Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM
திருப்பணி ஆற்றுவதற்காக ஆலயத்திற்குள் நுழைந்தபோது எக்குறையும் இன்றி எல்லோரிட மும் இயல்பாகப் பேசியவர் தான் அந்த அருட்பணியாளர். ஆனால் செய்ய வேண்டிய திருப்பணியைச் செய்து முடித்து வெளியே வந்தபோது அவரால் பேச இயலவில்லை. யார் என்ன கேட்டாலும் பேசும் திறனற்ற நபர்களைப் போல சைகை செய்தார். பேசும் திறனை இழக்கும் அளவுக்கு ஆலயத்தில் அப்படி என்ன நடந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு பைபிள் பதில் சொல்கிறது.
அவர் பெயர் செக்கரியா. எருசலேம் ஆலயத்தில் திருப்பணி செய்த சுமார் ஏழாயிரம் குருக்களில் இவரும் ஒருவர். இந்த ஏழாயிரம் குருக்களும் தங்கள் குல மரபின்படி இருபத்து நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஆலயத்தில் திருப்பணி செய்யும் வாய்ப்பு ஆண்டுக்கு இருமுறை கிடைக்கும். ஒவ்வொரு முறைக்கும் ஒரு வாரம்.
செக்கரியாவின் மனைவியின் பெயர் எலிசபெத். கணவன், மனைவி இருவரும் கடவுளின் கட்டளைகள் யாவையும் கடைப்பிடித்து, குற்றமற வாழ்ந்த நேர்மை யாளர்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை என்பதுதான் பெரும் துயரமாக இருந்தது. இந்த மனத்துயர் நீங்கி தங்களுக்குப் பிள்ளைப்பேறு அமைய வேண்டும் என செக்கரியா, எலிசபெத் இருவரும் பல்லாண்டுகளாக இறைவனை மன்றாடி வந்தனர்.
ஆனால் வயது ஏறி, ஏறி இருவரும் முதியோராய் ஆனார்களே தவிர, அவர்கள் கேட்ட பிள்ளைப்பேறு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
கடவுளின் தூதர்
ஆலயப் பணியாற்றும் பொறுப்பு செக்கரியாவுக்கு வந்தது. அப்போது திருப்பணி ஆற்றிய வேளையில் கபிரியேல் என்னும் கடவுளின் தூதர் தோன்றி செக்கரியாவிடம் பேசினார்.
“செக்கரியா, அஞ்சாதீர். உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத் உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்" என்று சொன்ன வானதூதர் பிறக்கவிருக்கும் குழந்தை எத்தகைய மனிதராக இருப்பார், என்ன பணியாற்றுவார் என்பதை விளக்கமாகச் சொன்னார்.
செக்கரியாவால் நம்ப முடியவில்லை. “நான் வயதானவன். என் மனைவியும் வயது முதிர்ந்தவர். எனவே இந்த வயதில் எங்களுக்குக் குழந்தை பிறக்கும் என்பதை நான் எப்படி நம்புவது?” என்று அவர் கேட்டார்.
செக்கரியா நம்பவில்லை என்பதால் ஏமாற்றமும் எரிச்சலுமுற்றார் கபிரியேல். செக்கரியாவுக்கு சிறு தண்டனை ஒன்றை வழங்கி னார். “உரிய காலத்தில் தேவன் தரப்போகும் கொடையை நீர் நம்பவில்லை. எனவே அவை நிறை வேறும் வரை நீர் பேச இயலாது.”
செக்கரியா வெளியே வந்தபோது பேச்சிழந்தவராக இருந்தார். அதைக் கண்ட மக்கள் வியப்புற்றனர். திருப்பணிக்கான நாட்கள் கடந்ததும் செக்கரியா வீடு திரும்ப, விரைவில் வானதூதர் சொன்னவாறே அவர் மனைவி எலிசபெத் கருவுற்றார். முதிய வயதில் தனது வயதில் பூத்த கருவை எண்ணி எலிசபெத் மகிழ்ந்தார்.
இது நிகழ்ந்து ஆறு மாதங்கள் கழித்து வானதூதர் கபிரியேல் மீண்டும் இவ்வுலகுக்கு வந்து இன்னொரு பெண்ணிடம் இதைவிட முக்கியமான செய்தியைச் சொன்னார்.
இன்னொரு அற்புதம்
கலிலேயா மாநிலத்தில் நாசரேத் எனும் ஊரில் வாழ்ந்த மரியா எனும் இளம்பெண் அதே ஊரைச் சார்ந்த யோசேப் எனும் நெறி தவறாத, நேர்மையான மணமகனுக்கு நிச்சயம் செய்யப்பட்டார். கபிரியேல் மரியா விடம் சென்று, “அருள் மிகப் பெற்றவரே, வாழ்க! இறைவன் உம்மோடு இருக்கிறார்” என வாழ்த்தினார். எளிய பெண்ணாகிய தன்னை வானதூதர் ஒருவர் தேடி வந்து இப்படி வாயார வாழ்த்துவதைக் கேட்ட மரியா சிறிது கலக்கமுற, வானதூதரோ, “மரியாவே, அஞ்ச வேண்டாம். கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” என்று சொல்லிவிட்டு, செக்கரியாவிடம் சொன்னது போன்றே பிறக்க விருக்கும் குழந்தை எத்தகையவராக இருப்பார் என்பதையும் விவரமாகச் சொன்னார்.
இறைவன் என்ன விரும்புகிறார் என்பது மரியாவுக்குப் புரிந்தது. ஆனால் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கன்னிப் பெண்ணாக தான் இருப்பதால், வானதூதர் மூலம் இறைவன் அறிவித்தது எவ்விதம் நிறைவேறும் எனக் கேட்கிறார். “உன்னதக் கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அது இறைமகன் என அழைக்கப்படும். கடவுளால் ஆகாதது என்று ஏதும் உண்டா? கருவுற இயலாதவர் என்று கருதப்பட்ட உமது உறவுப் பெண் எலிசபெத் கருவுற்று ஆறு மாதங்கள் ஆகின்றன" என்றார் வானதூதர்.
"நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற் படியே எனக்கு நிகழட்டும்'' என்று மரியா பணிந்தார்.
மேலெழுந்தவாரியாக பைபிளை வாசிப்பவர்களுக்கு என்ன தோன்றலாம்? ‘செக்கரியாவும் இப்படித்தானே கேட்டார்? அப்போது எரிச்சலுற்று தண்டனை வழங்கிய வானதூதர் மரியாவின் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லுகிறாரே' என்று நினைக்கத் தோன்றும்.
“இறைவன் கேட்பதை மறுக்க என்னால் எப்படி இயலும்? நான் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றும் அவரது பணியாள். எனவே நீர் சொன்னது சொன்ன படி நிகழட்டும். ஆனால் எனது நிலை இது என்பதால் இது எவ்வாறு நிறைவேறும் என்பதை எனக்குச் சொல்லும்" என்று தாழ்ந்து பணிந்து கேட்டார் மரியா.
கடவுளின் திட்டம் எப்படி நிறைவேறும், அவரது வாக்குறுதிகள் எவ்விதம் நடந்தேறும் என்று நமக்குப் புரியாத நேரம் நம் வாழ்விலும் வரலாம். 'இது நிகழும் என்பதற்கு என்ன ஆதாரம்? என்ன அடையாளம்?' என்று முரண்டு பிடிக்காமல், ‘இது எப்படி நிகழும் என்று எனக்குப் புரியாவிட்டாலும், நிகழ்த்துவது நீரென்றால் எதுவும் நிகழும், எல்லாமும் நிகழும். நீர் நினைத்தவை நீர் நினைத்தவாறே நிகழட்டும்!' என்று பணிவதே அவரது அடியார்க்கு அழகு.
இதுவே நம்பத் தயங்கும் செக்கரியாவின் பிடிவாதமும், நம்பும் மரியாவின் சரணாகதியும் நமக்குச் சொல்லும் செய்திகள்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT