Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM
ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கன் அருளால் கூரத்தாழ் வானுக்குப் பிறந்த ஆண்குழந்தையைப் பார்க்க அவரது திருமாளிகைக்கு எம்பார் கோவிந்தருடன் ராமாநுஜரும் சென்றார். கோவிந்தர் உள்ளே சென்று “ஓம் நமோ நாராயணா” என மந்திரம் கூறி குழந்தையை எடுத்து வந்தார்.
ராமாநுஜர் அந்தக் குழந்தை களுக்கு பராசர பட்டர் எனப் பெயர் சூட்டினார். ஒருநாள் பராசர பட்டர் திருவரங்கம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீரங்கவீதியில் ஒரு வித்வான் தன் சிஷ்யர்கள் புடைசூழ வாழ்த்தொலி முழங்க பல்லக்கில் வந்தார்.
மகாவித்வான் வருகிறார்; ஒரேயொரு சர்வக்ஞர் வருகிறார்; எல்லாம் அறிந்த பண்டிதர் வருகிறார் என்றெல்லாம் புகழ்ந்தபடி ஊர்வலம் வந்தனர். இதனைப் பார்த்த குழந்தை பராசர பட்டர் நேரே சென்று பல்லக்கை வழிமறித்தது. “எங்கள் ஊரில் ஸ்ரீ வைணவாச்சாரியன் இராமாநுசர் உள்ளார். எல்லா சுகங்களை யும் இறைவனுக்காக துறந்த, என் தந்தை கூரேசர் உள்ளார். வைணவச் சிற்பிகளான முதலியாண்டார், அருளாளப் பெருமான் எம்பார் கோவிந்தர் எல்லோரும் இருக்க! நீர் எப்படி சர்வக்ஞர் ஆவீர்.” என்று கேட்டார்.
பல்லக்கிலிருந்தவர் திரையைச் சற்று விலக்கிப் பார்த்தார். அதைப் பார்த்த குழந்தை பராசர பட்டர், “ஓ நீர்தான் அந்த சர்வக்ஞரோ” என்று கேட்டுவிட்டு, கீழே குனிந்து ஒரு கையில் மண்ணை அள்ளி, இதில் எவ்வளவு மண் உள்ளது எனக் கேட்டார்.
கையில் உள்ள மண்துகள்கள் எவ்வளவு என்று எப்படி தெரியும் என சர்வக்ஞ பட்டர் பேசாமல் திக்குமுக்காடிப் போனார். ஒருபிடி மண் என்றுகூட சொல்லத் தெரியாத நீர் எப்படி சர்வக்ஞராக இருக்க முடியும் என்று பராசர பட்டர் கேட்டுவிட்டு, இத்துடன் உம்மைப் பற்றிய புகழ்ச்சியை நிறுத்திக்கொள்ளும் என்று கூறினார்.
சர்வக்ஞ பட்டர் பிரமித்துப் போனார். அங்கிருந்தவர்களைப் பார்த்து இது யார் வீட்டுக் குழந்தை? என்று கேட்டார். கூரத்தாழ்வாருடைய திருக்குமாரன் பராசர பட்டர் என்று பதில் கிடைத்தது. பறப்பதன் குஞ்சு தவழுமோ என்று மகிழ்ச்சி எய்தியவராக, பராசர பட்டரைத் தூக்கிப் பல்லக்கில் அமரவைத்து அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டார்.
இப்படி வேத வேதாந்தங்கள் படித்துத் தேறாத, விவரமே தெரியாத சிறுவயதில் மற்றவர் சர்வக்ஞன் என்று சொன்னதைப் பொறுக்காமல் தன் வாக்குசாதுரியத்தால் வென்ற பட்டரைப் போல அடியாள் யாரிடமும் பேசி ஜெயிக்கும் சாமர்த்தியம் இல்லாதவளாக இருக்கிறேனே சுவாமி என்று திருக்கோளூர் பெண்பிள்ளை புலம்புகிறாள்.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT