல் வழிமுறையை அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.
அதன்மூலமாக அவர்களிடம் ஒரு விமர்சன மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும். அறிவியல் தொடர்பியலின் முதன்மை நோக்கமாகவும் அறிவியல் தொடர்பாளர்களின் முக்கியப் பணியாகவும் இவற்றைக் கொள்ளலாம். இதற்கெல்லாம் மேலாக அரசியல் திட்டங்களில் இவை இடம்பெற வேண்டும்; அரசியலின் ஓர் அங்கமாகவும் தேர்தல்களில் எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT