Published : 10 Feb 2022 12:07 PM
Last Updated : 10 Feb 2022 12:07 PM
திருவாரூர் பெரிய கோவிலில் பல உட்கோவில்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து கோவில்கள் சிறந்தவை என்பர். அவற்றுள் ஒன்று வடக்குப் பிராகாரத்தில் உள்ள ‘சித்தீச்சரம்’. ‘அம்சன்’ என்கிற அசுரன் தனது குருவான சுக்ராச்சாரியாரின் உபதேசத்தின்படி சிவனுக்கே உரிய ‘நமசிவாய’ மந்திரத்தை ஓதி ‘சித்தீசன்’ என்று பெயர் பெற்று, இந்தச் சிவலிங்கத்தை ஸ்தாபித்து ஆராதனை செய்ததால் ‘சித்தீச்சரம்’ என்று பெயர் பெற்றது. இக்கோவிலின் தெற்குப் பக்கத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு 'மேதா தட்சிணாமூர்த்தி' என்று பெயர். இவர் வலது காலைத் தொங்கவிட்டபடி, இடது காலை மடித்து வைத்தபடி உள்ளார். வலது மேல் கரத்தில் அட்ச மாலையைத் தாங்கியுள்ளார். கீழ்க் கரம் சின்முத்திரையைக் காட்டியபடியும், இடது மேல் கரத்தில் அக்னியைத் தாங்கியபடியும், கீழ்க் கரத்தில் சுவடிக்குப் பதில் அக்கரத்தை இடது கால் மீது தொங்க விட்டபடியும் அமர்ந்திருக்கும் கோலம் வித்தியாசமாக உள்ளது.
அழகிய ஜடா முடியும், வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் குழையும் அணிந்துள்ளார். வலது காதின் பின்புறத்தில் இருந்து ஒரு நாகம் எட்டிப் பார்த்தபடி உள்ளது. மார்பிலும், இடையிலும் அணிமணிகள் சிறப்பாக இருக்கின்றன. இடையில் உள்ள சிம்மம் சோழர் காலத்தை நினைவுபடுத்துகிறது. தொங்கவிட்ட வலது காலில் சிவனுக்குகே உரிய 'வீர கண்டை’ என்கிற அணிகலனை அணிந்துள்ளார். காலடியில் முயலகன் உள்ளான். சுற்றிலும் சனகாதி முனிவர்கள் காணப்படவில்லை. முக்கியமாகப் பின்புறத்தில் ஆலமரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT