Published : 02 Jul 2020 09:12 AM
Last Updated : 02 Jul 2020 09:12 AM
உஷாதேவி
மதுராவில், மாலாக்காரர் என்பவர் பூமாலை கட்டி விற்கும் தொழிலைச் செய்து வந்தார். தாமரை, பாரிஜாதம், மல்லிகை, துளசி, அலரி ஆகியவற்றை எல்லாம் ஒன்றுசேர்த்து வைஜெயந்தி மாலை கட்டுவார்.
திருமால், வைஜெயந்தி மாலைக்கு மயங்கியவர். மாலாக்காரர் எந்த மாலை கட்டினாலும் ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று சொல்லிக்கொண்டே தொடுப்பார். ஒவ்வொரு நாளும், கிருஷ்ணா உன்னை எப்பொழுது காண்பேனோ, ஒரு நாள் உனக்கு மாலை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டே மாலை கட்டிக்கொண்டிருந்தார்.
தான் தொடுக்கும் பூக்களில் குச்சி, பூச்சி என ஏதும் கலக்காமல் பார்த்துப் பார்த்துக் கட்டுவார்.
கிருஷ்ணரும் பலராமரும் மதுரா வரும்போது ஒருநாள், மாலாக்காரர் வசிக்கும் தெருவில் நுழையும்போதே பூ வாசம் அவர்களை மயக்கி ஈர்த்தது. மாலாக்காரருக்கு மற்றொரு பெயர் சுதாமா. கிருஷ்ணர், மாலாக்காரர் வீட்டு வாசலில் வந்து நின்று, ‘சுதாமா’ என அழைத்தார். வெளியே வந்து பார்த்த மாலாக்காரர் பூரித்துப்போய், ‘வரவேண்டும் வரவேண்டும்’ என்று வரவேற்றார்.
நந்தகுமாரரின் மகனும், மதுராவின் இளவரசனுமான கிருஷ்ணனைப் பார்க்கக் கூட்டம் கூடி, அவனைக் காண முடியாத அளவுக்குக் கெடுபிடி அதிகமாக இருந்தது. தன் வீட்டுப் படியேறி கிருஷ்ணன் வந்த இன்பத்தை சுதாமாவால் தாங்கவே முடியவில்லை. சுதாமா என்ற மாலாக்காரரின் வீடு முழுக்க இருக்கிற மலர் மாலைகளைப் பார்த்துப் பார்த்து ரசித்தார் கிருஷ்ணர்.
மாலாக்காரர் தன் கையால் கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் அனைத்து மாலைகளையும் எடுத்துச் சூட்டி மகிழ்ந்தார். நீ வியாபாரம் செய்ய வைத்திருந்த மாலைகளை இப்படிச் சூட்டுகிறாயே உனக்கு என்ன தருவேன் என்று நினைத்த கிருஷ்ணர், மாலாக்காரருக்கு இகபர சுகம் கொடுத்து மோட்சகதியும் அளித்தார்.
நம் கர்மாக்களையும் மாலையாக இப்படித்தான் கடவுளுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். மாலாக்காரர் மாலை கட்டும் போது முகத்தில் துணியைக் கட்டிக் கொள்வார். அவரின் மூச்சுக்காற்று வாசத்தை நுகர்ந்துவிடக் கூடாது. அதனால் மாலைக்கு மாசு வருமோ என்று நினைத்துப் பொறுப்புடன் செய்தார்.
இப்பிறவியில் ஒரு பச்சிலையைக்கூட இறைவனுக்குப் படைக்கவில்லை நான், பிறவி எடுத்து என்ன பயன்? என்று கூறி மனவாட்டம் அடைந்தாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT