Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான திருக்கண்ண புரம் சௌரிராஜப் பெருமாள் கோயில், பூலோக வைகுண்டம், முக்தி தரும் தலங்களில் முதன்மைத் தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என பல பெருமைகளைப் பெற்றது.
108 வைணவத் தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலி ருஞ்சோலை மலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் , திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் மூலவராக நீலமேகப் பெருமாளும் உற்சவராக சௌரிராஜப் பெருமாளும் உள்ளனர். தாயார் கண்ணபுர நாயகி. நித்ய புஷ்கரிணி தீர்த்தமாகும்.
ஒருசமயம் திருக்கண்ணபுரம் உற்சவ பெருமாளுக்கு அணிவித்த மாலையை, கோயில் அர்ச்சகர், மன்னரிடம் கொண்டு போய் கொடுத்தார். அதில் இருந்த ஒரு தலைமுடியைக் கண்டு, அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்டார் மன்னர். மன்னரின் கோபத் துக்கு ஆளாகக் கூடாதே என்பதால் ‘தலைமுடி இறை வனுடைய முடிதான்’ என்று அர்ச்சகர் கூறினார்.
மன்னர் இதை நம்ப மறுத்து, நேராக கோயிலுக்குச் சென்று உற்சவருடைய தலையில் இருந்த குழற்கற்றையைக் கண்டார். அது உண்மையான முடியா என்று அறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டார். அர்ச்சகரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க, அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னர் தன் தவற்றை உணர்ந்தார்.
அர்ச்சகரின் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உற்சவருக்கு தலையலங்காரம் சௌரி முடியுடன்தான் நடைபெறுகிறது. பெருமாளுக்கு ‘சௌரிராஜப் பெருமாள்’ என்று பெயர் வழங்க இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அமாவாசை தினத்தில் உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனத்தைக் காணமுடியும்.
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். ‘சௌரி’ என்ற சொல்லுக்கு ‘முடி' என்றும், ‘அழகு' என்றும் பொருள்கள் உண்டு.
ஏழு அடுக்குகளைக் கொண்டது சௌரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவறை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.
கிருஷ்ணாபுரம் அன்று அழைக்கப்பட்ட இவ்வூரானது பின்னர் திருக்கண்ணபுரம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது. திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கவித்தலம், திருக்கோவலூர் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்கள் என்று போற்றப்படுகின்றன.தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது.
குழந்தையைத் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய, ‘மன்னு புகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே’ என்ற தாலாட்டுப் பாடலை பாடுவது வழக்கம். 10 பாசுரங்கள் பாடியுள்ள குலசேகர ஆழ்வார், இத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார்.
பூலோக வைகுண்டம்
திருமால் இத்தலத்தில் எட்டு அட்சரங்களிலும் உருக்கொண்டு உறையும் தவமாதலால் ‘அஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி க்ஷேத்ரம்’ என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதால் இத்தலத்தில் சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது. அருகிலேயே உள்ள திருமலைராயன் பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறுகிறது. வைகாசி மாத பிரம்மோற்சவமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விபீஷணனுக்கு பெருமாள் தன் நடையழகைக் காட்டி அருள் செய்தது ஓர் அமாவாசை நாளில் என்பதை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் உற்சவருக்குத் திருமஞ்சனம் செய்து, சௌரிமுடி அணிவித்து, புறப்பாடு நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT