Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM
பெரும்பாலும் நரசிம்மர், லக்ஷ்மி தேவியுடன் காணப்படும்போதும் உக்கிரமூர்த்தியாகவே பல இடங்களில் தெரிவார். இந்த நரசிம்மரைப் பாருங்கள்! லக்ஷ்மி தேவியை மடியில் அமர்த்திக்கொண்டு தலையைச் சற்று சாய்த்து தேவியைப் பார்த்து ரசித்தபடி ஆனந்தமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு இருப்பது போல் காட்சியளிக்கிறார். கண்களில் தாம் எவ்வளவு மகிழ்ச்சி. வாயைப் பாருங்கள். ஆனந்தமாகச் சிரித்தபடி காட்சியளிக்கும் பாங்கே அழகு. சுருண்ட பிடரி முடி, அழகிய கிரீடத்தில், தோள்களில், சூரியகாந்திப் பூக்கள் அலங்கரிக்கின்றன. சிங்க முகத்தில் கண்களும் சிரிக்கின்றன கல்லில்.
நரசிம்மர் மற்றும் லக்ஷ்மிதேவியின் மார்பிலும் தோள்களிலும் கரங்களிலும், இடையிலும், கால்களிலும் வித்தியாசமான அணிமணிகளும் சிறப்பாகவும், நுட்பமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய நாட்டில் காரைக்குடிக்கும், புதுக்கோட்டைக்கும் மத்தியில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, சத்தியமூர்த்தி பெருமாளும், சத்தியகிரீஸ்வரரும் இணைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலயம் இது. முத்தரையர்களால் கட்டப்பட்டது.
தற்போது திருமயம் என அழைக்கப்படும் திருமெய்யம் கோயிலில் உள்ளார். இந்தச் சிற்பத்தில் நரசிம்மரின் அபய ஹஸ்தத்தில் கட்டை விரலும், லக்ஷ்மிதேவியின் இரண்டு பாதங்களும், தொடைப் பகுதியும் பின்னம் அடைந்துள்ளதால் இவர்களை, பக்கத்தில் உள்ள நட்சத்திர வடிவில் இருக்கும் குளக் கரையில் மரத்தடியில் மற்றவர்கள் தொந்தரவு செய்யாதபடி ஏகாந்தமாக விட்டு வைத்துள்ளனர். பின்னமடைந்த பகுதிகளைப் பூர்த்தி செய்து நான் வரைந்துள்ள ஓவியம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT