Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM
‘மந்திரமாவது…’ என்று தொடங்கும் தேவாரப் பாடலுக்கு காருகுறிச்சி அருணாசலத்தின் நண்பரும் இசைப் பேராசிரியருமான டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அமைத்த மெட்டைத்தான் சற்று மெருகேற்றி, ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் ‘சிங்கார வேலனே தேவா…’ பாடலுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து வாசித்தார் காருகுறிச்சியார். ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்பட வெளியீட்டுக்குப்பின் இப்பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரதமர் நேரு, ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவரது இசையில் மெய்மறந்தார்கள்.
காருகுறிச்சியார் வாசிப்பில் ராக ஆலாபனை, நிரவல், ஸ்வரம், கீர்த்தனை கச்சிதமான கால ப்ரமாணத்துடன் மிகவும் உயர்வாக இருக்கும். சங்கீதத்தில் சுகமான இடம் சவுக்க காலம் என்று சொல்வார்கள். ஆனால் துரித காலத்திலும் காருகுறிச்சியாரின் வாசிப்பு இதமளிக்கும்.
“உங்க அண்ணன் (காருகுறிச்சியார்) சின்னஞ்சிறு கிளியே பாடலை இன்னிக்கி சாதகம் பண்ண வரச் சொல்லியிருக்கிறார். மாதத்தில் முப்பது நாளிலே இருபது நாள் மேடையில இந்தப் பாடலைத்தான் வாசிக்கிறோம். ஆனாலும் அவரது மனசுக்கு இன்னும் திருப்தியாகவில்லை. இன்னும் மெருகு ஏத்தணுமின்னு வரச் சொல்லியிருக்கிறார்” என்று காருகுறிச்சியாரின் துணை நாகஸ்வர வித்துவானாக இருந்த கே.எம். அருணாசலம் சொன்னதாக காருகுறிச்சியாரின் உறவினர் திரு. கலியமூர்த்தி கூறுகிறார்.
காருகுறிச்சியார் நாள் தவறாமல் சாதகம் செய்கிறவர். அடிக்கடி மேடையில் இசைத்திருந்த பாடல் என்றாலும், புதிதாக வாசிப்பதாக இருந்தாலும், மனசு சரி என்று சொல்கிறவரை பல முறை சாதகம் பண்ணிக்கொண்டே இருப்பார்.
காருகுறிச்சியார் ஒரே கீர்த்தனையைப் பல நாட்கள்கூட சாதகம்செய்வார். நாட்கள் ஆகஆக அதன் அழகு கூடிக்கொண்டேயிருக்கும். அதன் நளினம் மனத்தைத் தென்றலென வருடும். பன்னீர் தெளித்தாற்போல காதுகளுக்குக் குளுமையூட்டும்.
அவரது வாசிப்பில் ஒரு துள்ளல், ஒரு வேகம் நாட்டியமாடும். இந்த வேகத்துக்குக் காரணம் அவர் ஆரம்பத்தில் சிறிதுகாலம் நையாண்டி மேளம் வாசித்தபோது அறிந்துகொண்ட சூட்சுமத்தை தன் வாசிப்பில் லாகவமாக இணைத்துக்கொண்டதுதான் என்கிறார்கள்.
ஷெனாய்
தென் மாவட்டங்களில் நலுங்குப் பாடல்கள் பாடுவதில் பிரசித்திப் பெற்ற குருமலை லட்சுமி அம்மாள் மூலமாக விளாத்திகுளம் சுவாமிகளின் அறிமுகம் அருணாசலத்துக்குக் கிட்டியது. சுவாமிகளின் ராக ஆலாபனைகளைக் கேட்டுக் கேட்டு, அதை நாகஸ்வரத்தில் விஸ்தாரமாக வாசித்து தன் இசையை மெருகேற்றிக்கொண்டார். பல நேரங்களில் சுவாமிகள் விசிலில் வாசிப்பதைச் சாதகம் செய்திருக்கிறார்.
ஒரு முறை எழுத்தாளர் கி. ராஜநாராயணனும் விளாத்திகுளம் சுவாமிகளும் காருகுறிச்சியாரின் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார்கள். வீட்டின் உள்ளே காருகுறிச்சியார் சிந்துபைரவியைப் பிழிந்தெடுத்துக்கொண்டிருந்தார். இவர்கள் உள்ளே சென்றால் வாசிப்பை நிறுத்திவிடுவார் என்று வாசலிலே நின்று வாசிப்பை ரசித்துக்கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் வந்த செய்தியை அறிந்த காருகுறிச்சியார், இவர்களை வரவேற்க ஓடோடி வந்தார். வீட்டுக்குள்ளே நுழைந்ததும் வாசிப்பைத் தொடரும்படி, காருகுறிச்சியாருக்கு சைகை செய்தாராம் சுவாமிகள். வாசிக்கத் தொடங்கிய காருகுறிச்சியார் தென்நாட்டு வடிவத்திலிருந்து சிந்துபைரவியை மெல்ல வடநாட்டு வடிவத்திற்கு மாற்றினாராம். அச்சமயம் அந்த வாசிப்பு பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையை அவர்களுக்கு நினைவுபடுத்தியதாம். இன்னும் சிலர் காருகுறிச்சியாரின் வாசிப்பை புல்லாங்குழலுக்கும் சிலர் வீணைக்கும் ஒப்பிடுகின்றனர்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: atcharampublications@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT