Published : 10 Dec 2019 12:36 PM
Last Updated : 10 Dec 2019 12:36 PM

அறிவியல் அலமாரி: காட்சிவழி கற்கலாம் - அறிவியல் அழகானது

‘கூர்ஸ்கெசக்ட்’ (Kurzgesagt) என்ற அனிமேஷன் யூடியூப் அலைவரிசை 2013-லிருந்து இயங்கிவருகிறது. ‘கூர்ஸ்கெசக்ட்’ என்றால் ஜெர்மன் மொழியில் ‘சுருங்க சொல்வது’ என்று பொருள். இந்த அலைவரிசை அழகான அனிமேஷன் காணொலிகளுடன் அறிவியலைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கிறது.

பிலிப் டெட்மெர் என்பவர் தொடங்கிய இந்த அலைவரிசையின் காணொலிகளை பத்திரிகையாளர்கள், வடிவமைப் பாளர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற பல்துறை நிபுணர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். அறிவியல், வானியல், தொழில்நுட்பம், உயிரியல், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணமயமான காணொலிகள் இந்த அலைவரிசையில் காணக் கிடைகின்றன.

- கனி

அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/KurzSci

நுட்பத் தீர்வு: பேசும் செய்தி - ஒரு தந்திரம்

இப்போதெல்லாம் பெரும்பாலோர் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் குரல்வழிச் செய்தியைப் பதிவுசெய்துவிட்டு அதை அப்படியே அனுப்பும் முன்பு ஒரு முறை பரிசோதித்துவிட்டு அனுப்புவதற்கு வாட்ஸ்அப்பில் ஒரு தந்திரம் உள்ளது.

அனுப்ப வேண்டிய செய்தியைப் பேசிவிட்டு அனுப்பாமல் அந்த உரையாடலிலிருந்து வெளியேறிவிடுங்கள். மீண்டும் அந்த உரையாடலுக்குச் செல்லுங்கள். பதிவுசெய்யப்பட்ட குரல்வழிச் செய்தி அப்படியே இருக்கும்; அதைக் கேட்கவும் வசதி இருக்கும், இப்போது அதைக் கேட்டுவிட்டு, ஏதேனும் மாற்ற நினைத்தால் மாற்றி அனுப்பலாம் இல்லையெனில் அப்படியே அனுப்பலாம்.

- ரிஷி

செயலி புதிது: ‘நெய்பர்லி’ (Neighbourly)

ஒரே பகுதியில் வசிக்கும் மக்கள், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டு கேள்விகள் கேட்பதன் மூலமாக, தங்களுக்குத் தேவையான தகவல்களை நம்பகமான முறையில் பெற்றுக்கொள்ள வழிசெய்யும் செயலி ‘நெய்பர்லி’. கூகுளின் குரல் உள்ளிடல் வழியாகவும் கேள்விகள் கேட்கவோ பதில் சொல்லவோ முடியும்.

ஆங்கிலத்தோடு 8 இந்திய மொழிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும். நாம் வசிக்கும் பகுதியிலிருக்கும் சமூக நிகழ்வுகளின் நிகழ்விடங்கள், நல்ல உணவகம், சிறந்த முடிதிருத்தகம், பிளம்பர், மெக்கானிக், பஞ்சர் கடை போன்ற தகவல்களை இந்தச் செயலி மூலம் எளிதில் பெறலாம். - நிஷா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x