Published : 29 Oct 2019 02:18 PM
Last Updated : 29 Oct 2019 02:18 PM

வலை 3.0: நீங்களும் ‘பிளாகர் 'தான்!

சைபர் சிம்மன்

வலைப்பதிவு எனும் கருத்தாக்கம் இணையத்தில் கொஞ்சம் பழைய சங்கதிதான். அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் ஹால் என்ற கல்லூரி மாணவர் 1994-ல் உருவாக்கிய லிங்க்ஸ்.நெட் தான் உலகின் முதல் வலைப்பதிவு. இணையத்தில் உலவும்போது கண்டறிந்த சுவாரசியமான தளங்களையும் தகவல்களையும் இந்தத் தளத்தில் ஹால் தொகுத்திருந்தார்.

அதன் பிறகு, வலைப்பதிவைக் குறிக்கும் ‘வெப் பிளாக்’ என்ற பதத்தை ஜான் பார்ஜர் என்பவர் 1997-ல் உருவாக்கினார். இவரது ‘ராபர்ட் விஸ்டம்' தளம்தான், இன்று வலைப்பதிவில் பார்க்கும் பல ஆதார அம்சங்களைக் கொண்டிருந்தது. 1998-ல் அறிமுகமான ‘ஓபன் டைரி’ எனும் சேவை, பிறரின் பதிவில் கருத்து தெரிவிக்கும் வசதியை உறுப்பினர்களுக்கு வழங்கியது. இதைப் பின்னூட்டத்தின் மூல வடிவமாகக் கொள்ளலாம்.

இதனிடையே பீட்டர் மெர்ஹால்ஸ் வலைப்பதிவின் மூலச் சொல்லான ‘வெப் பிளாக்’-ஐ, ‘பிளாக்’ எனச் சுருக்கினார். தொடர்ந்து, ஜங்கா (Xanga), சமூக வலைப்பின்னல் அம்சம் கொண்ட எழுதும் சேவையான ‘லைவ்ஜர்னல்’ போன்ற வலைப்பதிவு சேவையின் முன்னோடித் தளங்கள் அறிமுகமாயின.

உங்களுக்கான வலைப்பதிவு!

இந்த வரிசையில், இவான் வில்லியம்சின் ‘பிளாகர்’, கொஞ்சம் தாமதமாக 1999-ல் தான் அறிமுகமானது. என்றாலும், வலைப்பதிவு உலகில் ‘பிளாக’ருக்குத் தனி இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், வலைப்பதிவுச் சேவையை ஜனநாயகப்படுத்தி, எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது ‘பிளாகர்’ தான்.

இவான் வில்லியம்ஸ், தன்னுடைய தோழி மேக் ஹவரிஹானுடன் இணைந்து ‘பைராலேப்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். நிறுவனத்தின் திட்டங்களைச் செயல்படுத்த மென்பொருளைத் தயாரிப்பதே இந்த லேப்ஸின் நோக்கம். மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர் தங்களுக்குள் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள, சிறிய மென்பொருள் ஒன்றை உருவாக்கினார்கள். எழுதுவதையும் எழுதியதில் திருத்தம் மேற்கொள்வதையும் எளிதாக்கிய அந்தக் குறிப்பேட்டு சேவை, இவான் வில்லியம்ஸுக்குப் பிடித்திருந்தது. குழுவினரும் அதை விரும்பினார்கள்.

இதன் விளைவாக வில்லியம்ஸ், ‘பைரா’ மென்பொருளைக் கிடப்பில் போட்டுவிட்டு குறிப்பேடு சேவையை ‘பிளாகர்’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தினார். ‘உங்களுக்கான வலைப்பதிவை உருவாக்கிக்கொள்ளுங்கள்’ எனும் பதத்தைப் பிரபலமாக்கியது ‘பிளாகர்' தான்.

சாமானியர்கள் கையில்...

அதற்கு முன்னர் வலைப்பதிவைத் தொடங்க பல சேவைகள் இருந்தாலும், அவை கொஞ்சம் சிக்கலாக இருந்தன. தொழில்நுட்பத்தில் ஓரளவு பழக்கம் இருந்தால்தான், வலைப்பதிவு எழுத முடியும் என்ற நிலையிருந்தது. வலைப்பதிவில் பகிரப்பட்ட விஷயங்களும், பெரும்பாலும் தொழில்நுட்பச் செய்திகளாகவே இருந்தன.
இதை எல்லாம் ‘பிளாகர்’ மாற்றியது. அந்தத் தளத்தில் நுழைந்தால், எளிதாக வலைப்பதிவுகளைப் படிக்க முடிந்தது. ‘புதிய வலைப்பதிவை உருவாக்கவும்’ என்ற பகுதியைச் சொடுக்கினால், யார் வேண்டுமானாலும் வலைப்பதிவை உருவாக்கிக்கொள்ள முடிந்தது.

எழுதும் ஆசை, ஆர்வம் கொண்டவர்கள் நினைத்தவுடன் வலைப்பதிவைத் தொடங்கி கட்டுரைகள், கதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதத் தொடங்கினார்கள். எழுதி முடித்தவுடன், பக்கத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால் போதும், இணையத்தில் அது பதிப்பிக்கப்பட்டுவிடும். விரும்பினால் ஒளிப்படத்தைச் சேர்க்கலாம், இன்னும் அலங்காரங்களைச் சேர்க்கலாம். மற்றவர்கள் பின்னூட்ட வடிவில் கருத்துத் தெரிவிக்கலாம். இப்படி இணையப் பதிப்பு வசதியை சாமானியர்களின் கையில் ‘பிளாகர்' வழங்கியது.

இதன் பயனாக, இணைய உலகில் ‘வலைப்பதிவு' வலை வீசத்தொடங்கியது. தனிப்பட்ட அனுபவங்களைச் சாமானியர்கள் பகிர்ந்துகொண்டதுடன், அரசியல் விமர்சனங்கள், திரை விமர்சனங்கள் போன்றவற்றையும் எழுதினார்கள். வலைப்பதிவு பலருக்குப் புதிய கதவுகளை திறந்துவிட்டது.
‘பிளாக’ரின் வெற்றியைக் கண்டு கூகுள் நிறுவனம் அதை விலைக்கு வாங்கியது; வலைப்பதிவு சேவையை ‘பிளாகர்’ ஜனநாயகப்படுத்திய பிறகு ‘வேர்டுபிரஸ்’, ‘டம்ப்ளர்’ உள்ளிட்ட சேவைகள் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றன.

(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x