Published : 26 Nov 2019 11:10 AM
Last Updated : 26 Nov 2019 11:10 AM

பேசும் படம்: கல்யாணக் கதைகள்!

நெல்லை மா. கண்ணன்

தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளின் சடங்கு முறைகளில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், திருமண ஆல்பத்தைப் பார்த்தால் ஒரே மாதிரியான காட்சிகள்தாம் பதிவுசெய்யப்பட்டு இருக்கும். தனது ஒளிப்படங்களின் வழியாக இந்தக் காட்சிகளைக் கலைத்து, நவீன பாணியில் புதிய ஒழுங்கை உருவாக்குகிறார் ஒளிப்படக் கலைஞா் பொன். பிரபாகரன்.

திருமண நிகழ்ச்சியில் நடக்கும் சடங்குகளுக்கும் அதைச் சுற்றி நடக்கும் உணர்வுபூா்வமான தருணங்களுக்கும் மதிப்புக் கொடுத்து பதிவுசெய்ததால் 'பெட்டர் போட்டோகிராபி' இதழ், ‘Documenter of Weddings’ என்ற விருதை இவருக்கு வழங்கியுள்ளது. மேலும், அதன் நவம்பர் இதழில் தமிழ்நாட்டில் ஒரு திருமண வீட்டில் இவர் எடுத்த ஒளிப்படத்தை அட்டைப் படமாக வெளியிட்டுள்ளது.

சின்னச் சின்ன தருணங்கள்

கல்லூரியில் படித்தபோது பகுதி நேரமாக ஒளிப்படக் கூடத்தில் இவர் வேலை பார்த்திருக்கிறார். அங்கே நிறைய பைத்தியக்காரத்தனங்களைச் செய்து இந்தக் கலையைக் கற்றுக்கொண்டதாகச் சிரித்துக்கொண்டே சொல்கிறார். 2012-ல் ஒளிப்படப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்ற பிறகுதான் திருமணம், சடங்கு, பிறந்தநாள் நிகழ்ச்சிகளைப் புதிய பாணியில் எடுக்கும் ஒளிப்படக்காராக இவர் மாறினார். துாத்துக்குடியைச் சேர்ந்த இவருடைய தந்தை குணபால்ராஜும் ஒளிப்படக்காரர்தான்.

திருமண வீட்டில் சடங்கு முறைகளுக்கு மத்தியில் நடக்கும் சின்ன சின்ன தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மணமக்களைப் படமெடுக்கும்போது சுற்றியுள்ள சூழலையும் சேர்த்துப் படம்பிடிப்பது, குழந்தைகளையும் ஒளிப்படச் சட்டகத்துக்குள் சேர்ப்பது என இவருடைய தனிப் பாணியைச் சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, மணமக்களுக்கு மேக்கப் போடும்போது நடக்கும் நிகழ்வுகளை விதவிதமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

“திருமண மண்டபத்துக்குள்ளே நடக்கும் மரபான சடங்குகளிலிருந்து சற்று விலகி, ஒளிப்படத்தில் ஒரு கதையைச் சொல்வது சவாலானதுதான். இருந்தாலும் அப்படிப்பட்ட ரசனையுடன் எடுக்கப்படும் படங்களில் நான் வெளிப்படுவதாக உணர்கிறேன்" என்று சொல்லிவிட்டு அடுத்த ஷூட்டுக்குப் புறப்படத் தயாராகிறார் பொன். பிரபாகரன்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x