Last Updated : 16 Dec, 2021 03:05 AM

 

Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

சித்திரப் பேச்சு: அகோர மூர்த்தி

கண்களில் உக்கிரம், கோரைப்பற்களுடன், இதழ்களில் மந்தகாச சிரிப்புமாக வலதுகரத்தை அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார் சிவனின் அம்சமான அகோர மூர்த்தி. இடது கரத்தை ஒயிலாக தொடைமீது வைத்திருக்கிறார். பரந்து விரிந்த தோள்களுமாக, வலதுபக்க இடுப்பைச் சற்று ஒசித்து கம்பீரமாக ஈஸ்வர அம்சமாக, நின்ற கோலத்தில் இவர் காட்சியளிப்பது, சிதம்பரம் கோயிலின் கிழக்குக் கோபுரத்தின் தெற்குப் பக்கத்தில்.

தலையிலே அழகிய நவரத்தின மணி மகுடமும், காதுகளில் மகர குண்டலங்களும், காதோரங்களில் அழகான மணிச்சரங்களும் உள்ளன. தலையின் பின்புறம் அரைவட்ட வடிவில் சுருள் சுருளாக கேசம். மார்பிலும், தோள்களிலும், கழுத்திலும் அணிமணிகளும், நீண்ட முப்புரி நூலும் சிறப்பாக உள்ளன.

தோள்களில் வளையும், கைகளில் வங்கியும் அற்புதம். இடையில் உள்ள ஆடைகள் காற்றில் பறப்பதுபோல் உள்ளன. சோழர்களின் சிம்மம் இடையில் காணப்படுகின்றது. இந்தக் கிழக்குக் கோபுரம் பொது ஆண்டு 1250-ல் மதுரையை ஆண்ட சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. இந்தக் கோபுர வாசல் வழியாகத்தான்  நடராஜ பெருமானை, மாணிக்கவாசகர் சென்று தரிசித்ததாக, ஒரு செவிவழிச் செய்தி உலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x