Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM
பெரிய திருவடி என்ற பெயர்பெற்றவர்; மகரிஷி காசியபருக்கும் வினதைக்கும் மகனாகப் பிறந்தவர் கருட பகவான். இவரது தம்பி அருணன் சூரியனின் சாரதி ஆவார். நாகர்களின் தாயான கத்ரு அவருக்குச் சிற்றன்னை. சிற்றன்னையின் சூழ்ச்சியால் கருடனின் அன்னை வினதை அவர்களுக்கு அடிமை ஆனார். கருடன் தனது அன்னையை மீட்க தேவலோகத்தில் இருந்து அமிர்தக் கலசத்தை கொண்டு வந்தார். தர்ப்பைப் புல்லின் மீது அமிர்தக் கலசத்தை வைத்திருந்த நிலையில், நாகர்கள் குளிக்கச் சென்றபோது தேவேந்திரன் அமிர்தக் கலசத்தை எடுத்துச் சென்றுவிட்டான். திரும்பி வந்த நாகர்கள் கலசம் இருந்த புல்லைச் சுவைத்தால் பலன் கிடைக்கும் என்ற ஆவலில் தங்கள் நாக்கினால் நக்கியதால் பாம்பினங்களுக்கு நாக்கு பிளவுபட்டது என்ற கர்ண பரம்பரைக் கதையும் உண்டு. தேவலோகத்தில் இருந்து கொண்டுவந்த அமிர்தக் கலசத்தை மேல் வலது கரத்திலும், இடது மேல் கரத்தில் சிற்றன்னை கத்ருவையும் கொண்டுள்ளார். அஞ்சலி வர ஹஸ்தராய் கீழ்கரங்களைக் காட்டி காட்சி தருகிறார். தலையில் அழகான கிரீடமும் நாகமும் உள்ளன. கரங்களிலும் நாகங்கள் ஆபரணங்களாக திகழ்கின்றன. செவிகளின் இரண்டு பக்கங்களிலும் சுருண்ட தலைக்கேசமும் உள்ளது. முத்துமணியாரங்களும் காதுகளில் கர்ண குண்டலங்களும் ஆடுகின்றன. மார்பிலும் இடையிலும் முத்து மணிமாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இருபுறமும் அழகிய இறக்கைகளும் உள்ளன. இந்தக் கருடாழ்வார் இருப்பது ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவரில் யார் உயர்ந்தவர் என்ற போட்டியில் தான்தான் உயர்ந்தவர் என்பதை நிரூபிக்க ஸ்ரீதேவி பூலோகத்தில் தவம்செய்து பெருமாளை கைத்தலம் பற்றிய திருத்தலமாகக் கருதப்படுகிறது. மகாலட்சுமி நின்ற கோலத்தில் காட்சி தரும் திருத்தலம்; திருமகள் தங்கியதால் திருத்தங்கல் என்ற பெயர் பெற்ற திருத்தலம் இது. மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னன், 14-ம் நூற்றாண்டில் கட்டியது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ள திருத்தங்கல் என்ற ஊரில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT