Last Updated : 15 Oct, 2020 09:01 AM

 

Published : 15 Oct 2020 09:01 AM
Last Updated : 15 Oct 2020 09:01 AM

81 ரத்தினங்கள் 53: இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே

கண்ணன் வளா்ந்து பலவித குறும்புகளைச் செய்து கோபிகைகளின் பலவிதமான வசைகளுக்கு ஆளாகிவந்தான். ஒருநாள், யசோதை கண்ணனைத் தண்டிக்கும் முனைப்புடன் தேடிக்கொண்டிருந்தாள். ஒளிந்துகொள்வதற்காக ஓடிய கண்ணன், தயிர் வியாபாரம் செய்யும் ததிபாண்டனின் வீட்டில் ஒரு பெரிய தயிர்ப் பானைக்குள் ஒளிந்துகொண்டான். ததிபாண்டனிடம் கெஞ்சிக் கூத்தாடி, என் அம்மா யசோதை வந்தால் நான் இங்கில்லை என்று கூறும்படி தயிர் பானைக்குள் ஒளிந்துகொண்டான். யசோதை தேடிவந்தபோது, கண்ணன் இங்கில்லையே என கண்ணன் ஒளிந்திருக்கும் பானை மீது ததிபாண்டன் அமா்ந்துகொண்டான்.

எங்கும் நிறைந்த பரப்பிரம்மத்தைப் பானைக்குள் இட்டு, அதற்கு மூடியாக தானே ஏறி அமா்ந்து மறைத்தான் ததிபாண்டன். யசோதை சென்றுவிட்டதும் “ததிபாண்டா எழுந்திரு, நான் வெளியே வரவேண்டும்” என்று சிறுவன் கண்ணன் கோரினான். “கண்ணா நீ எல்லோருக்கும் மோட்சம் அளிப்பாய் என்று கூறுகிறார்களே! எனக்கு மோட்சம் கொடுப்பதாக வாக்கு கொடு! உன்னை விடுகிறேன்” என்றான். உனக்கு மோட்சம் அளிக்கிறேன் என கண்ணன் உறுதியளித்தான். ததிபாண்டனோ தனது தயிர்பானைகளுக்கும் மோட்சம் கொடுக்குமாறும் தன்னுடன் இந்தத் தயிர்ப் பானைகளும் சேர்ந்து துன்பப்படுவதாக விண்ணப்பித்தான்.

நம் மக்கள், எப்போதும் தாம் செய்யும் தொழிலுக்கு உதவும் கருவிகளை தமது உடலாகவும் உயிராகவும் நினைப்பார்கள். அப்படியே ததிபாண்டனும் கேட்டான். சரி, எல்லோர்க்கும் மோட்சம் அளிப்பதாக வாக்களித்த பிறகு ததிபாண்டன் உட்கார்ந்திருந்த தயிர்ப் பானையிலிருந்து எழுந்து கண்ணனை விடுவித்தான். துவாபர யுகத்தில் கண்ணன் எனும் பரப்பிரம்மம் மானுட சமூகத்துடன் சேர்ந்து பிறந்து, வளா்ந்து மானுட வாழ்வில் சந்திக்கும் அனைத்து இன்ப துன்பங்களையும் அனுபவித்து, அனைவரையும் நல்வழிப்படுத்தினார். அப்பரப்பிரம்மத்தை இங்கில்லை எனச் சொன்ன ததிபாண்டனைப் போல். நான் துவாபர யுகத்தில் பிறக்கவில்லையே எனப் பெரிதும் வருத்தப்பட்டாள் நம் திருக்கோளுா் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x