Last Updated : 31 Dec, 2020 03:18 AM

1  

Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

இயேசுவின் உருவகக் கதைகள் 22: விண்ணகத் தந்தை உணவு அளிக்கிறார்

தன் பதினெட்டாம் வயதிலேயே பைபிளை படிக்கத் தொடங்கி இருந்த மகாத்மா காந்தி “மலைப் பொழிவு நேரே என் இதயத்துக்குள் சென்றது” என்றார்.

அது என்ன மலைப் பொழிவு? ஒருமுறை இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு, கூட்டத்தில் இருந்த அனைவரும் தன்னைப் பார்த்து, தான் சொல்வதைக் கேட்பதற்கு வசதியாக ஒரு மலை மீது அமர்ந்து சில முக்கியமான காரியங்களைக் கற்பித்தார். இப்படி அவர் மலை மீது அமர்ந்து கற்பித்ததைத்தான் ‘மலைப் பொழிவு’ என்கின்றனர்.

அதன் ஒரு பகுதி வானகப் பறவைகளையும் கானக மலர்ச் செடிகளையும் எடுத்துக்காட்டாகக் காட்டி அவர் கற்பித்த ஒன்று. “வானத்துப் பறவைகளை நோக்குங்கள்”, “காட்டு மலர்ச் செடிகளைக் கவனியுங்கள்”, என்று இயேசு சொன்னது ஏன்?

பறவைகளையும் செடிகளையும் பராமரிக்கும் இறைவன், உங்களை மறந்து விடுவாரா? எனவே, கவலைப்படாதீர்கள். எதற்கும் கவலை கொள்ளாதீர்கள் என்று சொல்லத்தான்.

நாங்கள் கவலைப்படக் கூடாது என்றால், கவலை ஏன் தேவையற்றது என்பதற்கான காரணத்தைச் சொல்லுங்கள் என்றுதான் நமக்குக் கேடகத் தோன்றும். இயேசு சொல்லும் காரணங்கள்:

“கடவுள் உங்கள் மீது பேரன்பு கொண்டிருக்கிறார். எனவே, உங்கள் தேவையை அவர் அறிவார். உங்கள் தேவைகள் நிறைவேற அவர் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்” என்கிறார்.

ஏழை என் மீதும் இறைவனுக்கு அக்கறை இருக்கிறதா என்று யாராவது கேட்டால், இயேசு என்ன சொல்வார்? வானகப் பறவைகளையும் கானக மலர்களையும் எடுத்துக்காட்டாகக் காட்டி அவர் சொல்வதென்ன? “வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனால், விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்.”

இறைவனுக்கு ஏற்புடையவராக ஆகுங்கள்

இறைவனுக்கு ஏற்புடையவராக, அவரின் மனத்துக்கு உகந்தவர்களாக நாம் இருந்தால், நமது மற்ற தேவைகள் எல்லாம் நிறைவேறக் கடவுள் உதவுவார் என்கிறார் இயேசு.

பலரின் கவலைகள் இன்றைய கவலைகள் அல்ல. அவை நாளையைப் பற்றிய கவலைகள். எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள். ஜார்ஜ் மெக்டானல்ட் என்ற அறிஞர், “இன்றைய சுமைகள் யாரையும் மூழ்கடிப்பதில்லை. இன்றைய சுமைகளுடன் நாளைய சுமைகளையும் யார் தலையில் தூக்கி வைத்துக்கொள்கிறார்களோ, அவர்களே கவலைக் கடலில் மூழ்கிவிடுகின்றனர்” என்றார். எனவேதான், “நாளைக்காக கவலைப்படாதீர்கள். நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்” என்று இயேசு சொன்னார்.

இறுதியாக இயேசு சொல்லும் காரணத்தை எவரும் மறுக்க இயலாது. “கவலைப்படுவதால் உங்களுக்கு கிடைப்பதென்ன? கவலைப்பட்டு எதையாவது சாதிக்க முடியுமா? கவலைப்படுவதால் உங்கள் உயரத்தில் ஒரு முழம் நீட்ட முடியுமா? உங்கள் ஆயுளில் ஒரு நாளைக் கூட்ட முடியுமா?” என்று கேட்டார் இயேசு.

கடவுளை நம்புவோர் கவலையில் மூழ்குவதில் உள்ள முரண் என்ன? கவலையில் மூழ்குவது, ‘என் மீது கடவுளுக்குப் போதிய அக்கறை இல்லை’ என்று சொல்வதற்குச் சமம் தானே? அவரை நம்புவோர் எப்படி இவ்வாறு சொல்ல முடியும்?

கிறிஸ்தவத்தின் இருபெரும் தூண்களில் ஒருவராகக் கருதப்படுகிற புனித பவுல், கிரேக்க நாட்டில் ஃபிலிப்பி எனும் நகரில் வாழ்ந்த மக்களுக்கு எழுதிய மடலில் இப்படிச் சொன்னார். “எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டின் வழியாக கடவுளிடம் உங்களது விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்போது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி உங்கள் உள்ளத்தைப் பாதுகாக்கும்.”

புதியதொரு ஆண்டு பிறக்கும் வேளையில் எத்துணை பொருத்தமான அறிவுரை இது! எதைப் பற்றியும் கவலைப்படாமல், பெற்ற நன்மைகளுக்காக முதலில் நன்றி கூறி, அதன்பிறகு நம்பிக்கையோடு நமது விண்ணப்பங்களைத் தெரிவித்து வேண்டுதல் செய்வோம். மானிடர் யாவரையும் கடந்த ஆண்டில் அலைக்கழித்து அச்சுறுத்திய அனைத்தினின்றும் பிறக்கும் புத்தாண்டில் விடுதலை கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திப்போம்.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x