Last Updated : 02 Feb, 2023 06:36 AM

 

Published : 02 Feb 2023 06:36 AM
Last Updated : 02 Feb 2023 06:36 AM

உரைநடை வரிகளுக்கு உருக்கும் இசை!

வள்ளலார் வாழ்ந்த வீடு

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார், வெறுமனே வாய்ச்சொல் வீரராக அல்லாமல் செயல் வீரராக அவர் வாழும் காலத்திலேயே அறியப்பட்டவர்.

உரைநடை நூல்கள் அரிதாகத் தோன்றத் தொடங்கிய காலத்திலேயே `மனுமுறை கண்ட வாசகம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர் வள்ளலார். இந்த உரைநடை வரிகளுக்கேற்ற இசையை அளித்து அதன் பொருளும் அர்த்தமும் மாறாதவண்ணம் பாடலாகப் பதிவுசெய்து அதை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருக்கிறார் தொழில்முறைப் பாடகரும் `சிந்து பைரவி' இசைக் குழுவின் நிறுவனருமான ஹரிவிதார்த்.

`வள்ளலாரின் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடவேண்டும் என்னும் எண்ணத்துக்கு தூண்டு கோலாக அமைந்தது எது?' என்று அவரிடம் கேட்டோம்.

“பக்தி இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். நான் இசைத் துறையில் அறிமுகம் ஆனதே இறையருள் சக்தி சண்முகராஜா இசைக் குழுவில்தான். சென்னை கொண்டியம்பதியில் எழுந்தருளியிருக்கும்  ஜீவகாருண்ய அம்மனின் தெய்விக பக்த சபாவின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் ஆதரவுடன் ஜீவகாருண்ய அம்மன் பாமாலைக்கு இசைமைத்தேன். அதில் பின்னணிப் பாடகர் முகேஷும் பாடியிருந்தார். `காலையில் தினமும்' என்னும் ஜீவ காருண்ய அம்மன் பாடலை பௌளி ராகத்தில் முகேஷ் பாடியிருப்பார்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலங்களிலும் பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். அதில் ஓர் இசை நிகழ்ச்சியில் 3 மணி நேரமும் விநாயகர் பாடல்களை மட்டும் பாடி நிறைவு செய்தோம். அனைவரும் மலைத்தே போனார்கள். அத்தனையும் விநாயகர் பாடல்களே. இப்படி ஆன்மிகம் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஏதாவது புதுமையாக செய்ய முடியுமா என்று முயற்சி செய்து பார்ப்பது என்னுடைய இயல்பு.

சென்னை, கொடுங்கையூர் மூலசத்திரம் சாய்பாபா கோயிலின் மீது சாய்பாபா 100ஆவது ஆண்டு நினைவாக `யாத்திரை யாத்திரை' என்று தொடங்கும் ஒரு பாடலை விழாக் குழுவினர் கொடுத்தனர். அதற்கு மூன்று விதமான மெட்டுகளிலும் தாள கதியிலும் நான் பாடிக் காட்டினேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்து அதை ஒலிநாடாவாக வெளியிட்டனர். ஒரே பாடலை மூன்று விதமாக அணுகும் அந்த யுக்தி பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்துதான் ராமலிங்க சுவாமிகளின் 200ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகளின் பாடல்களுக்கு இசையமைத்தேன். மனுமுறை கண்ட வாசகத்தி லிருக்கும் `நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ' எனத் தொடங்கும் வரிகளுக்கு இசையமைத்தது நெகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.

மேலும், நினைந்து நினைந்து (சிந்து பைரவி ராகத்தில் இசை அமைத்தது), அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆகிய பாடல்களுக்கும் இசையமைத்தேன். இந்தப் பாடல்களை வள்ளலார் நகரில் அமைந்திருக்கும் வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வைத்து, ஆன்ம ஞான சபை அன்பர் வழக்கறிஞர் ரமேஷ் யூடியூப் சமூக வலைதளத்தில் வெளியிட்டது, என்னுடைய ஆன்மிக இசைப் பயணத்தில் ஒரு மைல்கல் என்றே நான் நினைக்கிறேன்.

ஆடி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன் பக்தி இசை நிகழ்ச்சிகளில் ஊரே இறைமயமாக இருக்கும். எனக்குக் கிடைக்கும் பக்தி இசைக் கச்சேரிகளில் நால்வர் தேவாரம், திருவாசகம் போன்றவற்றிலிருந்தும் பாடல்களைப் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அருணகிரிநாதரின் திருப்புகழ், கோபால கிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன் ஆகியோரின் பாடல்களையும் கச்சேரி மேடைகளில் நான் பாடுகிறேன் என்றார் ஹரிவிதார்த்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x