Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM
‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே...' என்றதுமே பக்தி மணம் கமழும் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் மீதான சுப்ரபாதமும் அதைப் பாவபூர்வமாக வழங்கிய ‘இசை அரசி' எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தெய்விகக் குரலும்தான் நம் நினைவுக்கு வரும். மணவாள மாமுனி அவர்களின் சீடர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வடமொழியில் எழுதிய ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் உலகப் பிரசித்திபெற்றது.
இந்த சுப்ரபாதத்தின் தமிழ் வடிவமும் புகழ்பெற்றது. “வந்துதித்தாய் ராமா நீ கோசலைதன் திருமகனாம்” என்று தொடங்கும் இந்தத் தமிழ் சுப்ரபாதம், தன்னுடைய தாய் கேட்பதற்காக ஒரு தனயனால் உருவாக்கப்பட்டது!
பட்டு நெசவுக்குப் புகழ்பெற்ற ஆரணி அருகேயுள்ளது முனுகப்பட்டு கிராமம். இந்த ஊரில் எஸ்.ஆர். ஜனார்த்தனம் – கண்ணம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த பார்த்தசாரதிதான் அந்தத் தனயர். திருப்பனந்தாள் தமிழ் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்ற இவர், நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.
1985-ம் ஆண்டு பார்த்தசாரதியின் குடும்பத்தினர் திருப்பதி தரிசனம் முடித்துத் திரும்பியிருந்தனர். வீட்டில் சதா சர்வ காலமும் எதையாவது எழுதிக்கொண்டே இருந்த மகன் பார்த்தசாரதியைப் பார்த்து, வேங்கடேசுவர சுப்ரபாதத்தை தமிழில் எழுதும்படி வேண்டுகோள் விடுத்தார் அவரின் அன்னை கண்ணம்மாள்.
தமிழ்ப் பேராசிரியராக பார்த்தசாரதி திருத்தணி கலைக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த தருணம் அது. சீக்கிரமே மரணம் நெருங்குவதை உணர்ந்ததால், தாமதிக்காமல் தமிழ் சுப்ரபாதத்தை எழுதி முடிக்கும்படி மீண்டும் மகனை வலியுறுத்தினார் கண்ணம்மாள்.
அன்னைக்காக அரங்கேறிய சுப்ரபாதம்
தன்னுடன் கல்லூரியில் பணிபுரியும் ஞானக்கூத்தன் என்பவருக்கு சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை இருந்த காரணத்தால், அவரின் உதவியோடு சுப்ரபாதத்தில் உள்ள முதல் பகுதியான திருப்பள்ளி எழுச்சியில் இருக்கும் 29 பாக்களையும் தமிழில் மொழிபெயர்த்து அன்னையிடம் மூன்றே நாள்களில் வாசித்துக் காண்பித்தார்.
சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதத்தில் 1986-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி வைகுண்ட பதவி அடைந்தார் கண்ணம்மாள். அன்னை யின் இறுதிச் சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் இரவு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வேங்கடேச சுப்ரபாதம் அன்னையின் நினைவாக அரங்கேற்றப்பட்டது.
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.எஸ்.!
1987-ம் ஆண்டு ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் என்னும் திருவேங்கடத்தான் திருப்பள்ளியெழுச்சி புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு தமிழ் சுப்ரபாதப் புத்தகத்தின் ஒரு பிரதியை எடுத்துக்கொண்டு சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி தம்பதியைப் பார்த்து, தமிழ் மொழிபெயர்ப்பை படித்து மட்டும் பார்க்கும்படி வேண்டுகோள் விடுத்துச் சென்றார். அதைப் படித்துப் பார்த்த சதாசிவம், தமிழ் மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமாக இருந்ததாகவும், எம்.எஸ். அவர்களே இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பையும் பாடி ஒலிப்பதிவு செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதாகவும் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஒரு சில திருத்தங்களுடன் திருவேங்டமுடையான் திருப்பள்ளியெழுச்சி எம்.எஸ்.ஸின் குரல் வடிவில் தயாரானது. ஒலிப்பதிவுக்கு முன்பாக உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள முழு தமிழ் சுப்ரபாதத்தையும் பார்த்தசாரதி முன்னிலை யில் பாடிக் காணபித்தாராம் இசை அரசி.
முதன்முதலாக செய்யப்பட்ட ஒலிப்பதிவு கேசட்டின் முதல் பக்கத்தில் சுப்ரபாதம் இடம்பெற்றது. எம்.எஸ்.ஸின் குரலோடு ராதா விஸ்வநாதனின் குரலும் இணைய, ஆர்.கே. ஸ்ரீராம்குமார் வயலினும், கே.வி. பிரசாத் மிருதங்கத்திலும் பக்தத்துணையாக சிறப்பித்தனர். 1992-ம் ஆண்டு சென்னை நாரத கான சபாவில் திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் ச. பார்த்த சாரதி 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் இறைவன் திருவடிகளை அடைந்தார்.
தொடர்புக்கு: srikamakshi.sankara@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT