Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
பேறுபெற்றோர் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார் தெரியுமா? அவரது மலைப்பொழிவின் முக்கியமான பகுதி ஒன்றில் எட்டு வகையான மனிதர்களை பேறுபெற்றோர் என்று இயேசு அழைத்தார்.
'பேறுபெற்றோர்’ என்ற சொல் வேறு சில மொழிபெயர்ப்புகளில் மகிழ்ச்சியுடையவர்கள் என்று மாறிவிடுகிறது. எனவே, பேறுபெற்றோர் என்றால் இறைவனின் அருள் பெற்றோர், ஆசி பெற்றோர், மகிழ்ச்சியோடிருப்பவர்கள், மகிழ்ச்சியின் ரகசியத்தை அறிந்திருப்போர் என்றெல்லாம், நாம் பொருள் கொள்ளலாம்.
இந்த எட்டு வகையில் முதலாவது ஏழைகளின் உள்ளத்தை உடைய வர்கள் என்று இயேசு சொன்னார். “ஏழைகளின் உள்ளம் படைத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.”
ஏழைகளின் உள்ளத்தைப் பெற்றவர் யார்? அவர்கள் வறியோர் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யாரும் வறுமை என்னும் கொடுமைக்கு ஆளாகி வாட வேண்டும் என்று இறைவன் விரும்புவ தில்லை - விரும்பவும் இயலாது.
செல்வந்தர்களுக்குப் புரியாதவை
அன்றாடம் கடுமையாக உழைத்து, தங்களின் அடிப்படைத் தேவைகளை சிரமப்பட்டு நிறைவுசெய்வோராக ஏழைகள் இருக்கின்றனர். இறைவன் தரும் ஒளியில் தங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கும் ஏழைகளுக்கு, செல்வந்தர்களுக்குப் புரியாத பல காரியங்கள் புரிந்துவிடுகின்றன. எனவே, கிடைத்தற்கரிய ஞானம் இவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. இத்தகைய ஏழைகளுக்கு மகிழ்ச்சி எளிதில் வாய்க்கிறது.
ஏழைகள் தங்களின் துயரங்கள் இறைவனுக்குப் புரியும், தங்களின் அழுகுரல் அவருக்குக் கேட்கும் என்று ஆழமாக நம்புகிறார்கள். எனவே, தங்களைக் கைதூக்கிவிட ஏதோ ஒரு விதத்தில், யாரோ ஒருவரின் வடிவத்தில் இறைவன் வருவார் என்கிற உறுதியைச் சார்ந்து வாழ்கிறார்கள்.
இயேசுவின் தாய் மரியாள் மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் கவிதை நயத்தோடு இந்த நம்பிக்கையை இப்படி வெளிப்படுத்தினார், ‘உள்ளத்தில் செருக்குற்றோரை இறைவன் சிதறடிக்கிறார். வலியோரை அரியணையிலிருந்து அகற்றுகிறார். செல்வந்தரை வெறுங்கையராக அனுப்பி விடுகிறார். ஆனால், தாழ்நிலையில் இருப்பவரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார்.’ இந்த நம்பிக்கை இருப்பதால் புயலிலும் இவர்கள் தங்கள் படகைத் துணிவோடு செலுத்துகிறார்கள்.
தாராள மனம் படைத்த ஏழைகள்
இறைவனுக்கும் இவர்களுக்கும் இடையே ஒரு ஆழ்ந்த, அன்பார்ந்த, உணர்வுபூர்வமான பந்தம் இருக்கிறது. எந்தத் தடையும் தயக்கமுமின்றி இவர்கள் தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் இறைவனிடம் கொட்டுவார்கள். அழத் தோன்றினால் தயக்கமின்றி அழுவார்கள். தயங்காமல் கேள்விகள் கேட்பார்கள். உரிமையோடு சில வேளைகளில் கடவுளைக்கூட செல்லமாகக் கடிந்துகொள்வார்கள்.
கடவுளோடு தொடர்புகொண்ட சமயச் சடங்குகள், வழிபாடு, திருவிழாக்களுக்காகத் தாராளமாகச் செலவழிப்பார்கள். ஏழ்மை விதைக்கிற இயலாமைகளை எளிதாகப் புறந்தள்ளிவிட்டு, எதிர்காலக் கவலைகளை ஒதுக்கிவிட்டு இதனைச் செய்வார்கள். இவ்வளவு கொடுத்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள் என்று மற்றவர்கள் கவலைப்படலாம். இவர்களோ கவலை துளியுமின்றி தாராளமாய்த் தருவார்கள்.
ஆலயத்திலிருந்த காணிக்கைப் பெட்டியில் செல்வந்தர்கள் பெருந்தொகையைக் காணிக்கையாகப் போட, ஒரு ஏழை விதவைப் பெண் இரண்டே இரண்டு காசுகளைப் போடுகிறாள். இதைப் பார்த்த இயேசு, “அவளே எல்லாரையும்விட மிகுதியாக காணிக்கை போட்டிருக்கிறாள். காரணம், மற்ற அனைவரும் தங்களிடமிருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை செலுத்தினர். இவரோ தமது பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.
இத்தகைய ஏழைகள் பணிவோடு பேசுவார்கள், நடந்துகொள்வார்கள். செல்வந்தரிடம் காணப்படும் அகந்தையும் ஆணவமும் இவர்களிடம் இருக்காது. பணக்காரர்களின் ஆணவம் பணத்தால் வருவது. தங்களிடமுள்ள பணத்தை வைத்து அனைவரையும், அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏழைகள் கனிவோடு பேசி, பணிவோடு நடந்துகொள்வார்கள்.
இயேசுவின் தாய் மரியாள் தன்னை இறைவனின் அடிமை என்று அழைக்கிறார். இயேசுவின் சொல்லால் நிகழ்ந்த ஒரு அற்புதத்தைப் பார்த்த அவரின் சீடர் பேதுரு, அவருக்கு அருகில் இருக்கத் தனக்குத் தகுதியில்லை என்றெண்ணி, “நான் பாவி. என்னை விட்டுப் போய்விடும்” என்று வேண்டுகிறார்.
நிம்மதியான உறக்கத்துக்குச் சாவி
பணத்தின் ஆற்றலை நம்பும் செல்வந்தர் தங்களிடமுள்ள பணம், சொத்துக்களைப் பெருக்குவதிலேயே கருத்தாய் இருக்கின்றனர். அதற்காகப் பல தவறான, குறுக்குவழிகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு போட்டியாளர்களை வீழ்த்தவும், அப்பாவிகளை ஏமாற்றவும் துணிகின்றனர். ஏழைகளுக்கு இந்த நிர்ப்பந்தம் இல்லை. தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள போதுமானவை கிடைத்தால் போதும் என்று வாழும் இவர்கள், நிம்மதியாக உறங்குகிறார்கள். பஞ்சணையில் படுத்துப் புரண்டாலும் தூக்கம் வராமல் பல செல்வந்தர்கள் வாட, இவர்கள் ஓலைக் குடிசைகளிலும் மரத்தடியிலும் வயல் வரப்புகளிலும் நிம்மதியாய்த் தூங்குகிறார்கள்.
இப்படி வாழ எல்லோரும் முயலலாம். ஏழைகளின் உள்ளத் தோடு வாழ ஏழைகளாய் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. மாறாத இறைநம்பிக்கையும், உணர்வுபூர்வமான பக்தியும், ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் கொண்ட ஏழைகளுக்குக் கிடைக்கும் இந்த ஞானம் யாருக்குக் கிடைத்தாலும் அவர்கள் அனைவரும் ஏழைகளின் உள்ளத்தவர்தாம்.
இவ்வுலகில் மகிழ்ச்சியும் நிறைவும், மறுஉலகில் முடிவில்லாத வாழ்வும் கிடைப்பதால், இவர்களே பேறுபெற்றோர்! ஏழைகளின் உள்ளம் நமக்கும் வாய்த்து, நாமும் பேறுபெற்றோர் ஆக முடியுமா?
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT