Published : 24 Feb 2022 11:12 AM
Last Updated : 24 Feb 2022 11:12 AM
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான சுதா சேஷய்யன், பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளரும்கூட. இலக்கியம், எழுத்து ஆகிய துறைகளிலும் தொடர்ச்சி யாக ஈடுபட்டுவருபவர். 25-க்கும் மேற்பட்ட இலக்கிய, ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். கலைமாமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர். இன்றைய ஆன்மிக எழுத்து குறித்து அவருடன் உரையாடியதில் இருந்து:
எத்தனையோ தொழில்நுட்பப் புதுமைகள் வந்து விட்ட பின்னர், இன்னமும் பழைய முறையில் அச்சு நூல்களைத்தான் வாசிக்க வேண்டுமா?
தொழில்நுட்பம் புதிய புதிய மின்னணு நூல்களையும் அமைப்புகளையும் கொண்டு வந்துவிட்டது. இருந்தாலும், அச்சு நூல்களைக் கையில் பிடித்துக்கொண்டு வாசிப்பதில் இருக்கும் சுகம் அலாதிதான். அதற்கு ஈடு, அது மட்டுமே. பத்துப் பதினைந்து அச்சு நூல்கள் சேர்ந்த மாதிரி இருந்தால், அந்த இடத்துக்கே ஒரு வாசம் இருக்கும். புத்தகத்தைக் கையில் எடுக்கும்போதே அந்த வாசம் அப்படியே ஈர்க்கும். அதுவொரு வகையான அன்பு வாசம். அனுபவித்தவர்களுக்கு அதன் அருமை தெரியும். அச்சு நூலை வாசிக்கும்போது, அதன் சூழலுக்குள் வாசகர் புகுந்து விடுவார். புத்தக மாந்தர்களில் ஒருவராகத் தானும் மாறிவிடுவார். என்னதான் ஹை-டெக் ஆக இருந்தாலும், மின்னணுவில் இந்தச் சுகம் கிடைப்ப தில்லை. குறிப்பாக, ஆன்மிக நூல்கள் காகித வடிவில் இருக்கும்போது, கூடுதலான இன்பம், பயன் கிடைக்கிறது.
ஆன்மிகப் புத்தகங்கள் அச் சில் இருந்தால் கூடுதல் பயன் கிடைப்பது எப்படி என்று விளக் குங்களேன்?
தேர்வுக் காகப் படிக்கும் போது, பாடப் புத்தகங்களை எப்படிப் படிப்போம்? திருப்பித் திருப்பி, புரட்டிப் புரட்டிப் படிப்போம் இல்லையா? அதே போலத்தான் ஆன்மிகப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டிவரும். முன்னால் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களுக்கோ சங்கதிகளுக்கோ தொடர்பான தகவல், நூலின் பிற்பகுதியிலோ இடையிலோ இருக்கும். புரட்டிப் புரட்டி, தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டியிருக்கும். மின்னணு வடிவில் இது குழப்பத்தைத் தோற்றுவிக்கும். ஆனால், அச்சுப் புத்தகத்தில் இதற்கான வசதி அதிகம். ஆன்மிகப் புத்தகத்தில் இருப்பவை யாவும், வாழ்க்கைப் பயணத்துக்கான வழிகாட்டிகள். அவற்றை உள்ளத்தில் பதியன் போடுவதற்கு மீண்டும் மீண்டும் பார்க்கவும், தேடவும், சிந்திக்கவும் வேண்டியிருக்கும்.
ஆன்மிகப் புத்தகங்கள் மறந்து போக வேண்டியவையும் அல்ல; மறந்து போகக்கூடியவையும் அல்ல. என்றென்றும் நெஞ்சில் நிற்க வேண்டியவை.
ஆன்மிக நூல்களிலும், கதைகளைச் சொல்லும் புராணங்களும் காவியங்களும்தாமே அதிகம்?
அந்தக் கதைகள், கதைக்கானவை அல்ல. கருத்தைச் சொல்வதற்காக! கதை என்பது ஓர் அமைப்பு முறை, அவ்வளவுதான். கதை மாந்தரோ, கதை மாந்தரின் பெயரோ முக்கியமில்லை. கதைக்குள் இருக்கும் கரு, பயன் போன்றவை முக்கியம்.
சில எடுத்துக்காட்டுகளை விளக்கமாகக் காண்போம். நம் நாட்டு ஆன்மிகக் கதைகளில் ராமாயணம் முக்கியமானது என்பது தெரியும். இந்தக் கதையை, நம்முடைய நாட்டின் ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு காவியகர்த்தாக்கள் படைத்திருக்கிறார்கள். சிலவற்றில் புதிய கதை மாந்தர்களைச் சேர்த்திருப்பார்கள்; சிலவற்றில் குறைத்திருப்பார்கள். ஆனால், உள்ளிருக்கும் கருத்தும் வாழ்க்கைப் பாடமும் மாறாது. கருத்தையும் வாழ்க்கைப் பாடத்தையும் உணர்வதற்கு, திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டிவரும். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும், ஒவ்வொரு கோணம் புலப் படும். புதிய புதிய பரிமாணங்கள் தெரியும். ராமன், சீதை, பரதன் என்னும் தனித்தனிப் பெயர்களைக் காட்டிலும், இவர்கள் காட்டியிருக்கும் விழுமியங்களுக்கே மதிப்பு அதிகம்.
சிலவற்றைத் திரும்பத் திரும்பச் செய்யவேண்டி வரும். சில நூல்களை உண்ண வேண்டும்; சிலவற்றைச் செரிக்க வேண்டும்; சிலவற்றில் முழுமையாக ஒன்றறக் கலக்க வேண்டும் என்பார்கள். ஆன்மிக நூல்கள் ஒன்றறக் கலக்க வேண்டிய வகை.
ஆன்மிக அச்சுப் புத்தகங்களை வைத்திருப்ப தனால் என்ன பயன்?
கண் முன்னால் பொருள்கள் இருக்கும்போது அவை நினைவில் இருந்துகொண்டேயிருக்கும். அன்றாட வாழ்க்கையில் எத்தனை முறை இதை உணர்ந்திருக்கிறோம். ‘செய்ய வேண்டியதற்கான பொருளைக் கண் முன்னால் வை; இல்லையானால் மறந்துவிடுகிறது’ என்று எத்தனை முறை கூறியிருக்கிறோம். அச்சுப் புத்தகமும் அப்படித்தான் – கண் முன்னால் அது தட்டுப்படும்போது, வாசிக்க வேண்டும் என்னும் உந்துதல் தோன்றும். வாசித்தது நினைவில் நெருடும். கருத்துகளை உள்ளம் அலசும். மொத்தத்தில், ஆன்மிகப் புத்தகத்தால் உண்டான வெளிச்சம் அகக்கண்ணில் பளிச்சிடும்.
வாசிக்க வேண்டிய ஆன்மிக எழுத்தாளர்கள் கி.வா.ஜகந்நாதன் பரணீதரன் வேணுகோபாலன் ‘அண்ணா' சுப்பிரமணியன் ரா.கணபதி டி.என்.ராமசந்திரன் திருவாசகமணி பாலசுப்பிரமணியம் முத்தாலங்குறிச்சி காமராசு சுவாமி விமூர்த்தானந்தர் வரலொட்டி ரங்கசாமி பிரபுசங்கர் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT