Published : 30 Dec 2021 06:48 AM
Last Updated : 30 Dec 2021 06:48 AM
இஸ்லாமியக் கட்டிடக் கலைக்கு என்று பொதுவாக விதிகள் இல்லை. இஸ்லாம் பரவிய எல்லா நாடுகளிலேயுமே பள்ளிவாசல்களை கட்டும்போது அந்தந்த நாடுகளில் உள்ள கட்டிடக்கலைக்கு ஏற்ப கட்டுமானங்கள் கட்டப்பட்டன.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றி தமிழகத்தின் கடற்கரைப் பட்டினங் களில் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இந்தப் பள்ளி வாசல்கள் அனைத்தும் திராவிட கட்டிடக் கலைப் பாணியைக் கொண்டிருந்தன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அநேக கடற் கரை கிராமங்களில் இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். கீழக் கரை பள்ளிவாசலில் உள்ள ஓர் இஸ்லாமியப் பெண்மணியின் கி.பி.1300ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்லறைக் கல்வெட்டு மூலம் இங்கே, கி.பி.12ஆம் நூற்றாண்டுகளிலேயே இஸ்லாமியர்கள் குடியிருந்ததையும் பள்ளிவாசல் இருந்ததையும் அறிய முடிகிறது. வட்டானம் மற்றும் வாலிநோக்கத்தில் கி.பி.15ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் பள்ளி இருந்ததை அங்குள்ள கல்லறைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை களில் கிடைக்கும் பாறைகளைக் கொண்டே அதிக அளவில் கோயில்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பாம்பன், மண்டபம், கீழக்கரை, வேதாளை, வாலிநோக்கம், நரிப்பையூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களும் கடற்கரைப் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட மணற்பாறைகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. கோயில்கள் கட்டப் பயன்படுத்திய திராவிடக் கட்டிடக் கலையின் சாயலில் பள்ளிவாசல்களையும் கட்டியுள்ளனர்.
பள்ளிவாசல்களின் அமைப்பு
தொழும் மாடம், மகாமண்டபம், முன் மண்டபம், தாழ்வாரம் என்ற அமைப்பில் பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்புறத்தில் அதிஷ்டானம், பாதசுவர், பிரஸ்தரம் ஆகிய அமைப்புகள் உள்ளன. தூண்களிலும், மேற்கூரையிலும் பலவிதமான பூக்களின் உருவங்கள் கோட்டுருவங்களாகவும் புடைப்புச் சிற்பங்க ளாகவும் வெட்டப்பட்டிருக்கும். கீழக்கரை, வேதாளை, நரிப்பையூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள் திராவிட கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளன.
கீழக்கரையின் சில பள்ளிவாசல்களில் உள்ள தூண்கள் வெட்டுப் போதிகை, தாமரைப்பூ, வாழைப்பூ போதிகைகளோடு கூட்டுத்தூண்களாக கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. தூணுக்கு மேல் வைக்கும் தாங்கு கட்டைதான் போதிகை என்று சொல்லப்படுகிறது. இங்கு பிற்காலப் பாண்டியர், சேதுபதி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கல்லுப்பள்ளிகளும் உள்ளன. அவற்றின் தூண்கள், போதிகைகள், கொடுங்கைகள் மூலம் அவற்றின் கலைப்பாணியை அறிய முடிகிறது. அதே காலகட்டத்தில் கட்டப் பட்ட ராமேசுவரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில் தூண்களும் இதுபோலவே அமைந்துள்ளது.
கொடையளித்த மன்னர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப் புல்லாணி கோயிலில் உள்ள கி.பி.1247ஆம் ஆண்டைச் சேர்ந்த, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப் பட்டினத்திலுள்ள பிழார் என்ற பள்ளிவாசலுக்கு ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்கள் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இஸ்லாமியர்களின் பள்ளிவாசலுக்குக் கொடை வழங்கிய கல்வெட்டு வைணவக் கோயிலில் இருக்கிறது. ராமேசுவரத்தில் உள்ள ஆபில் ஹாபில் தர்க்காவுக்கு முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர் கி.பி. 1745ஆம் ஆண்டு நிலதானம் வழங்கியுள்ளதை செப்பேடு மூலம் அறிய முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT