Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM
ஆயர்பாடியில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவன் கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட வத்சாசுரன் சற்றே உயரமான காளை கன்றுக்குட்டி வடிவில் உருமாறி மூக்கணாங்கயிறோ கழுத்தில் கயிறோ இன்றி வேகமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான். அந்தக் கன்றுக்குட்டியின் மீது லாகவமாக ஏறி கண்ணன் அமர, அசுரன் விஸ்வரூபம் எடுத்து கொல்ல நினைத்திருந்தான். சிறுவன் கண்ணனோ தன் எடையை அதிகரித்துக்கொண்டே செல்ல, அசுரன் பாரம் தாங்க முடியாமல் கண்ணனை கீழே தள்ள முயற்சிக்க, கண்ணனோ அதன் கழுத்தை லாகவமாகச் சுற்றி கெட்டியாகப் பிடித்துக்கொண்டி ருக்கிறான். கன்றுக்குட்டியின் விழிகள் பிதுங்கி தடுமாறித் தளரும் அந்த அழகான காட்சியை, ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டநாதர் சன்னதிக்கு போகும் வழியில் மகா மண்டபத் தூண் ஒன்றில் காண்கிறோம். ஒரு அடி உயரத்தில் காணப்படும் சிற்பம் இது. வலது கரத்தால் கன்றுக்குட்டியின் கழுத்தை லாகவமாகச் சுற்றி பிடித்துக்கொண்டு, அதன் முதுகில் இடது கரத்தை ஊன்றியபடி, இடது காலை தூக்கி வைத்திருக்கும் பாங்கு வெகு அற்புதம். தலையில் அழகான கொண்டையும், முத்துகளால் ஆன நெற்றிச் சுட்டியும், சூரிய சந்திரன் போன்ற ஆபரணங்களும், கழுத்திலும் மார்பிலும் இடையிலும் முத்து மணிமாலைகளும் அலங்கரிக்கின்றன. சிறுவன் கண்ணன் முகத்தில் அசாதாரணமான புன்னகையும், கன்றுக்குட்டியின் விழிகள் பிதுங்கி பாரம் தாங்காமல் இரண்டு முன்னங்கால்களைத் தூக்கித் தடுமாறும் கோலத்தில் வடித்துள்ள சிற்பியின் திறமையை என்ன சொல்லிப் பாராட்ட. நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டதால் அவர்களுக்கு முத்து மணிகள் மீது அபார பிரியம் இருந்திருக்கலாம். போதாக்குறைக்கு தூத்துக்குடியும் அருகில் இருந்ததால் தங்களுக்கு மட்டுமின்றி, தாங்கள் வடித்த அனைத்து சிற்பங்களுக்கும் அணிவித்து மகிழ்ந்திருந்தனர் போலும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT