Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
நாகசுரம் வாசிப்பில் இளம் சூறாவளியாக இசைத் துறையில் வலம்வருபவர் மயிலை கார்த்திகேயன். தனது தந்தையும் நாகசுர வித்வானுமான மயிலை எஸ்.மோகன்ராஜே இவருக்கு முதல் குரு. அதன்பின் மயிலை ராஜேந்திரனிடமும் நாகசுரம் பயின்ற கார்த்திகேயன், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வியாசர்பாடி கோதண்டராமனிடம் இசையின் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார். இப்போதும் அவரிடமே தொடர்ந்து இசை நுணுக்கங்களை கற்று வருகிறார். மயிலை கார்த்திகேயனுக்கு சிறந்த நாகசுர கலைஞருக்கான அமரர் கல்கி நினைவு அறக்கட்டளை விருது குடியரசு தினத்தன்று மயிலை ராகசுதா அரங்கில் வழங்கப்பட்டது விருதினை வழங்கி கார்த்திகேயனை மனம் திறந்து பாராட்டினார் கர்னாடக இசைப் பாடகி எஸ்.சௌம்யா.
கர்னாடக இசை மேதை யான எஸ்.ராமநாதனின் சீடரான எஸ்.சௌம்யா, அவருடைய குருநாதர் நாகசுர பாணியில் பாடுவதில் இருக்கும் நுணுக்கங்களை எல்லாம் பல கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்று நேரடியாகப் புரியவைத்ததை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து மயிலை கார்த்திகேயன் குழுவினரின் நாகசுர கச்சேரியும் நடந்தது.
சம்பிரதாயமாக கம்பீர நாட்டையில் மல்லாரி வாசித்துமுடித்த கையோடு, ஆனை வைத்தியநாத அய்யரின் பாடல், முத்துசுவாமி தீட்சிதரின் ராமம், பிரகதீஸ்வரோ, கமலாம்பாம், சியாமா சாஸ்திரியின் பார்வதி நின்னு, தியாகராஜ சுவாமியின் குருலேகா எடுவன்டி, குமரகுருபரா என்னும் அருணகிரிநாதரின் திருப்புகழ், பாரதியாரின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே, கல்கியின் வண்டாடும் சோலைதனிலே ஆகிய பாடல்களை மயிலை கார்த்திகேயன் நாகசுரத்தில் வாசித்து நாட்டுப் பற்றோடு பக்தியையும் இசையின்வழியாகவே பரப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT