Published : 10 May 2022 01:04 PM
Last Updated : 10 May 2022 01:04 PM
கோயில் விழாக்களில் மதுரைச் சித்திரைத் திருவிழாவைப் போலப் பிரத்திபெற்றது திருச்சூர் பூரத் திருவிழா. கடந்த 4-ம் தேதி பூரத் திருவிழாக்கான கொடியேற்றம் நடந்தது. இந்தப் பூரத் திருவிழா 7 நாட்கள் நடக்கும். 7வது நாளான இன்று இறுதிப் பூரம் நடக்கிறது. கொச்சி மன்னனாக இருந்த சக்தன் தம்புரான் என அழைக்கப்படும் ராமவர்மா குஞ்சிப்பிள்ளை 1797, மே மாதம் இந்தத் திருவிழாவைத் தொடங்கினார். அதற்கு முன்பு ஆராட்டுபுழைப் பூரத் திருவிழாதான் பிரசித்திபெற்ற பூரமாக இருந்தது. அதற்கு மாற்றாக அவர் இந்தப் பூரத் திருவிழாவைத் தொடங்கிவைத்தார்.
திருச்சூர் வடக்கும்நாதன் கோயிலின் மேற்குப் பகுதியிலுள்ள திருவெம்பாடி ஸ்ரீகிருஷ்ணன் கோயில், கனிமங்கலம் சாஸ்தா கோயில், லாலூர் பகவதி கோயில், அய்யந்தோல் ஸ்ரீகார்த்தியாயினி கோயில், நைதிலக்காவு பகவதி கோயில் ஆகியவை ஒரு அணியாக இந்த பூரத்தில் பங்கேற்கும். இதற்குத் திருவெம்பாடி ஸ்ரீகிருஷ்ணன் கோயில் தலைமை வகிக்கும்.
திருச்சூர் வடக்கும்நாதன் கோயிலின் கிழக்குப் பகுதியிலுள்ள பாரமேக்காவு பகவதி கோயில், செம்புக்காவு பகவதி கோயில், பனக்கும்பள்ளி சாஸ்தா கோயில், சூரக்கோட்டுக்காவு பகவதி கோயில், பூக்காட்டிக்கரை கரமுக்குப் பகவதி கோயில் ஆகியவை ஒரு அணியாகப் பூரத்தில் பங்கேற்கும். இதற்குப் பாரமேக்காவு பகவதி கோயில் தலைமை வகிக்கும்.
பூரம் கொடியேற்றச் சடங்குடன் தொடங்கும். முதல் வைபவம் நைதிலக்காவு பகவதியின் திடம்பு எனப்படும் வெள்ளி உருவத்தை அதன் யானை, வடக்கும்நாதன் கோயிலின் தெற்கு நடையைத் தள்ளித் திறந்துகொண்டு வெளிவந்து பக்தர்களுக்குக் காட்சி தரும் காட்சி. இந்தச் சடங்கு ‘பூர விளம்பரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த நடை வருடத்தின் மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை.
இதற்கடுத்து பட்டாசுகளைக் கொண்ட வான வேடிக்கை. இதை ‘சாம்பிள் வெடிக்கட்டு’ என அழைக்கிறார்கள். கோயில் மைதானத்தில் சுமார் 1 மணி நேரம் இந்த வெடிக்கட்டு நடக்கும். மலையாள சினிமாக்களில் கதாநாயகர்களின் பஞ்ச் டயலாக் மூலம் இந்த சாம்பிள் வெடிக்கட்டு மிகவும் பிரபலம். அடுத்ததாக அந்தப் பூரத் திருவிழாவுக்காக உருவாக்கப்பட்ட நெற்றிப்பட்டம், வெஞ்சாமரம், ஆலவட்டம், குடைகள், மணிகள் ஆகிவற்றை திருவெம்பாடி, பாரமேக்காவு ஆகிய இரு அணிகளும் வெவ்வேறு இடங்களில் கண்காட்சிக்கு வைக்கும்.
அடுத்து கனிமங்கலம் சாஸ்தா, யானையின் மீது எழுந்தருளும் காட்சி. அடுத்ததாக ‘மடத்தில் வரவு’. 200 பஞ்சவாத்தியக் கலைஞர்கள் இசைக்க நடக்கும் இந்த நிகழ்வு பூரத்தின் பிரசித்திபெற்ற சடங்கு. அடுத்ததாக இலஞ்சித்தரமேளம். இது பாண்டி மேளம் என்றும் அழைக்கப்படுகிறது.
அடுத்ததாக மிக முக்கியமான சடங்கான குடை மாற்றம் நடக்கும். இதில் இரு அணிகளும் பஞ்சவாத்தியப் பின்னணியில் வண்ண வண்ணக் குடைகளை மாற்றிக் காண்பிக்கும். இது காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். பிறகு மீண்டும் வாண வேடிக்கை நடக்கும். இது கூடுதல் நேரம் நடப்பதால் இதை ‘மெயின் வெடிக்கட்டு’ என அழைக்கிறார்கள். இதற்கடுத்து ‘உபச்சாரம் சொல்லிப் பிரிதல்’ என்னும் சடங்கு நடக்கும். பங்கெடுக்க வந்த கோயில்கள் விடை சொல்லிப் பிரியும் சடங்காகும். இதற்கடுத்து இறுதியாகப் பகல் வெடிக்கட்டுடன் பூரம் முடிவடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT