Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
“இறைவா! வருங்காலத்தைப் பற்றிய) கவலையி லிருந்தும் (நடந்து விட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலி லிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன்”
(அனஸ் இப்னு மாலிக் (ரழி). நூல்: ஸஹீஹூல் புகாரி—2893, 5425.)
கடன் வாங்குவதற்கான சூழலை ஏற்படுத்தும் காரணிகளைச் சுட்டிக்காட்டி அவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதோடு கடனுடன் வரும் அவலங்களைக் குறித்து எச்சரித்து, அவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருவதையும் சேர்த்தே இந்த துஆ வழங்குகின்றது.
“உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” எனக் கடனை நல்ல முறையில் திருப்பிச் செலுத்துவதை நபிகள் ஊக்குவிக்கிறார். கடனாளிக்கு ஏற்படும் மன உளைச்சலை யாரிடமும் பங்கு வைக்க இயலாது நெஞ்சுக்குழிக்குள் மாட்டிக் கொண்ட நெருப்புருண்டைபோல் கடன் தொல்லை உறுத்தும்போது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பின்வரும் பிரார்த்தனையை கற்றுத்தருகின்றார்கள்.
இறைவனால் தடுக்கப்பட்டவை, நமக்கு உரிமையல்லாத பொருள்கள் ஆகியவற்றை நாம் விரும்புவதையும் அவற்றைக்கொண்டு நம் தேவைகளை நாம் நிறைவு செய்வதையும் இந்தப் பிரார்த்தனை தடுக்கிறது.
“யார் மக்களின் பொருளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி கடன் வாங்கு கின்றாரோ, அவர் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான்.
யார் அதை அழித்துவிட வேண்டும் என்று எண்ணிக் (ஏமாற்றி) கடன் வாங்குகின்றாரோ, அதை அல்லாஹ் அழித்தேவிடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கடனை உண்டாக்கும் காரணி களை அடையாளங்காட்டி விழிப்படையச் செய்தல், வாங்கிய கடனை நேர்மையாக திருப்பிச்செலுத்துவதற்கான கட்டாயத்தை அறிவிலும் மனத்திலும் உண்டுபண்ணுதல், கடனாளிகளிடம் இரக்கத்துடனும் விட்டுக் கொடுப்புடனும் நடப்பதன் வழியாக மீளவே முடியாத மண்ணறை வாழ்வின் நெருக்கடியிலி ருந்து கடன் கொடுத்தவர் விடுவிக்கப் பெறுதல் என ஓர் அழகான ஒத்திசைவு சங்கிலியை நபிகளார் நடைமுறைப் படுத்திக் காட்டுகின்றார்.
கடனாளியையும், கடன் கொடுத்தவரையும் பாதுகாத்தல், தற்சார்பு வாழ்க்கை, நேர்மை, இழிவிலிருந்து பாதுகாப்பு, இரக்கம், சலுகை, தனிநபர் பொறுப்பு, மக்கள் நலன் அரசின் பொறுப்பு என இவையனைத்தையும் இறை நம்பிக்கை என்பதன் வாயிலாக சாதித்துவிடுகிறது இஸ்லாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT