Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

ஏப்ரல் 26 - காருகுறிச்சியார் நூற்றாண்டு: ராஜரத்தினத்தின் இரண்டு கண்கள்

தொகுப்பு: நெல்லை மா. கண்ணன்

“நாகசுர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு காருகுறிச்சியார் கோவில்பட்டியில் விழா எடுத்தார். அந்த நிகழ்ச்சியில் கிளாரினெட் வாசிப்பதற்காகக் கலந்துகொண்டேன். அப்போது அண்ணன் அருணாசலம் முகப்பழக்கம்தான். வேறு யாரையும் எனக்குத் தெரியாது.

ராஜரத்தினம் மேடையில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். விழாவுக்குப் பத்தாயிரம் பேர் வந்திருப்பார்கள். அந்த நிகழ்ச்சியில் நாங்கள் வாசிப்பதற்கு முன்பு ராஜரத்தினம் பேசினார். “என்னிடம் 50 அருணாசலம் வந்தார்கள். ஆனால், ஒருவரும் அமையவில்லை. இந்த அருணாசலம் மட்டும்தான் அமைந்தான்” என்று காருகுறிச்சியாரைப் பார்த்துக் கைகாட்டினார். அண்ணன் அருணாசலத்தை மட்டுமே அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் பேசி முடித்ததும், நானும் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனும் வாசித்தோம். அப்போது நாமகிரிப் பேட்டைக்குக் கை நடுங்கியது. இதைக் கவனித்துவிட்டு, என்னைக் கூப்பிட்டு அவர் கை நடுங்குகிறது. நாகசுரத்தை கீழே போட்டு அபசகுணமாகிவிடப் போகிறது. அதனால் நீ வாசி என்றார் ராஜரத்தினம். தயக்கத்துடன் நாமகிரிப்பேட்டையாரிடம் சொன்னேன். ரொம்ப நல்லதாப் போயிற்று. அவர் முன்னால் என்னால் வாசிக்க முடியாது என்றார். ராஜரத்தினம் மேடையில் இருந்ததால் தர்பார் ராகத்தில் வாசித்தேன். அவர் பலே என்றார். அந்த நிகழ்ச்சிதான் என்னையும் அண்ணன் காருகுறிச்சியாரையும் சேர்த்து வைத்தது. அதன் பிறகு நானும் காருகுறிச்சியாரும் நெருக்கமாகி விட்டோம்” என்று நினைவுகூர்கிறார் கிளாரினெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி. நடராஜன்.

“காருகுறிச்சி அருணாசலம் என்னை விட மூத்தவர். நாங்க சகோதரர்களாகப் பிறக்கவில்லை, அவ்வளவுதான். இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே நேரத்தில் சுதியை சரி செய்து பாடுவதைப் போன்று வேறு யாரிடமும் நானோ அவரோ பழகவில்லை. என்னை விட்டு விட்டு அவர் போய்சேர்ந்து விட்டார். அது பெரிய குறை.

1956-ம் ஆண்டு மியுசிக் அகாடமி நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ராஜரத்தினம் திடீரென இறந்து விட்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீ வாசிக்கிறாயா என்று என்னிடம் கேட்டார்கள். மேதையின் இடத்தில் வாசிப்பதற்கு நமக்கு அனுமதி கிடைக்கிறதென்றால், கோடி கொடுத்தாலும் அமையாது. ராஜரத்தினத்தின் மீது உள்ள பக்தியால், நான் ஒப்புக்கொண்டேன்.

தமிழிசைக்கு காருகுறிச்சியார் வாசித்தார். கல்கி, ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் ராஜரத்தினத்தின் படத்தைப் பெரிதாக போட்டு, அவருக்கு கீழே எங்கள் இருவர் படத்தையும் சிறியதாக வைத்து, ராஜரத்தினம் நமக்கு இரு கண்களை விட்டுச்சென்றி ருக்கிறார் என்று எங்கள் இரு வரையும் பற்றி எழுதினார்கள்.

இணையான வாசிப்பு

நாங்கள் இருவரும் சேர்ந்து பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறோம். மதுரை, திருநெல்வேலியில்தாம் எங்களுடைய கச்சேரிகள் அதிகம் நடைபெற்றிருக்கின்றன. அவர் முகூர்த்தத்துக்கு வாசித்தால் நான் கல்யாணத்துக்கு வாசிப்பேன், அவர் கல்யாணத்துக்கு வாசித்தால் நான் முகூர்த்தத்துக்கு வாசிப்பேன். அதற்கு தகுந்தாற்போல் நேரம் ஒதுக்குவார்கள்.

அந்தக் காலத்தில நாங்க இரண்டு பேரும் வாசித்து வாசித்து, என்னை மாதிரி அவரும், அவர் மாதிரி நானும் வாசிப்போம். யார் வாசிக்கிறார்கள் என்று கச்சேரி கேட்கிறவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடும். உன்னுடைய பிடி அவன்கிட்ட இருக்கு, அவன் பிடி உன்கிட்ட இருக்கு. என்ன பண்ணுறீங்க என்று சத்தம் போடுவார்கள். எங்களுக்குத் தெரிந்ததை வாசிக்கி றோம் என்று சொல்லி சமாளிப்பேன்.

சில நேரம் இரண்டு பேரையும் கல்யாண மேடையில் உட்கார வைத்துவிடுவார்கள். அவர் ஒரு கீர்த்தனை, நான் ஒரு கீர்த்தனை வாசிப்போம். சில நேரம் அருணாசலம் வாசித்து முடித்தவுடன் என்னை வாசிக்கச் சொல்லுகையில், “என்னத்த வாசிக்கிறது. நீதான் எல்லாவற்றையும் வாசித்து முடித்துவிட்டாயே” என்பேன். ரசிகர்கள் சிலரும் கேட்பார்கள். “அண்ணன் ரொம்ப நல்லா வாசிச்சிருக்காரு, அந்த ஞானத்தை நீங்க ரசிச்சிருக்கீங்க, அதை நான் கெடுக்க விரும்பவில்லை. இன்னொரு நாள் தனியாக வாசிக்கிறேன்” என்று சொன்னபிறகு விட்டுவிடுவார்கள்.

ஜன்ய ராகங்களை (minors) நாக சுரத்தில் அருணாசலம் வாசிக்கிறதுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுவார். நான் அந்த ராகத்தில் வாசிக்கும்போது அண்ணன் என்னை ஒரக்கண்ணால் பார்த்துச் சிரிப்பார்.

இடையறாத இசை

இயற்கையாகவே அண்ணனுக்கு உதடு அமைப்பு சரியாக இருக்கும். நாயனம் வாசிக்க சீவாளி உதட்டில் உட்கார்ந்தவுடன், காந்தம்போல் ஒட்டிக்கொள்ளும். கொஞ்ச சத்தமும் வெளியில் போகாமல், பிசிறு இல்லாமல் வாசிப்பார். அவர் நாகசுரத்தை வைத்துக்கொள்கிற பாங்கே, பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும். அவர் எந்தச் சுரத்தைத் தொட்டாலும் ஜீவன் பேசுகிற மாதிரிதான் அமைந்தது.

வயலின், வீணைக்குரிய இசையை நாகசுரத்தில் மீட்டுவார். அந்த வாசிப்பு ஷெனாய் வாசிக்கிற மாதிரி, பிஸ்மில்லா கான் வாசிப்பதுபோல் மெல்லினமாக வாசித்து மக்களை மயக்கி உட்காரவைத்துவிடுவார்.

பொதுவாக நாயனத்தில் பிசிறு வரும், ஆனால் பிசிறு இல்லாமல் அண்ணன் வாசிப்பார். மேல் பஞ்சமத்தைத் (ஐந்தாவது சுரம்) தொட்டால்கூட பிசிறு இருக்காது. சட்ஜமத்தில் (முதல் சுரம்) இருந்து மேல் பஞ்சமத்தைப் பிடிக்கும்போது கொஞ்சம்கூட அசைவு இல்லாமல், பிசிறு இல்லாமல், தயக்கமில்லாமல் பஞ்சமத்துக்குப் போய் நிற்கும். அந்த அமைப்பை ஆண்டவன் அவருக்கு கொடுத்திருக்கிறான். அதே மாதிரி ராகங்களை அவர் வாசிக்க வாசிக்க கற்பனை சுரந்துக்கொண்டே இருக்கும். அவர் எட்டு மணி நேரம் வாசித்தாலும், எல்லோரும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒருவர்கூட எழுந்திருக்க மாட்டார்கள். அப்படி ஈர்த்துவிடுவார்.

நான் அண்ணனைப் பார்த்துப் பார்த்து வாசித்து வளர்ந்தவன். அவர் இல்லா விட்டாலும், அவரைப் பற்றி பேசாமல் இருந்த நாள் கிடையாது. அதனால் கிளாரினெட்தான் வாசிக்கிறேன் என்பதே எனக்கு மறந்துவிட்டது. நாயனம் வாசிப்பதாகத்தான் நினைப்பிருக்கும். அதற்கு காரணம் அண்ணன் அருணாசலம் தான்” என்று சொல்லிச் சிரிக்கிறார் ஏ.கே.சி. நடராஜன்.

(‘காருகுறிச்சி அருணாசலம் நாகசுர இசை அபிமானிகள் குழு’வுக்காக ஆர்.ஆர். சீனிவாசன் இயக்கிவரும் காருகுறிச்சி அருணாசலம் குறித்த ஆவணப் படத்துக்காக கிளாரினெட் வித்வான் ஏ.கே.சி. நடராஜன் பேசியதன் எழுத்துவடிவம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x