Published : 19 Nov 2019 11:49 AM
Last Updated : 19 Nov 2019 11:49 AM
“சொல்றது எதையாவது காதுல வாங்கறியா?” என்று ஒருமுறையாவது வசவு வாங்கியிருப்போம். ஆனால், ஒலியைக் காதில் மட்டும்தான், நாம் வாங்கிக்கொள்கிறோமா?
அடிப்படையில் ஒலி என்பது பருப்பொருளின் அதிர்வு. அந்த அதிர்வு பயணிக்க ஏதேனும் ஓர் ஊடகம் வேண்டும். ஊடகத்தைப் பொறுத்து ஒலியின் வேகம் மாறுபடும். உண்மையில் காற்றைவிடவும் திட, திரவப் பொருட்களில் ஒலி வேகமாகப் பயணிக்கும்.
நாம் சாதாரணமாகக் கேட்கிற ஒலி என்பது, காற்று வழியாக அதிர்வுகள் காதுக்குள் புகுந்து உள்காதில் இருக்கும் காக்லியா (Cochlea) என்னும் நத்தை ஓடு போன்ற பகுதிக்குச் செல்கின்றன. அங்கிருந்து செவிப்பறை (Ear drum) மூலம் ஒலி நரம்புக்குத் தகவல் கடத்தப்பட்டு மூளைக்குத் தகவல் அனுப்பப்படுகிறது.
ஆனால், ஏகப்பட்ட எலும்புகள் இருக்கும் தலைப் பகுதிக்குள் எலும்புகள் மூலமாகவும் ஒலி பயணிக்கலாம். நாம் பேசும்போது, நம் பேச்சின் ஒரு பகுதி நம் மூளைக்கு எலும்புகள் வழியாகவே சென்று சேர்கிறது. இப்படி எலும்புகள் மூலம் ஒலி கடத்தப்படுவதை எலும்பு ஒலிக் கடத்தல் (Bone Conduction) என்கிறார்கள்.
செய்தி செல்லும் வழி
ஒலியை அதிர்வுகளாக மாற்றித் தலையில் எலும்புகளுக்குக் கொடுத்து அதிரவைத்தாலும் ஒலி கேட்கும். இந்தத் தொழில்நுட்பத்தில் இசை கேட்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், விலை சற்று அதிகம். காதுக்கு முன்புறம் கீழ்த்தாடை எலும்புகள் வந்து சேருமிடத்தில் அவை பொருத்தப்பட்டு தாடை எலும்பு வழியாக காக்லியா பகுதிக்குச் சேதி செல்லும். ஆனால், இதன் மருத்துவப் பயன்பாடுதான் முக்கியமானது.
மூன்று வகைக் குறைபாடு
செவித்திறன் குறைபாடு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒலி நரம்புக் குறைபாடு, செவிப்பறை அல்லது செவிக்குழாய் (Ear Canal) குறைபாடு, இந்த இரண்டும் சேர்ந்த குறைபாடு. இவற்றில் செவிப்பறை அல்லது செவிக்குழாய் குறைபாடு இருப்பவர்களுக்கு, செவிப்பறையில் மோதும்
ஒலி அதிர்ந்து, நரம்புக்குத் தகவல் போகாது. அவர்களுக்கு எலும்புகள் மூலம் ஒலி செலுத்தும் உபகரணங்களைக் கொண்டு கேட்கும் திறனைத் திரும்பப்பெற வைக்கலாம்.
புகழ்பெற்ற இசை மேதை பீத்தோவன், கேட்கும் திறனை இழந்ததும் தன் பியானோவில் ஒரு இரும்புக் கம்பியை இணைத்து அதைப் பல்லில் கடித்துக்கொள்வதன் மூலம் தொடர்ந்து இசையமைத்ததாகக் குறிப்பு உண்டு.
இதைத் தவிர சில நாடுகளில் ராணுவ வீரர்களுக்கான, தகவல் தொடர்புக் கருவிகள் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன. அந்தக் கருவிகள் நேரடியாகக் காதுக்குள் பொருத்தப்படாததால் சுற்றுப்புற ஒலிகளையும் அவர்களால் கேட்க முடியும், அந்தக் கருவிகள் மூலம் தொடர்புகொள்ளவும் முடியும். சமீபகாலமாக மேலை நாடுகளில் மாரத்தான் ஓட்டக்காரர்கள், மிதிவண்டி பயன்படுத்துபவர்கள் ஆகியோரிடையே இதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.
- ஹாலாஸ்யன் தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT