Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM
சிலப்பதிகாரத்தில் வாத்தீகன் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள தலம் இது. 1300 ஆண்டுகள் பழமையான இந்தப் பாண்டிய நாட்டு ஆலயம் ஜாம்பவான் மகளை கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்ட இடமாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணரின் பேரன் அன்நிருத்தன், உஷையைத் திருமணம் செய்த திருத்தலமும் ஆகும்.
ஆலமரம் ஒன்று திருமாலிடம் தவம் செய்து தன்மீதே திருமால் பள்ளிகொண்டு அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டதாம். இதனால் ஆலமரம் ஆலமலை என பெயர் பெற்றது. கருடாழ்வார் நான்கு திருக்கரங்களுடன் அஞ்சலி வரஹஸ்தராய், மேலிரு கரங்களில் அமிர்த கலசம் தாங்கி, வாசுகி என்ற நாகத்தையும் தாங்கியபடி நின்ற கோலத்தில் அருள்கிறார்.
வேறு எங்கும் இல்லாதபடி மஹாலக்ஷ்மி நின்ற கோலத்தில், “செங்கமலத் தாயார் என்ற திருநாமத்துடன் வலதுகரம் அபயஹஸ்தமாகவும், இடதுகரத்தைத் தொங்கவிட்ட நிலையில் இரு கரங்களோடு காட்சி தருகிறார். ஸ்ரீ நின்ற நாராயணாய பெருமாள் என்ற திருநாமத்துடன் அன்ன நாயகி( ஸ்ரீதேவி), அம்ருத நாயகி (பூமாதேவி), அனந்த நாயகி (நீளா தேவி), ஜாம்பவதி (ஜாம்பவான் மகள்-ஜாம்பவான் இராமாயணத்தில் அனுமனுக்கு அவர் ஆற்றலை எடுத்துச் சொல்லி கடலை கடக்கச் செய்தவர்....) என நான்கு தாயார்களுடன் காட்சி தருகிறார். ஸ்ரீதேவி இங்கு வந்து தங்கி ஆலமலை மீது தவம் செய்ததால் ஆல மலை தங்கால மலை ஆனது. ‘திரு' என்றால் மஹாலக்ஷ்மி அல்லவா? அவர் தங்கி யிருந்த தலமானதால் ‘திருத்தங்கல்' என்று பெயர் பெற்றது. சென்னைக்கு அருகில் திருவள்ளூர் பக்கத்தில் திரு நின்றியூர் என்ற ஊர், திரு நின்ற ஊர் என்றாகி விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT