Last Updated : 04 Feb, 2021 03:13 AM

 

Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM

81 ரத்தினங்கள் 62: அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிக்கு அருகே கூரம் என்னும் கிராமத்தில் தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் கூரத்தாழ்வான் அவதரித்தார். இவரது இயற்பெயர் வத்ச்சிஹ்னர்.

இவர் ராமாநுஜரிடத்தில் அதிகமான ஆச்சாரிய பக்தி கொண்டு சிஷ்யராக வாழ்ந்து வந்தார். அப்போது ஆண்டுவந்த சோழ மன்னன் சிவபக்தன். அந்தப் பின்னணியில் அவன் தொடர்ந்து வைணவர்க ளுக்குத் தொல்லை கொடுத்து வந்தான். இந்தக் காரியங்களுக்கு முடிவு வர வேண்டுமென்பதற்காக அரச சபையிலிருந்த வைணவரான நூலாரான் என்பவர் ஒரு தந்திரம் செய்தார். ‘சிவாத் பாதரம் நாஸ்தி’ என்று ஓலையில் எழுதச் செய்து வைணவ மதாசாரியர்களை அழைத்துக் கையொப்பமிடச் செய்ய வேண்டுமென்று அரசனுக்கு யோசனை கூறினார். ‘சிவாத் பாதரம் நாஸ்தி’ என்றால் சிவனைத் தவிர வேறு உயர்ந்த தெய்வம் இல்லை என்று பொருள்.

ராமாநுஜர் அரசவைக்கு அழைக்கப் பட்டார். கூரத்தாழ்வான், ராமாநுஜர் போலே திரிதண்டம் ஏந்தி காவி உடையணிந்து அரண்மனை சென்றார். நாராயணனே உயர்ந்தவன் என்று அவர் வாதிட்டார். கோபமடைந்த அரசர் அவரின் கண்களைப் பிடுங்கும்படி ஆணையிடுகிறான். உம்மைக் கண்ட என் கண்கள் இனி எனக்கு வேண்டாம் என்று அவரே பிடுங்கி எறிந்தார்.

பின்னர் ஒருசமயம், கூரத்தாழ்வான் ரங்கநாதனை வணங்க திருவரங்கத்துக்கு வந்தபோது, ராமாநுஜர் சம்பந்தமுடையவர் என்பதால் கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். அங்கிருந்தவா்கள் கூரத்தாழ்வானின் மதிநுட்பம், கருணையின் ஆழம் இவற்றையெல்லாம் எடுத்துக் கூறி இறைவனை சேவிக்க அனுமதியளிக்க வாயில்காப்போனிடம் கோரினார்கள். ஆனால் கூரத்தாழ்வாரோ, “ராமாநுஜவிரும்பி” நான் என்று சொல்லி, எனக்கு அதுவே போதும், ஆச்சாரிய பக்தி தான் முக்கியம் என்று கோவிலுக்குள் செல்ல மறுத்துவிட்டார். ஆண்டவன் அருள் வழங்கத் தயங்கும்போதும், எனது ஆச்சாரியரின் அருள் என்னை காக்கும் எனக் கூறி. அவன் (நம்பெருமான்) வேண்டாம் என இறைவனைச் சேவிக்காமல் திரும்பிவிடுகிறார்.

கூரத்தாழ்வானைப் போலே ஆச்சாரிய பக்தி எனக்கில்லையே என தன் பக்தியின்மையை நினைத்து அரற்றுகிறாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x