Published : 10 Sep 2020 10:54 AM
Last Updated : 10 Sep 2020 10:54 AM
இலங்கையை விட்டு வீடணன் ஆகாய மார்க்கமாக இக்கரைக்கு வந்து ராமனிடம் சரணாகதி அடைந்த கதை நமக்குத் தெரியும்.
ராமாயணத்தில் அரக்கனான ராவணனின் உடன்பிறந்தவரான வீடணன், ராவணனின் செய்கையைக் கண்டித்து சீதையை ஸ்ரீராமனிடம் ஒப்படைக்கச் சொல்லி நல்வழி காட்டினார். ஆனால், அதைக் கேட்காமல் நல்லபுத்தி சொன்ன தம்பியை உதைத்துக் கீழே தள்ளி, அரண்மனையைவிட்டு வெளியேற ராவணன் ஆணை பிறப்பித்தார்.
ராமாயணத்தில் வீடணனின் சரணாகதி மிகச்சிறப்பான பகுதி. ராமனின் திருக்குணங்களை அறியும் இடமும் அது.
அனுமன், சுக்ரீவன் உட்பட்ட அனைவரும் வீடணன், ராமனுடன் சேர்வதற்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கிறார்கள். ஆனால், ராமரோ வீடணனுடன் ராவணனும் மன்னிப்பை நாடிவந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறார். அதன் அடிப்படையில் அரக்க குல அரசன் வீடணனோடு சேர்ந்து எழுவராகி அவனையும் உடன்பிறந்தவனாக ராமர் ஏற்றுக்கொண்டார்.
யுத்தத்தில் ராவணன் மாண்ட பிறகு இறுதிச் சடங்கு செய்ய மறுக்கும் வீடணனைப் பார்த்து, நீ செய்ய மறுத்தால் நான் செய்வேன் என்று ராமன் கூறுகிறார். அதன் பிறகே, தனது அண்ணனுக்கு இறுதிக் காரியம் செய்து இலங்கையில் பட்டாபிஷேகமும் செய்துகொண்டார் வீடணன்.
அரக்கா் குலத்தில் பிறந்தாலும் வீடணன் அத்தனை நற்பேறுகளைப் பெற்றிருந்தார். அவரைப் போல் நான் இறைவனிடம் சரணாகதி அடையவில்லையே என்று ராமானுஜரிடத்தில் வருந்துகிறாள் நமது திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT