Published : 15 Sep 2022 10:15 AM
Last Updated : 15 Sep 2022 10:15 AM
சைவ சித்தாந்த நூல்களில் முதல் நூலாக வைத்தெண்ணிப் போற்றப்படும் மெய்கண்டாரின் ‘சிவஞானபோத’ சூத்திரங்களை எல்லாரும் எளிதில் புரிந்துகொள்ளும்வகையில், வழிகாட்டி நூலொன்றைப் படைத்துள்ளார் திருவாரூர் இரா.சங்கரலிங்கம். வருவாய்த் துறையில் வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், திருவாரூரிலிருந்து வெளிவரும் ‘சிவஒளி’ மாத இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார்.
தேவார தோத்திரங்கள், சைவ சித்தாந்தத்தின் இன்ன பிற சாத்திரங்கள் மட்டுமன்றி பட்டினத்தாரும் தாயுமானவரும் வள்ளலாரும் அருணகிரிநாதரும் இந்நூலெங்கும் விரவியிருக் கிறார்கள்.
வள்ளுவரின் குறட்பாக்களிலிருந்து சிவஞானபோதத்தை விளக்கி யிருப்பது இந்நூலின் சிறப்பு. வள்ளுவர் வலியுறுத்தும் கண் ணோட்டம், அவா அறுத்தல், தூய்மை ஆகியவற்றுக்கான சித்தாந்த விளக்கமாகவும் இந்தக் கைவிளக்கு அமைந் துள்ளது.
சைவ சித்தாந்தவாதி களான வ.உ.சி.யும், திரு.வி.க. வும், மறைமலையடிகளும் இந்நூலில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளனர். அவர்களுடன் அத்வைதவாதியான பாரதியும் இடம்பிடித்துள்ளார் என்பது ஆச்சர்யமே.
‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்/ தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளைச் சுட்டிக்காட்டி, நீயே அறிந்து உணர்ந்து கொள் என்று சொன்னதால் பாரதியும் சித்தனே என்கிறார் நூலாசிரியர்.
கண்ணன் பாட்டு வரிகளை எடுத்துக்காட்டி அதன் வழி அவரது அத்வைத நிலைப்பாட்டினைக் குறிப்பிட்டாலும் இறையோடு ஒன்றான நிலையில், செம்போடு களிம்பாய் ஒட்டிநிற்கும் கன்மங்கள் நீங்கும் என்று சித்தாந்தத்துக்கும் அத்வைதத்துக்கும் இடையே இணைப்புப் பாலம் ஒன்றையும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்.
12 சூத்திரங்கள், 39 அதிகரணங்கள், 81 எடுத்துக்காட்டு வெண்பாக்கள் என அனைத்துக்கும் பதவுரை, பொழிப்புரை, தெளிவுரையோடு சிற்சில இடங்களிவ் சுருக்கவுரை, விளக்கவுரைகளையும் கொண்டது இந்தக் கைவிளக்கு.
சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் முதலான வடமொழிச் சொற்களுக்கு நேரிய தமிழ்ச் சொற்களாக பழவினை, நுகர்வினை, ஏறுவினை என்று தனித் தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. படிக்கவும் உணர்ந்துகொள்ளவும் கடினம் என்று கருதப்படும் சிவஞானபோதத்தை முந்தைய உரைநூல்களின் துணையோடு எல்லாரும் எளிதில் வாசித்தறியும்வகையில் படைத்திருப்பது இந்நூலின் வெற்றி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT