Last Updated : 26 Nov, 2020 03:17 AM

1  

Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

இயேசுவின் உருவகக் கதைகள் 19: விளக்குகள் எரிய…

மணவிழா தொடர்பான கதை ஒன்றைச் சொன்னார் இயேசு. அப்படியானால் கதையின் முடிவு மகிழ்ச்சியான ஒன்றாகத்தானே இருந்திருக்கும். ஆனால், இந்தக் கதையின் முடிவு சோகமானது.

மண்ணுலகில் மனித உருவில் இயேசு பிறந்தது அவரின் முதல் வருகை என்றால், உலகின் முடிவில் நல்லவருக்கு நிலைவாழ்வும், தீயவருக்குத் தண்டனையும் வழங்க, நடுவராக மாட்சியோடு அவர் மீண்டும் வருவதை அவரது இரண்டாம் வருகை என்கின்றனர். அப்படி அவர் வந்தபோது, நிகழக்கூடிய ஒன்றைச் சுட்டிக்காட்டவே இயேசு இந்தக் கதையைச் சொன்னார்.

கதையைப் புரிந்துகொள்ள இயேசுவின் காலத்தில் மண விழாக்கள் நடந்த விதத்தை நாம் தெரிந்து கொண்டாக வேண்டியது அவசியம். அக்காலத்தில் மணவிழாக்கள் பெரும்பாலும் இரவிலேயே நடைபெற்றன. மணமகன் வரும் வேளையில், மணமகளும் அவளின் தோழியரும் அவளது வீட்டிலிருந்து மணமகனை வரவேற்கச் செல்வார்கள். அவர் வந்ததும், அவரை வரவேற்று, ஆடிப்பாடிக்கொண்டே அனைவரும் ஊர்வலமாகத் திருமண மண்டபத்திற்குச் செல்வார்கள். இரவு என்பதால், மணமகளின் தோழியர் விளக்கேந்தி வருவார்கள்.

எண்ணெய்யுடன் செல்லுங்கள்

‘மணமகளின் தோழியர் பத்து பேர், மணமகனை வரவேற்க விளக்குகளோடு புறப்பட்டனர்’ என்று கதையைத் தொடங்குகிறார் இயேசு. இந்த பத்துத் தோழியரில், ஐவர் புத்திக்கூர்மையுடைய வர்கள்.

புத்திக்கூர்மை கொண்ட ஐந்து பெண்கள், விளக்கு களோடு எண்ணெய்யையும் எடுத்துச் செல்ல, மற்ற ஐவரும் விளக்குகளை எடுத்துக்கொண்டு எண்ணெய்யை மறந்து விட்டனர். ஏதோ காரணத்தால் மணமகன் வரத் தாமதமாக, காத்திருந்த அனைவரும் தூங்கிவிட்டனர். நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். வாருங்கள், அவரை வரவேற்க!’ என்ற குரல் கேட்டதும் அனைவரும் எழுந்து வேகவேகமாக தங்கள் விளக்குகளை ஏற்றித் தயார்செய்தனர்.

முன்யோசனை இல்லாத தோழிகள் ஐவரும் எண்ணெய் இல்லாததால் விளக்குகள் அணைவதைப் பார்த்துவிட்டு, மற்ற ஐவரிடம் எண்ணெய்யைக் கடனாக கேட்டனர். “நாங்கள் கொடுத்தால் எங்கள் விளக்குகளும் அணைந்துவிடும். எனவே, வணிகரிடம் போய் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றனர். அந்த ஐவரும் இரவு வேளையில் வணிகரைத் தேடிச் சென்றபின், மணமகன் வந்தார். எண்ணெய் வைத்திருந்த தோழியர் மணமகனோடு ஊர்வலம் போய், திருமண மண்டபத்திற்குள் சென்ற பிறகு கதவு அடைக்கப்பட்டது.

எண்ணெய் வாங்கச் சென்ற தோழியர், அதன்பின்னர் வந்து, கதவைத் திறக்குமாறு மணமகனிடம் கெஞ்சினார்கள். ஆனால், தாமதமானதால் கதவு திறக்கப்பட வில்லை என்பதோடு சோகமாகக் கதை முடிகிறது.

கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “எனவே, விழிப்பாயிருங்கள். ஏனெனில், அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது” என்றார் இயேசு.

‘அவர்’ என்று இயேசு தன்னையே குறிப்பிட்டுக்கொண்டார் என்றே, அவரது சீடர்களும் அவரைப் பின்பற்றுவோரும் நம்புகின்றனர்.

இறந்த பின்னர் மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்து, பலமுறை தன் சீடர்களுக்குத் தோன்றி, தான் அறிவித்த நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு விண்ணேறியபின், மீண்டும் நடுவராக மாட்சியோடு வருவார் என்றே இயேசுவின் சீடர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களது காலத்தில் அது நிகழவில்லை. அதன்பிறகு, ‘இந்த ஆண்டு வருவார்,’ ‘இந்த நாளில் வருவார்’ என்று சொன்ன நபர்கள் பலர். ஆனால், அவர்களுக்கும் அவர்களை நம்பியோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இறைத்தந்தை மட்டுமே அறிவார்

இயேசு தெளிவாகச் சொன்ன ஒன்றை இவர்கள் மறந்ததால்தான் இந்த ஏமாற்றமும் குழப்பமும். இறைமகன் மாட்சியோடு வரும் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்பதை இறைத்தந்தை மட்டுமே அறிவார். வேறு யாரும் அதை அறிந்திட இயலாது. அது தனக்கே தெரியாது என்றார் இயேசு.

இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்று தெரியாத நிலையில், கதையில் நிகழும் மணமகனின் வருகை, ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து முடிந்து, இறக்கும் போது இறைவனைச் சந்திப்பதைக் குறிக்கலாம் என்ற கருத்து உருவானது.

தனிமனிதர்களின் வாழ்வு முடியும் போதோ, உலகமே முடியும் போதோ நமது வாழ்வு கணிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். விழிப்பாய் இருந்து, தீமையைத் தவிர்த்து, நல்லவராய் வாழ முயன்றால், நம் விளக்குகள் இருளில் அணைந்துவிடாமல் சுடர்விட்டு எரியும். நன்மை என்னும் அந்த எண்ணெயை முன்னேற்பாடாக வைத்திருந்தால் மட்டுமே இறைவன் எப்பொழுது வந்தாலும், அவரோடு போய் விண்ணக விருந்தில் நாம் கலந்துகொள்வதற்கு வழிகிடைக்கும்.

(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x